Friday, April 27, 2018

யோக சூத்திரம் - 2.46 - ஸ்திரம் சுகம் ஆசனம்

யோக சூத்திரம் - 2.46 - ஸ்திரம் சுகம் ஆசனம் 




स्थिरसुखमासनम् ॥४६॥

sthira-sukham-āsanam ॥46॥

sthira = ஸ்திரம் - உறுதியாக

sukham = சுகம்

āsanam  =ஆசனம் ॥46॥

அஷ்டாங்க யோகத்தின் முதல் இரண்டு படிகளை பார்த்தோம் - இயமம், நியமம்.

மூன்றாவது அங்கம் - ஆசனம்.

ஆசனம் என்றால் என்ன?


ஆசனத்தைப் பற்றி இரண்டே வார்த்தைகளில் கூறுகிறார்.


உடலை வளைத்து, நெளித்து, வயிறை உள்ளே இழுத்து, காலை மடக்கி தலையை தொடுவது எல்லாம் ஆசனம் கிடையாது. 

பதஞ்சலி இரண்டே இரண்டு கூறுகளைக் கூறுகிறார்.

ஸ்திரம் - சுகம். அது தான் ஆசனம். 

அப்படினா என்ன?

நீங்கள் உங்கள் உடலின் போக்கை நன்றாக கவனித்துப் பாருங்கள். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மேல்  உங்களால் ஒரு நிலையில் இருக்க முடியாது. சும்மா உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தால் கூட, உடல் நெளியும். காலைத் தூக்கி மேலே வைப்பீர்கள். அப்புறம் மடித்து வைப்பீர்கள். எழுந்து நடப்பீர்கள்.  ஏதாவது செய்து கொண்டே இருப்பீர்கள். 

ஒரு இடத்தில் உடல் நிலையாக இருக்காது. 

"அப்படி ஒன்றும் இல்லையே. நான் நினைத்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஒரு நிலையில் என்னால் இருக்க முடியுமே" என்று சொல்வீர்களானால், யோசித்துப் பாருங்கள், அது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று. 

சுகமாக இருக்குமா ? ஒரே நிலையில் ஒரு அரை மணி நேரம் அசையாமல் இருந்தால்  சுகமாக இருக்குமா ? இருக்காது. 

உறுதியாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் சுகமாகவும் இருக்க வேண்டும். 

ஏன் என்றால்...மனம் உடலைத் தொடரும். உடல் அலைந்து கொண்டே இருந்தால் மனமும் அலையும். உடல் நின்றால் மனம் நிற்குமா என்றால் இல்லை. ஆனால், மனதை ஒரு முகப் படுத்த வேண்டும் என்றால் முதலில் உடலை சமன் செய்ய வேண்டும். 

உடம்பு அலையாமல் இருக்க வேண்டும். அதே சமயம் உடலை கஷ்டப் படுத்தவும் கூடாது. 

உடம்பு எப்போது உறுதியாகவும் சுகமாகவும் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

நிதானமாக சாப்பிட்டு, தேவையான அளவு உடல் உழைப்பு செய்து, வேண்டிய அளவு அதற்கு ஓய்வு கொடுத்தால் அது உறுதியாகவும் சுகமாகவும் இருக்கும். 

எது சுகமாக இல்லையோ அது ஆசனம் இல்லை. காலை மடக்கி பத்மாசனம் போட்டால் வலிக்கிறதா. அப்படி என்றால் உங்களுக்கு அது ஆசனம் அல்ல. மற்றவர்களுக்கு அது ஆசனமாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு அது ஆசனம் அல்ல. 

எந்நேரமும் படுத்து தூங்குவதுதான் சுகமாக இருக்கிறது. அது ஒரு ஆசனமா என்றால், அது உங்களுக்கு ஸ்திர நிலையைத் தருகிறதா ? தராது. தொந்தியும் தொப்பையும் பெருத்து ஒரு நிலை இல்லாமல் அலைய வேண்டி வரும். 

எனவே உடல் உறுதியாகவும் இருக்க வேண்டும். சுகமாகவும் இருக்க வேண்டும். 

உடலை எப்படி சுகமாக இருக்க வைப்பது ?

அடுத்த சூத்திரத்தில் சொல்கிறார். 

நாளை அதைப் பார்ப்போமா?

http://yogasutrasimplified.blogspot.in/2018/04/246.html

No comments:

Post a Comment