யோக சூத்திரம் - 2.43 - சுய ஒழுக்கம்
कायेन्द्रियसिद्धिरशुद्धिक्षयात् तपसः ॥४३॥
kāyendriya-siddhir-aśuddhi-kṣayāt tapasaḥ ॥43॥
kāyendriya = காயம் + இந்திரியம். காயம் என்றால் உடம்பு. காயமே இது பொய்யடா என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா ? உடம்பும் புலன்களும்
siddhir = சித்தி
aśuddhi = களங்கங்களை
kṣayāt = விலக்கிய பின்
tapasaḥ = தவத்தின் மூலம் ॥43॥
இந்த சூத்திரத்தில் பல விஷயங்கள் அடங்கி இருக்கின்றன.
பொறுமையாக ஒவ்வொன்றாக பார்ப்போம்.
சித்தி அடையும் = சித்தி என்றால் மிகுந்த சக்தியை பெறுவது. அஷ்டமா சித்திகள் என்று சொல்லுவார்கள். அமானுஷ்யமான சக்திகளை பெறுவது. உடலை விட்டு வெளியில் செல்வது, சாதாரண கண்ணுக்குத் தெரியாதவற்றை காண்பது, போன்ற சக்திகள். இந்த சக்திகள் நமது புலன்களுக்கு கிடைக்கும். எப்போது என்றால்
உடலிலும் மனத்திலும் உள்ள களங்கங்களை களைந்த பின்.
உடலில் நாம் பல விதங்களில் களங்கங்களை சேர்த்து வைக்கிறோம். அளவுக்கு அதிகமாக உண்பது. தேவை இல்லாதவற்றை உண்பது. புகை, மது, காப்பி, டீ போன்றவற்றை இடை விடாமல் ஒரு நாளில் பல தடவை உட்கொள்வது. காலையில எழுந்தவுடன் ஒரு காப்பி குடிக்காட்டி எனக்கு வேலையே ஓடாது ...என்று பலர் சொல்லக் கேட்டு இருக்கிறோம். இது போன்ற நஞ்சுகளை கொஞ்சம் கொஞ்சமாக நம் உடம்புக்குள்ளே நாமே ஏற்றிக் கொண்டிருக்கிறோம். மாமிச உணவு, pizzaa , burger என்று நாவுக்கு அடிமையாகி ,உடம்புக்கு ஒவ்வாதவற்றை திணிக்கிறோம்.
நம் உடம்பு முடிந்த வரை இவற்றில் உள்ள நஞ்சுகளை பிரித்து வெளியேற்றும். வெளியேறாத நஞ்சு உடலிலேயே தங்கி விடும்.
ஏன் முழுவதுமாக வெளியேற்றுவது இல்லை ? அதற்கு கால அவகாசம் வேண்டும். அது முதலில் சாப்பிட்ட நஞ்சை வெளியேற்றிக் கொண்டு இருக்கும் போதே அடுத்த டம்ளர் காப்பியை உள்ளே தள்ளுகிறோம். அது சரியாவதற்குள் ஒரு சமோசா, கொஞ்சம் நூடுல்ஸ், என்று இடை விடாமல் எதையாவது உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கிறோம்.
வீட்டில் பெண்மணிகள் தரையை தண்ணீர் தெளித்து சுத்தம் செய்வார்கள். அப்போது குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும். "...டேய் கொஞ்ச நேரம் ஒரு இடத்துல இருடா...தரை காயட்டும் " என்பார்கள். காய்வதற்குள் அழுக்கு காலை வைத்தால் அந்த அழுக்கு ஆழமாக படியும்.
அது போல, உடம்பு முன் உண்ட உணவில் உள்ள வேண்டாதவற்றை நீக்கும் போது , மேலும் உண்டால், உடம்பு பழைய உணவில் உள்ள நஞ்சை விட்டு விட்டு புது உணவை கவனிக்க போய் விடும். அப்போது , வெளியேற்றப் படாமல் உள்ள நஞ்சு உடலிலேயே தங்கி விடும்.
அதை நீக்க ஒரே வழி, பட்டினி கிடப்பதுதான். விரதம் , உபவாசம் என்று சொன்னார்கள். விரதம் இருப்பது சொர்கம் போக அல்ல, உடம்புக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க.
அன்னிக்கு விரதம் இருந்தால், நேரே சுவர்க்கம், இன்னிக்கு விரதம் இருந்தால் வைகுண்டம்/கைலாயம், இன்னும் சில நாள் விரதம் இருந்தால் கணவனின் ஆயுள் கூடும் என்றெல்லாம் சொல்லி வைத்தது உடலின் கூறுகளை அறிந்து கொள்ள முடியாதவர்களுக்காக.
இப்படி தவறான உணவு பழக்கத்தால் உடலில் அசுத்தம் ஏறிக் கொண்டே போகிறது.
அது மட்டும் அல்ல, இன்னும் ஒரு முக்கியமான வழியில் உடலில் அசுத்தம் ஏறுகிறது .
அது என்ன என்று நாளை பார்ப்போமா ?
http://yogasutrasimplified.blogspot.in/2018/04/243.html
No comments:
Post a Comment