யோக சூத்திரம் - 2.44 - இறைவனை அடைய
स्वाध्यायादिष्टदेवता संप्रयोगः ॥४४॥
svādhyāyād-iṣṭa-devatā saṁprayogaḥ ॥44॥
svādhyāyād = தன்னை அறிவதன் மூலம்
iṣṭa = இஷ்ட, விரும்பிய
devatā = தேவன், தேவதை
saṁprayogaḥ = ஒன்றாக முடியும்
கடவுளை அடைய வேண்டும். முக்தி அடைய வேண்டும். கைலாயம் போக வேண்டும். வைகுண்டப் பதவி அடைய வேண்டும். இறைவன் திருவடியில் ஒன்றாக இருக்க வேண்டும். கடவுளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புகிறார்கள்.
அதற்கு என்ன செய்யலாம் ?
பூஜை செய்யலாம், கோவிலுக்குப் போகலாம், தீர்த்த நீராடலாம், முடி கொடுக்கிறேன், காணிக்கை போடுகிறேன் என்று வேண்டிக் கொள்ளலாம், தினமும் சுலோகம், பாடல்கள் பாடலாம், விரதம் இருக்கலாம், பழைய புத்தகங்களை படிக்கலாம்...என்று பெரிய பட்டியல் இருக்கிறது.
இதை எல்லாம் செய்தால் இறைவனை அடைய முடியாது என்கிறார் பதஞ்சலி.
தன்னை அறிவதன் மூலம் தான் விரும்பிய தேவன்/தேவதையோடு ஒன்றாக இருக்கலாம் என்கிறார்.
அந்த இஷ்ட தேவதை சிவன்/முருகன்/பிள்ளையார்/ சக்தி/விஷ்ணு/அல்லா/இயேசு என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
யாரை விரும்புகிறீர்களாளோ அவர்களை அடையலாம்.
இன்னும் சொல்லப் போனால், நீங்கள் உங்கள் இஷ்ட தெய்வத்தை அடைவீர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் உங்கள் இஷ்ட தெய்வமாகவே ஆகி விடுவீர்கள் என்கிறார். ஒன்றாக இருக்கலாம் என்கிறார்.
மனிதன் , தான் யார் என்று அறிவதே இல்லை. என்னைப் பற்றி அறிய என்ன இருக்கிறது என்று கேட்கலாம். அது அந்த அறிவின் முதல் படி.
கடவுள் இருக்கிறார் என்று எப்படித் தெரிந்து கொண்டீர்கள்? கடவுளை ஏன் அடைய வேண்டும் ? ஏதோ சொன்னார்கள், செய்கிறேன். காரணம் எல்லாம் தெரியாது என்று இயந்திர கதியில் செல்லாமல், எதையும் ஏன், எதற்கு என்று ஆராய வேண்டும். நான் யார், ஏன் இதைச் செய்கிறேன், இதன் அர்த்தம் என்ன என்று அறிய வேண்டும்.
தன்னை அறிவததைத் தவிர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.
சிந்தியுங்கள்.
http://yogasutrasimplified.blogspot.in/2018/04/244.html
No comments:
Post a Comment