Saturday, April 14, 2018

யோக சூத்திரம் - 2.42 - திருப்தியும் மன மகிழ்வும்

யோக சூத்திரம் - 2.42 - திருப்தியும் மன மகிழ்வும் 


संतोषातनुत्तमस्सुखलाभः ॥४२॥

saṁtoṣāt-anuttamas-sukhalābhaḥ ॥42॥

saṁtoṣāt = திருப்தியில்

anuttamas = மிகச் சிறந்த

sukha = சுகம், சந்தோஷம், மகிழ்ச்சி

lābhaḥ = கிடைக்கிறது, அடையலாம்  ॥42॥

மன திருப்தியின் மூலம் மிகச் சிறந்த மகிழ்ச்சியை அடையலாம். 

அது தான் தெரியுமே, சாமியாராகப் போய் விடு, எதற்கும் ஆசைப் படாதே, என்று எல்லோரும் சொல்லுவதைத்தானே பதஞ்சலியும் சொல்கிறார். அது எங்களுக்குத் தெரியும். அடுத்த சூத்திரத்துக்குப் போகலாம் என்று என்று நீங்கள் அவசரப் படுவதற்கு முன்....ஓரிரு வார்த்தைகள். 

திருப்தி என்றால் ஏதோ இருப்பதை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுவது என்று அர்த்தம் அல்ல. ஏதேதோ வேண்டும், இருந்தாலும், ஆசைப் படுவது தவறு என்று சொல்லப் பட்டதால், ஆசைகளை அடக்கிக் கொண்டு, அதே சமயம் அந்த ஆசைகள் நிறைவேறாததால் மனதில் ஒரு துக்கத்தையும் ஏந்திக் கொண்டு அலைவது அல்ல. 

அதில் என்ன மகிழ்ச்சி இருக்கும் ?  சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லி விட்டு போன  நரி மாதிரி ஆகி விடக் கூடாது. 

திருப்தி என்றால், இருப்பதில் மகிழ்ச்சி. எனக்கு இது எல்லாம் கிடைத்திருக்கிறது. அதில் மகிழ்ச்சி கொள்வது. 

நாம் என்றாவது நம்மிடம் இருப்பதற்காக மகிழ்ச்சி அடைந்திருக்கிறோமா ?  இந்த உடம்பு, இந்த மூளை, இந்த நாடு, இந்த மொழி, குடும்பம், பிள்ளைகள், கணவன்,மனைவி, நட்பு, உறவு, என்று ஆயிரம் விஷயம் இருக்கிறது மகிழ்ச்சி கொள்ள. ஒரு நாளைக்கு ஒன்று என்று வைத்துக் கொண்டாலும் அத்தனை நாள் இருக்கிறது கொண்டாட. ஒரு வாழ் நாள் போதாது கொண்டாடி முடிய. 

நாம் கொண்டாடுவது இல்லை. 

இருப்பதில் மகிழ்ச்சி இல்லாவிட்டால், இல்லாத ஒன்று நாளை கிடைத்து விட்டால் மட்டும்  மகிழ்ச்சி வந்து விடுமா ? 

உங்களிடம் இன்று இருக்கும் பல விஷயங்கள் , ஒரு காலத்தில் நீங்கள் "அது மட்டும்  கிடைத்து விட்டால் அப்புறம் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்று நினைத்து ஏங்கியவை தான். இப்போது அவை கிடைத்து விட்டன . எங்கே மகிழ்ச்சி ?

இன்று இன்னொரு பட்டியல் இருக்கிறது. 

இந்த சிக்கலில் இருந்து விடுபட்டால், அந்த விஷயம் நடந்து விட்டால் என்று எப்போதும்  ஒரு பட்டியல் இருந்து கொண்டே இருக்கிறது. 

இவை அனைத்தும் நடந்தாலும் மகிழ்ச்சி வரப்போவது இல்லை. 

ஏன் என்றால், மகிழ்ச்சி என்பது வெளியே இல்லை. 

இருப்பது போதும் என்று சுணங்கி இருப்பது அல்ல திருப்தி. இருப்பதை கொண்டாடுவது  திருப்தி. 

கொஞ்சம் மெலிந்தால் நல்லா இருக்கும், கொஞ்சம் எடை போட்டால் நல்லா இருக்கும், கொஞ்சம் சிவப்பாக இருந்தால் நல்லா இருக்கும், இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்தால் நல்லா இருக்கும்,  பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் படித்தால்  மகிழ்ச்சியாக இருக்கும் என்று இருப்பதை எல்லாம் நீங்கள்  புறம் தள்ளி விடுகிறீர்கள். 

இருப்பது எதுவுமே சரி இல்லை என்று மறுதலிக்கிறீர்கள். எந்நேரம் பார்த்தாலும் ஏதாவது ஒரு குறை. 

என்ன நடந்தாலும் சரி, இன்று மகிழ்ச்சியாக இருக்கப் போவது இல்லை என்று வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது நடந்தால், அப்போது மகிழ்ச்சியாக இருப்பேன் என்று  சொல்லும் போது உங்கள் மகிழ்ச்சி என்றோ ஒரு நாள், எதிர் காலத்தில் இருக்கிறது. இன்று , இப்போது மகிழ்ச்சியாக இருக்கப் போவது  இல்லை என்று முடிவுடன் இருக்கிறீர்கள். 

அதை மாற்ற வேண்டும். 

அது வரும் போது வரட்டும். அல்லது வரமாலேயே போகட்டும். 

இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன் என்று முடிவு எடுங்கள். எனக்கு எவ்வளவோ இருக்கிறது  சந்தோஷப்பட. அவற்றைக் கொண்டு நான் இன்று  சந்தோஷமாக இருப்பேன் என்று முடிவு எடுங்கள். 

அது தான் திருப்தி என்று சொல்லுவது. 

எது நடந்தாலும், எது கிடைத்தாலும் அதில் மகிழ்ச்சி கொள்ளுவது. 

வாழ்க்கையை தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள். 

கல்யாணம் பண்ணினால் சந்தோஷமாக இருப்பேன் 

பிள்ளை பிறந்தால் சந்தோஷமாக இருப்பேன். 

பிள்ளைகள் நல்லா படித்தால் சந்தோஷமாக இருப்பேன் 

அதுகளுக்கு ஒரு நல்ல வேலை   கிடைத்தால் ...

அதுகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்து விட்டால் 

அதுகளுக்கு ஒரு பிள்ளை பிறந்து விட்டால்  

என்று வாழ்க்கையை தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள். 

இன்று வாழுங்கள். இது தான் வாழ்க்கை என்று கொண்டாடுங்கள். 

கிடைத்த ஒவ்வொன்றிற்கும் நன்றி சொல்லுங்கள். 

மற்றவர்கள் வாழ்க்கையோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிடாதீர்கள். பல  சிக்கல்களுக்கு  அது தான் காரணம். 

இந்த கணத்தில் இருந்து வாழத் தொடங்குங்கள். எல்லாவற்றிற்கும் சந்தோஷப் படுங்கள். 

No comments:

Post a Comment