Sunday, April 1, 2018

யோக சூத்திரம் - 2.39 - பற்றற்று இருந்தால்

யோக சூத்திரம் - 2.39 - பற்றற்று இருந்தால் 


अपरिग्रहस्थैर्ये जन्मकथंता संबोधः ॥३९॥

aparigraha-sthairye janma-kathaṁtā saṁbodhaḥ ॥39॥

aparigraha =பற்றற்று

sthairye = உறுதியாக இருந்தால்

janma = பிறவி

kathaṁtā  = காரணம்

saṁbodhaḥ = அறிவு, ஞானம் ॥39॥

பற்றற்று இருந்தால் பிறவி பற்றிய ஞானம் பிறக்கும்.

பற்றற்று இருந்தால் பிறவி பற்றிய ஞானம் பிறக்கும். யாருடைய பிறவி ?

நம் பிறவி மட்டும் அல்ல, அனைத்து பிறவிகளைப் பற்றிய ஞானமும் கிடைக்கும். அது மட்டும் அல்ல, இந்தப் பிறவி, முன் பிறவி, இனி அடுத்து வருவது என்ன என்ற அறிவும் கிட்டும்.

மொத்தமாக சொல்வதானால் இந்த உலகின் மொத்த பிறப்பு, இறப்பு பற்றிய இரகசியம் தெரியும்.

எப்போது என்றால் பற்றறு இருந்தால்.


பற்றறு இருப்பதற்கும் , இந்த ஞானம் பிறப்பதற்கும் என்ன சம்பந்தம் ?

இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் ?


நாம் எதன் மேல் பற்று கொள்கிறோமோ அதை பாதுகாப்பதில், அதை நம்மோடு வைத்துக் கொள்வதில் , அதற்கு எந்த தீங்கும் வந்து விடாமல் இருக்க கவலைப் பாடுவதில் நம்  வாழ் நாள் எல்லாம் செலவழிந்து விடும். அது போய் விடுமோ என்ற பயம். போய் விட்டால் வருத்தம். துக்கம்.

அது பிள்ளையாக இருக்கலாம், கணவன்/மனைவியாக இருக்கலாம், பணம், அதிகாரம், புகழ், அறிவு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நமது எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் அதை நோக்கியே இருக்கும்.

உதாரணமாக, காலில் ஒரு அடி பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நகம் பிய்ந்து வந்து விட்டது. வலியோடு வலி. மருத்துவரை பார்த்து , மருந்து வைத்து கட்டெல்லாம் போட்டாகி விட்டது. வலி குறைந்தாலும்  முற்றிலுமாக போய் விடவில்லை.

நமது சிந்தனை, நோக்கம் எல்லாம் அந்த வலியின் மேலேயே இருக்கும். வேறு எதிலும் நாட்டம் இருக்காது.

ஒரு தலைவலி வந்தால் அது போகும் வரை, அதே சிந்தனையாக இருக்கும்.

அது போலத்தான் ஒவ்வொரு பற்றும். அவை நம்மை கட்டிப் போடுகின்றன.

பற்று வேறு. ஆசை வேறு. அனுபவிப்பது என்பது வேறு.

ஆசை என்பது இல்லாத ஒன்றின் மேல் வருவது. நமக்கும் அது வேண்டும் என்று விரும்புவது. கப்பலில் போக ஆசை, விமானத்தில் business class இல் போக ஆசை.

நாட்டுப் பற்று. மொழிப் பற்று. இனப் பற்று. பற்று என்பது பற்றிக் கொள்வது. விடாமல் இறுக  பற்றிக் கொள்வது. அதுதான் சிறந்தது என்று நினைப்பது. மற்றவை எல்லாம் துச்சம் என்று நினைப்பது. என் மொழிதான் சிறந்தது. என் மதம் தான்  உயர்ந்தது. என் கடவுள் தான் ஒரே உண்மையான கடவுள் என்று கூறுவது.

பிள்ளைகள் மேல் அன்பு இருக்க வேண்டும். பற்று இருக்கக் கூடாது.

இராமன் கானகம் போனபோது கோசலை இறக்கவில்லை. தசரதன் இறந்தான். இராமன் மேல் கோசலை வைத்தது அன்பு. தசரதன் வைத்தது பற்று.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

பற்றற்ற நிலையே பிறப்பை அறுக்கும் என்பார் வள்ளுவர்.

பிற்ப்பு பற்றிய ஞானம் கிடைக்கும் என்கிறார் பதஞ்சலி. ஞானம் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும் ? மீண்டும் பிறவி வேண்டும் என்று விரும்புவோமா ? அல்லது இந்த பிறவிச் சுழலில் இருந்து மீள வழி தேடுவோமா ? அதை நமது விருப்பத்துக்கு  விட்டு விடுகிறார் பதஞ்சலி.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

மெய் பொருள் கண்டவர்கள் , மீண்டும் இங்கு வந்து பிறக்காத வழிகளை கண்டு பிடிப்பார்கள்  என்கிறார் வள்ளுவர்.

கிடைத்தவற்றை அனுபவிக்கலாம். அவற்றின் மேல் பற்று கூடாது.

அது உறவானாலும் சரி. பொருளானாலும் சரி.

பற்று விடும் போது, அறிவு விசாலம் அடையும். என் மதம், என் அறிவு, என் மொழி, என் பிள்ளைகள் என்பதைத் தாண்டி அறிவு நடுப் புள்ளியில் வந்து நிற்கும். சரி தவறு என்பது தெளிவாகத் தெரியும். ஞானத்தின் எல்லை விரியும்.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று கால எல்லைகளைத் தாண்டி அது நிற்கும்.

கொஞ்சம் விட்டு விலகி நின்று பாருங்கள். அதன் சுகம் தெரியும்.


http://yogasutrasimplified.blogspot.in/2018/04/239.html

No comments:

Post a Comment