Friday, April 20, 2018

யோக சூத்திரம் - 2.43 - சுய ஒழுக்கம் - பாகம் 2

யோக சூத்திரம் - 2.43 - சுய ஒழுக்கம் - பாகம் 2



कायेन्द्रियसिद्धिरशुद्धिक्षयात् तपसः ॥४३॥

kāyendriya-siddhir-aśuddhi-kṣayāt tapasaḥ ॥43॥

kāyendriya = காயம் + இந்திரியம். காயம் என்றால் உடம்பு. காயமே இது பொய்யடா என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா ? உடம்பும் புலன்களும்

siddhir = சித்தி

aśuddhi = களங்கங்களை

kṣayāt = விலக்கிய பின்

tapasaḥ = தவத்தின் மூலம் ॥43॥

உடலும் மனமும் அவற்றில் உள்ள அழுக்குகளை தவத்தின் மூலம் நீக்கிய பின், சித்தி அடையும். 

தவறான உணவு பழக்க வழக்கத்தால் எப்படி உடல் மாசு படுகிறது என்று பார்த்தோம். மேலும் ஒரு வகையில் உடம்பு மாசு படுகிறது என்ற இடத்தில் முந்தைய blog முடிந்தது. 

அது என்ன இன்னொரு வழி ?

நம் மனதில் ஏற்படும் அழுந்தங்களால் உடல் மாசு படுகிறது. 

உதாரணமாக, 

கவலை அதிகமானால் சரியாக சாப்பிடத் தோன்றாது. அப்படியே சாப்பிட்டாலும், சரியாக  செரிமானம் ஆகாது. 

கோபம், காமம், பொறாமை போன்றவை ஏற்படும் போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

பல விதமான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் உடலிலேயே தங்கி விடுகின்றன.  ஏன் என்றால்,நம்மால் நம் உணர்வுகளை சரி வர வெளிப் படுத்த முடிவதில்லை. 

மேலதிகாரியின் மேல் கோபம். என்ன செய்ய முடியும் ?

கணவன் மேல் கோபம் - என்ன செய்து விட முடியும்?

அரசாங்கத்தின் மேல் கோபம் - ஒன்றும் செய்ய முடியாது. 

அது போல பொறாமை. "ஐயோ அவனுக்கு கிடைத்து விட்டதே " என்ற பொறாமை , தூங்க விடாது, நிம்மதியாக இருக்க விடாது. அதற்காக, அவனுக்கு கிடைத்ததை தட்டி பறிக்கவா முடியும்? 

இப்படி நம்முள் எழும் பல உணர்ச்சிகளுக்கு வடிகால் இல்லை. உணர்ச்சிகளை கட்டுப் படுத்தும் அல்லது  அவற்றை சமாளிக்க உதவும் ஹார்மோன்கள் தங்கள் வேலையை செய்கின்றன. ஆனால், உணர்ச்சிகளை வெளிக் காட்ட முடியாமல், அந்த ஹார்மோன்கள் செய்வது அறியாது உடலிலேயே தங்கி விடுகின்றன. 

சரி, அதற்கு என்ன செய்வது ?

முதலில் இந்த உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்து விடு பட வேண்டும். அதற்காக உணர்ச்சியற்ற சடப் பொருளாக இருக்க வேண்டும் என்று அல்ல அர்த்தம். 

உணர்ச்சிகளின் மூலத்தை அறிய வேண்டும். அவை எங்கிருந்து பிறக்கின்றன. எப்படி வளர்கின்றன என்று அறிய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அவற்றின் பிடியில் இருந்து  விடுபட வேண்டும். 

உணர்ச்சிகள் நம் மனதை மட்டும் அல்ல, உடலையும் மாசு படுத்துகின்றன என்று அறிய வேண்டும். உணர்வுகளை சம நிலைப் படுத்த வேண்டும். 

அப்போது மனம் மட்டும் அல்ல , உடலும் தூய்மை அடையும். 

அப்போது சிந்தி அடையலாம். 

நிதானமாக யோசித்துப் பாருங்கள்..

உங்கள் உணவு பழக்கங்கள், உங்கள் உணர்வு பழக்கங்களை...அவை இரண்டையும் சரி செய்தால்  உடலும் மனமும் சரியாகும். 

சித்தி கிடைக்கிறதோ இல்லையோ, ஆரோக்கியமான மனமும் உடலும் கிடைக்கும் அல்லவா?

http://yogasutrasimplified.blogspot.in/2018/04/243-2.html

No comments:

Post a Comment