யோக சூத்திரம் - 2.41 - உடல் பற்றிய சிந்தனை
सत्त्वशुद्धिः सौमनस्यैकाग्र्येन्द्रियजयाअत्मदर्शन योग्यत्वानि च ॥४१॥
sattva-śuddhiḥ saumanasya-ikāgry-endriyajaya-ātmadarśana yogyatvāni ca ॥41॥
sattva = தெளிவு, தூய்மை
śuddhiḥ = சுத்தம்
saumanasya = மகிழ்ச்சி,
ikāgry = ஏகாக்ரிய = ஒருமித்த சிந்தனை
endriyajaya = இந்திரிய ஜெய = புலன்களை வெல்லுதல்
ātmadarśana = தன்னை அறிதல்
yogyatvāni = யோகி அடைவான்
ca = மேலும்
மனத் தெளிவு பிறக்கும் போது, மனதில் ஒரு துள்ளலான மகிழ்ச்சியும், ஒருமித்த மன நிலையும் (concentration ), புலன்களை வெற்றி கொள்ளுதலும் நிகழும்.
முந்தைய சூத்திரத்தில் நமக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி சிந்தித்தோம்.
ஒன்று உடலை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். அல்லது, இந்த உடல் சரி இல்லை என்று அதை சரிப்படுத்த ஏதேதோ செய்கிறோம். நமது உடலை நாமே ஏற்றுக் கொள்ளாத போது , அதை மற்றவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் ? மற்றவர்களை நம்மை வெறுத்து விடுவார்களோ என்று பயப் படுகிறோம். இந்த உடலை மேலும் மெருகு ஏற்ற பாடு படுகிறோம்.
அது ஒரு புறம் இருக்க, நம் உடலை நாம் சரி இல்லை என்று வெறுத்து ஒதுக்கும் போது, இன்னொரு உடலைத் தேடுகிறோம். அதன் பெயர் காதல், அன்பு என்று நாமே சொல்லிக் கொள்கிறோம். உண்மையில் அது ஒரு உடல் சார்ந்த தேவை. அவ்வளவுதான்.
இப்படி உடலுக்கும் மனதுக்கும் ஒரு இடை விடாத போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.
தினமும் ஒரே விதமான உணவை உண்டால், உடம்புக்கு நல்லது. ஆனால், மனம் சலிப்புறும். என்ன , தினமும் ஒரே வகை உணவுதானா என்று.
தினம் தினம் புதுப் புது உணவாக உண்டால், மனம் மகிழ்ச்சி அடையும், உடம்பு ஏற்றுக் கொள்ளாது. வயிற்றுக் கோளாறு வரும்.
இந்த உடம்பு, மனம் இதற்கு இடையில் நடக்கும் போராட்டம் மிகப் பெரிய போராட்டம். பெரும்பாலான சமயம் இதை நாம் அறிவது இல்லை.
எத்தனை விளம்பரப் படங்கள், அழகு சாதனப் பொருள்கள், உடைகள் , அலங்காரங்கள், காதல், ஆண் பெண் உறவு பற்றி எவ்வளவு கதைகள், சினிமா...எல்லாம் இந்த உடல் மற்றும் மனம் பற்றிய சிக்கலின் வெளிப்பாடு.
இந்த சிக்கலைத் தாண்டிச் செல்ல வேண்டும்.
யோகி, இந்த உடலைத் தாண்டிச் செல்கிறான்.
தன் உடம்பை மட்டும் அல்ல, இன்னொரு உடம்பின் தேவையையும் தாண்டிச் செல்கிறான்.
தனிமை அவனுக்குச் சுகம்.
தனிமை கண்டதுண்டம்மா , அதில் சாரம் இருக்குதம்மா என்பான் பாரதி.
உலகிலேயே மிக இனிமையானது என்று ஒளவையாரை கேட்டபோது , அவள் சொன்னாள் ,இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று.
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே!
இந்த உடலைத் தாண்டிச் செல்லும் போது, மனத் தெளிவு பிறக்கிறது.அதன் மூலம் துள்ளலான ஒரு மகிழ்ச்சியும், புலன் அடக்கமும், தன்னை அறிதலும் நிகழும்.
நாம், இந்த உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது மாறினால் தான் , உண்மையில் நாம் யார் என்று அறிய முடியும். நாம், உடலிலேயே கட்டுண்டு கிடக்கிறோம். ஒன்று நம் உடல் அல்லது பிற உடல்.
நீங்கள் உன்னிப்ப்பாக கவனித்துப் பார்த்தால் தெரியும், மகிழ்ச்சியாக இருக்கும் போது உடல் பற்றிய சிந்தனை இருக்காது.
தலைவலி வந்தால்தான் தலை பற்றிய சிந்தனை வருகிறது. இல்லை என்றால் தலையைப் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?
வயிற்று வலி வந்தால், அனைத்து சிந்தனையும் வயிற்றின் மேலேயே இருக்கும்.
வயிற்று வலி இல்லை என்றால் , வயிற்றைப் பற்றி சிந்திப்போமா?
வலி வந்தால் உடல் பற்றிய சிந்தனை என்று அர்த்தம்.
மாத்தி யோசிப்போம். உடல் பற்றிய சிந்தனை இல்லை என்றால் வலி இல்லை என்று அர்த்தம்.
உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளவை.
பெரும்பாலான மனக் குழப்பங்களுக்கு காரணம் உடல் தான்.
தசரத இராஜாவின் முன்னோர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் விதேகன். வி என்றால் இல்லை என்று அர்த்தம்.
நாயகன் = தலைவன்.
தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் வி-நாயகன்.
விதேகம் என்றால் உடம்பு இல்லாதவன் என்று அர்த்தம் அல்ல, உடம்பு பற்றிய சிந்தனை இல்லாதவன். உடலைக் கடந்து சென்றவன். தான் என்பது இந்த உடல் அல்ல என்று அறிந்தவன்.
உடலைத் தாண்டி செல்லும் போது புலன்களை வெற்றி கொள்வது தானே நிகழும்.
புலன்களை வென்றால் நாம் யார் என்று அறிவோம். Self Realization என்று சொல்லுவார்களே அது நிகழும்.
உடம்புகளோடு உள்ள தொடர்பு பற்றி சிந்தியுங்கள். பல உண்மைகள் புலப்படும்.
http://yogasutrasimplified.blogspot.in/2018/04/241.html
No comments:
Post a Comment