Thursday, November 30, 2017

யோக சூத்திரம் - 2.7 - ராக

யோக சூத்திரம் - 2.7 - ராக 



सुखानुशयी रागः ॥७॥

sukha-anuśayī rāgaḥ

sukha = சுகம்

anuśayī = நம்பிக்கை, யூகம்

rāgaḥ = ஆசை , கவர்ச்சி

அவ்வளவுதான். சுகம், நம்பிக்கை, ஆசை.

இது என்ன சுலோகம். ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தமில்லாம மூணு வார்த்தைகளை ஒண்ணா சேர்த்தா ஸ்லோகமா ஆயிருமா ?

பதஞ்சலி அப்படித்தான், கணக்கு பார்முலா மாதிரி , கண்ணு முன்னால பூச்சி பறக்கும். கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து படிக்க வேண்டும்.

கொஞ்சம் rewind .

மன கிலேசத்துக்கு முதல் காரணம் அவித்தை என்று பார்த்தோம்.

அடுத்தது, அஸ்மிதா, அதாவது ஞாபகத்தையும், அறிவையும் ஒன்று என்று நினைத்து குழம்பிக் கொள்வது.

மூன்றாவது, ராக.

அவித்தையின் இன்னொரு வடிவம் இந்த ராக என்பது.


நமக்கு வாழ்வில் எப்போதும் சில ஆசைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. பிறந்ததில் இருந்து இறக்கும் வரை ஏதோ ஒரு ஆசை இருந்து கொண்டே தான் இருக்கிறது.



பொம்மை, ஐஸ் கிரீம், சாக்லேட், புது உடை, சாப்பாடு, ஊர் சுற்றல், அழகான பெண்/ஆண் , பிள்ளைகள், பணம், புகழ் , அதிகாரம், அழகு, ஆரோக்கியம் என்று  ஏதோ ஒரு ஆசை நம்மை துரத்திக் கொண்டே இருக்கிறது.

இந்த ஆசை, விருப்பம் தான் ராக எனப்படுகிறது.


சரி தான், பதஞ்சலியும் ஆரம்பிச்சுட்டாரா ...ஆசை படக் கூடாது என்று. போங்கப்பா, இதை கேட்டு கேட்டு அலுத்து போச்சு. வேறு ஏதாவது இருந்தா சொல்லுங்க னு சொல்லிவிட்டு நீங்கள் பிளாக்கை மூடு முன், ஒரு வார்த்தை.

மேலும் படியுங்கள்.  ஆச்சரியப் படுவீர்கள், பதஞ்சலியின் ஆராய்ச்சியை பார்த்து.


பதஞ்சலி ஆசைப் படாதே என்று சொல்லவில்லை.


ஆசைப் படு என்றும் சொல்லவில்லை.

பின் ?

"நீ உன்னையும் அறிந்து கொள்ளவில்லை. நீ ஆசைப் படும் பொருளையும் அறிந்து கொள்ளவில்லை. அந்த சமயத்தில் ஆசை என்பது மன கிலேசத்தை உண்டாக்கும் " என்கிறார்.

எப்படி என்று பார்ப்போம்.


நமக்கு ஆசை எப்படி வருகிறது ?

எங்கேயோ பார்க்கிறோம் - டிவியில், நண்பர்கள், உறவினர்கள் வீட்டில், செய்தித் தாளில், அல்லது வலை தளங்களில் பார்க்கிறோம். கேள்விப் படுகிறோம்.

அடடா, இந்த மாதிரி நமக்கும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைக்கிறோம் . அந்த நினைவு ராக என்று சொல்லப்படும். அந்த நினைவு , ஆசையாக மாறும். எனக்கு அது வேண்டும் என்று ஒரு ஒரு வலுவான எண்ணமாக மாறுகிறது.

சரி, அதில் என்ன தப்பு இருக்கிறது ? நல்ல , சுகமான பொருள்கள் மேல் ஆசைப் படுவது தவறா ?

சுகம் . அங்குதான் சிக்கல் வருகிறது.

அவை, அந்த பொருள்கள் உங்களுக்கு சுகம் தரும் என்று நீங்கள் எப்படி அறிவீர்கள் ?

ஒரு நல்ல ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் வருகிறது. அடடா, இது மட்டும் நமக்கு இருந்தால்   என்று ஆசைப் படுகிறீர்கள். வாங்கியும் விடுகிறீர்கள். ரொம்ப சந்தோஷம். நண்பர்களிடம் காட்டி காட்டி பெருமை படுகிறீர்கள். சிறிது நாளில், அதை விட சிறந்த ஒன்று மார்க்கெட்டில் வருகிறது.

"அடடா, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து இருந்தால், அதை வாங்கி இருக்கலாமே  " என்று கவலை வருகிறது. சரி, பரவாயில்லை, இது ஒண்ணும் மோசம் இல்லை  என்று உங்களை நீங்களே தேறுதல் சொல்லிக் கொள்கிறீர்கள்.

சிறிது காலம் கழித்து உங்கள் நண்பர் அந்த புது போனை வாங்கி விடுகிறார். நீங்கள் மற்றவர்களிடம்  காட்டி பெருமை பட்டது  போல,அவர் உங்களிடம் அவர் போனை  காட்டுகிறார்.

"அவன் புத்திசாலி தான்...எப்போதும் நல்ல பொருள்களை எப்படியோ சரியா  வாங்கிவிடுகிறான்  ...நான் தான் காசை காரியாக்குகிறேன்...அடுத்த முறை இன்னும்  கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருப்போம் " என்று உங்களை நீங்களே திட்டிக் கொள்கிறீர்கள்.

சந்தோஷம் என்ன ஆனது ?

சோகம், தேறுதல், தன்னிரக்கம் என்று ஆகிப் போனது.

போன் என்பது ஒரு உதாரணம் தான்.

உயிருக்கு உயிராய் காதலித்து, இவள் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று நினைத்து அவளையே திருமணம் செய்து கொள்கிறான். சில வருடங்கள்  கழித்து , "இவளைப் போய் திருமணம் செய்தேனே " என்று நொந்து கொள்ளாத  ஆட்கள் எத்தனை பேர் ?

வீட்டை வாங்கிவிட்டு , அதற்கு கடன் கட்ட மற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு  வாழ்நாள் கஞ்சத் தனமாக வாழ்பவர்கள் எத்தனை பேர் ?

ஒரு பொருளை கண்டால், அது நமக்கு சுகம் தரும் என்று நினைக்கிறோம்.

அதில் சில விஷங்களை நாம் மறந்து போகிறோம்.

ஒன்று, அதை அடைந்தவர்கள் எல்லோரும் சந்தோஷமாக , சுகமாக இருக்கிறார்களா ? இல்லை என்றால், நாம் மட்டும் எப்படி சுகமாக இருப்போம்.

இரண்டாவது, அது வேறு சுகத்தை மட்டும் கொண்டு வருமா ? வேறு சுகம் மட்டும் தரும்  பொருள் உலகில் எதுவுமே இல்லை. ஒவ்வொரு சுகத்தோடு ஒரு துக்கமும் கூடவே   வரும். வேறு சுகத்தை மட்டும் பார்த்து ஒன்றை அடைந்தால், அது கூடவே ஒட்டிக் கொண்டு வரும் துக்கம் நம்மை வருத்தும்.

மூன்றாவது, ஒரு சுகத்தை அடைய வேண்டும் என்றால், பல சுகங்களை துறக்க  வேண்டி இருக்கும். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், சுதந்திரம்  பறி போகும், நிறைய உழைக்க வேண்டி இருக்கும், நிறைய சமரசம்  செய்ய வேண்டி இருக்கும், (compromise ), நிறைய சகிக்க வேண்டி இருக்கும்...இப்படி ஒரு சுகத்தை அடைய பல சுகங்களை இழக்க வேண்டி வரும்.

நான்காவது, மற்றவர்கள் ஒரு பொருளை வைத்து சுகமாக இருக்கலாம்.  அல்லது இருப்பது போல தோன்றும். நாம் அவர்கள் இல்லை. அவர்களுக்கு சுகமாக இருப்பது  நமக்கு சுகமாக இருக்க வேண்டும் என்று இல்லை. இரண்டாவது, அவர்கள் அனுபவிக்கும் துன்பம் நமக்குத் தெரியாது.

நாம் நம்மை அறிந்து கொள்ளதாவரை, நாம் இந்த உலகில் உள்ள பொருள்களை அறிந்து கொள்ளாதவரை , சுகம் துக்கம் என்பவற்றை அறியாதவரை , ஆசை என்பது மன கிலேசத்தை தரும்.

அப்படி என்றால் என்ன செய்வது ?

உங்களை அறிந்து கொள்ள முயலுங்கள். பொருள்களின் தன்மைகளை அறிந்து கொள்ளுங்கள், சுகம் துக்கம் இவற்றின் தன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

அப்புறம் ஆசைப் படுங்கள். அந்த ஆசையின் தன்மையே வேறு.

அதுவரை, நீங்கள் ஆசைப் படுவது எல்லாம் மன கிலேசத்தையும் உண்டாக்கும்.

பதஞ்சலி , ஆசைப் படாதே என்று சொல்லவில்லை.

ஏன் ஆசைப் படுகிறாய், அந்த ஆசையின் தன்மையை அறிந்து கொள் , அது சுகம் தானா  என்று அறிந்து கொள் என்கிறார்.

அப்படி அறிந்த பின் ஆசைப் பட்டால், அது மன கிலேசத்தை தராது.


இதை செய், அதை செய்யாதே என்று பதஞ்சலி சொல்வதில்லை. அதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறார்.

சிந்தியுங்கள். உங்கள் ஆசைகளை பட்டியல் போடுங்கள். அவை எப்படி உங்களுக்கு சுகம் தரும் என்று நினையுங்கள். உங்களை அறியுங்கள்.

அப்புறம் நடப்பது நடக்கட்டும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/27.html

No comments:

Post a Comment