Wednesday, April 4, 2018

யோக சூத்திரம் - 2.40 - உடம்போடு உள்ள தொடர்பு

யோக சூத்திரம் - 2.40 - உடம்போடு உள்ள தொடர்பு 


शौचात् स्वाङ्गजुगुप्सा परैरसंसर्गः ॥४०॥

śaucāt svāṅga-jugupsā parairasaṁsargaḥ ॥40॥

śaucāt = தூய்மை

svāṅga = தங்கள் உடம்போடு

jugupsā = தூர நின்று, விலகி நின்று,

paraira = மற்றவர்களிடம் இருந்து

asaṁsargaḥ = தொடர்பு இன்றி ॥40॥

தங்கள் உடம்போடும், மற்றவர்கள் உடம்போடும் சேராமல் தள்ளி நிற்பார்கள். 

மற்றவர்கள் உடம்பில் இருந்து தள்ளி நிற்கலாம். அது முடியும். நம் உடம்பை விட்டு நாம் எப்படி தள்ளி நிற்க முடியும் ?

நமக்கு  நம் உடம்போடு உள்ள தொடர்பு எப்படி பட்டது ?

சிலருக்கு தங்கள் உடம்பை ரொம்ப பிடிக்கும். "நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்" என்று பெருமிதம் கொள்வார்கள். ஆண்களாக இருந்தால், கண்ணாடி முன் நின்று கையை முறுக்கி "ஹா எப்படி என் தசைகள், 6 பேக் வயிறு " எண்ணி மகிழ்வார்கள். 

சிலருக்கு தங்கள் உடம்பை கண்டாலே பிடிக்காது. முடியை வெட்டுவார்கள்,  டை அடிப்பார்கள்,  பவுடர் பூசுவார்கள், கண் மை , உதட்டுச் சாயம்,  என்று ஏதாவது   செய்து பார்க்க சகிக்கும்படி முயற்சி செய்வார்கள். 

"என்ன செய்தாலும் இந்த தொப்பை குறைய மாட்டேன் என்கிறது" என்று நடையாய் நடப்பார்கள். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அல்ல. வயிறு சுருங்கி  பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று. 

எந்நேரம் பார்த்தாலும்  உடம்பு பற்றிய கவலை. சிலர் அறுவை சிகிச்சை கூட செய்து  கொள்கிறார்கள். வெட்டி, ஒட்டி, ஏதாவது செய்து அழகாக இருக்க வேண்டும்  என்று முயற்சி செய்கிறார்கள். 


சிலருக்கு ஏதாவது  உபாதை இருக்கும். இது மட்டும் இல்லை என்றால், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று அந்த வியாதியைப் பற்றி சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். 


இன்னும் சிலருக்கு வயதாகிறதே என்ற கவலை.  நரை வரும். தோல் சுருங்கும்.  நினைவு தவறும். அது பற்றிய கவலை. 

பெண்களுக்கு வயதானால், கணவன் தங்கள் மேல் அன்பு காட்ட மாட்டார்களோ என்ற கவலை வரும். 

இப்படி , நம் உடல் நம்ம அலைக்கழிக்கும். நமது சிந்தனையை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும். 

யோகிகள், தங்கள் உடலைப் பற்றி கவலைப் படமாட்டார்கள். அது வேறு எவருடைய உடலோ என்று தள்ளி நின்று பார்ப்பார்கள். 

அதற்காக உடலை கவனிக்காமல் விட்டு விட மாட்டார்கள். உடல் ஒரு கருவி. அது நன்றாக இயங்கினால் தான் , அதன் மூலம் செய்ய வேண்டிய காரியங்களை செய்து கொள்ள முடியும். 

உடலை பாதுகாப்பது, அதன் மூலம் இன்பம் அனுபவிப்பது என்பது அல்ல குறிக்கோள். உடல் மூலம் உயரிய நிலையை அடைய வேண்டும். 

ஏணி மூலம்  உயரே போவது போல. ஏணியையே பார்த்துக் கொண்டிருந்தால்  மேலே போக முடியுமா ? அதற்காக ஏணியை சரிவர பராமரிக்காமல் இருந்தால் மேலே போக முடியுமா ?

அது போல நம் உடலை நாம் கையாள வேண்டும்.

சரியா ?

No comments:

Post a Comment