Tuesday, April 24, 2018

யோக சூத்திரம் - 2.45 - சரணாகதி

யோக சூத்திரம் - 2.45 - சரணாகதி 



समाधि सिद्धिःईश्वरप्रणिधानात् ॥४५॥

samādhi siddhiḥ-īśvarapraṇidhānāt ॥45॥


samādhi = சமாதி நிலை

siddhiḥ = சித்திக்கும்

īśvara = ஓர் உயரிய சக்தியிடம்

praṇidhānāt  =  = சரண் அடையும் போது  ॥45॥

ஈஸ்வர சக்தியிடம் சரண் அடையும் போது, சமாதி நிலை சித்திக்கும். அல்லது சமாதி நிலையம், புலன்களுக்கு அற்புத சித்தியும் கிடைக்கும். 

ஆஹா...சமாதி அடைய எளிய வழி கிடைத்து விட்டது. சித்தி அடைய சுலபமான வழி கிடைத்து விட்டது. சரணாகதி அடைந்தால் போதும். எல்லாம் அடைந்து விடலாம். இதோ இப்போதே சரணாகதி அடைந்து விடுகிறேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டு விடலாமே.

சரணாகதி அடைவதில் என்ன சிக்கல். சண்டை போடுவதில் தான் சிக்கல். சரண் அடைவதில் என்ன சிக்கல்.

சண்டை போடுவதை விட பெரிய சிக்கல்.

எதற்காக சரண் அடைவது? சமாதி அடைய, சித்தி பெற. எங்கே ஆசை இருக்கிறதோ, அங்கே சரணாகதி இல்லை. நான் சரண் அடைகிறேன், எனக்கு அதைக் கொடு என்றால்  அது வியாபாரம்.

எப்போது எதிர்பார்ப்பு இருக்கிறதோ , அப்போது அது ஒரு வர்த்தகம் தான்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சரண் அடைய முடியுமா ?

ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்பார் திருமூலர்.  இறைவனை அடைய வேண்டும் என்பதும் ஒரு ஆசை தானே. உள்ளதுக்கெல்லாம் பெரிய ஆசை இறைவனை அடைய வேண்டும் என்று நினைப்பது தான். பேராசை. ஆசையை தவிர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே  உலகில் உள்ள மிகப் பெரிய ஒன்றுக்கு ஆசைப் படுவது எப்படி  சரியாகும் ?

மிகப் பெரிய ஆசை, மிகப் பெரிய துன்பத்தில் தான் போய் முடியும்.

இரண்டாவது, சரண் அடைவது என்றால், எல்லாம் நீ பார்த்துக் கொள் என்று சோம்பேறியாக  இருப்பது அல்ல. கிடைத்தவற்றை பிரசாதமாக ஏற்றுக் கொள்வது.

வாழ்க்கை எதைத் தருகிறதோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்வது.

அது வேண்டும், இது வேண்டாம் என்று சண்டை பிடிப்பது
கூடாது.
யோசித்துப் பாருங்கள், நமக்கு கிடைத்த ஏதாவது  ஒன்றை நாம் முழுமையாய்  ஏற்றுக் கொண்டிருக்கிறோமா ?

மற்றவற்றை விடுங்கள்.  நம்மை நாம் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு இருக்கிறோமா ?

நமது மூக்கு சரி இல்லை, பல் வரிசை சரி இல்லை, உயரம் பத்தாது, முடி  கொடுக்கிறது,  உடல் பருமன் அதிகமாக இருக்குறது, அதிக உயரம், கலர் கொஞ்சம்  கம்மி, அறிவு பத்தாது, தொப்பை அதிகமாக இருக்கிறது, என்று நம்மை பற்றி  நமக்கு எவ்வளவு எதிர் எண்ணங்கள் இருக்கிறது.

நம்மையே நம்மால் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாமா மற்றவர்களை  ஏற்றுக் கொள்ளப் போகிறோம் ? அப்புறம் இந்த உலகில் உள்ள  பொருள்கள், நிகழ்வுகள்.

சதா சர்வ காலமும் ஏதோ ஒரு குறையுடனேயே சுத்திக் கொண்டிருக்கிறோம்.

எவ்வளவு பணம் வந்தாலும், எவ்வளவு வசதி வந்தாலும், எவ்வளவு நல்லது நடந்தாலும்  இன்னும் கொஞ்சம் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும், அது சரி இல்லை, இது சரி இல்லை என்று குறை பட்டுக் கொண்டே இருக்கிறோம்.

அப்படி குறை படுவதால் என்ன ஆகிறது ?

நமது மூளை அந்த குறையின் மேலேயே சதா சர்வ காலமும் தன் சக்தியை செலவிடுகிறது.

அதனால் நமது உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன.

நாம் சந்தோஷமாக இருக்கும் போது சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவை நாம்  ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன.

நாம் கவலையோடு, பயத்தோடு இருக்கும் போது சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவை நம்மை பலவீனப் படுத்துகின்றன.

வாழ் நாள் பூராவும்  கவலை, பயம், என்று இருந்தால் உடல் என்ன ஆகும்.

மனமும் உடலும் நைந்து போகும்.

நமக்கு வாழ்க்கையில் கிடைத்தவை எல்லாம் நல்லவையே என்று அவற்றை  எடுத்துக் கொண்டால்  மனமும் உடலும் மிக மிக ஆரோக்கியமாக இருக்கும். புலன்கள் புது சக்தியைப் பெரும்.

அது சித்தி பெற வழி வகுக்கும்.

சித்தி என்பது நீண்ட தூரம் போன பின் கிடைப்பது.

அதன் முதல் படி, வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை இரசிப்பது. இனிமையாக வாழ்வது. குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருக்காமல், எல்லாம் இனிதே என்று இருப்பது.

நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும், இந்த உலகையும் அப்படியே ஏற்றுக் கொள்வது.

யோசித்துப் பாருங்கள். எவ்வளவு ஆனந்தம் என்று.

இன்னும் எழுதலாம். நீங்களே உங்கள் மனக் கண்ணில் நினைத்துப் பாருங்கள்.

எதிர் நீச்சல் போடாதீர்கள். வாழ்க்கையோடு ஒன்றிப் போங்கள் . மிக மிக சுகமாக இருக்கும்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/04/245.html




No comments:

Post a Comment