Tuesday, November 28, 2017

யோக சூத்திரம் - 2.5 - விழிப்புணர்வு - பாகம் 1

யோக சூத்திரம் - 2.5 - விழிப்புணர்வு - பாகம் 1



अनित्याअशुचिदुःखानात्मसु नित्यशुचिसुखाअत्मख्यातिरविद्या ॥५॥

anityā-aśuci-duḥkha-anātmasu nitya-śuci-sukha-ātmakhyātir-avidyā ॥5॥


anityā = அநித்தியம் (நித்யம் இல்லாதது)

aśuci = அசூயை , தூய்மை அற்ற

duḥkha = துக்கம், கவலை

an = இல்லை

atma = உண்மையான தன்மை


nitya = நித்யம், நிரந்தரமான

śuci = தூய்மையான

sukha = சுகம்

ātma = உண்மையான தான்

khyātir = கியாதி, அறிவு , உள்ளுணர்வு

avidyā  = அவித்யா

அவித்தையின் காரணாமாக நிலையானது/நிலையற்றது, தூய்மையானது/தூய்மையற்றது, உண்மையான நான் / உண்மையற்ற நான் இவற்றை அறிய முடியாமல் குழம்புகிறோம்


மீண்டும் ஒரு முறை அவித்தை என்றால் என்ன என்று நினைவு படுத்திக் கொள்வோம்.

அவித்தை என்பது விழிப்புணர்வு இல்லாமை. அறிவீனம் என்பது அல்ல. அறிவு இருக்கும். இல்லாவிட்டாலும் பெற்றுக் கொள்ள முடியும். விழிப்புணர்வு (awareness ) இல்லாமையே அவித்தை என்று சொல்லப்படுகிறது.

பெரும்பாலும் நாம் ஒரு விழிப்புணர்வு அற்ற நிலையில், ஒரு தூக்க நிலையில் இருக்கிறோம்.

நாம், என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், நமது நோக்கம் என்ன, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, நம் மனம் எப்படி வேலை செய்கிறது என்பதெல்லாம் ஒன்றும் தெரியாது. ஏதோ எழுந்தோம், பல் விளக்கினோம், சாப்பிட்டோம், வேலைக்கு போனோம், வீட்டுக்கு வந்தோம், தூங்கினோம் என்று செக்கு மாடு போல செய்த ஒன்றையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம்.


நாம் ஒன்றின் மேல் ஆசைப் படுகிறோம் என்றால் , ஏன் ஆசைப் படுகிறோம் என்று தெரியாது.

ஒன்றை வெறுக்கிறோம் என்றால் , ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாது.

சிலவற்றை நம்புகிறோம் . ஏன் ? தெரியாது.

இந்த மிகப் பெரிய தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கத்தான் , திருப்பள்ளி எழுச்சி , திருப்பாவை பாடப் படுகிறது. இல்லாமல், இறைவன் தூங்கி விட்டான் , அவனை எழுப்ப அல்ல திருப்பாவையும், திருப்பள்ளி எழுச்சியும்.

தூங்கிக் கொண்டிருக்கும் நம்மை எழுப்ப .

இந்த விழிப்புணர்வு இல்லாமை அல்லது அவித்தை காரணமாக என்ன நிகழ்கிறது.

முதலாவது, நித்யம் இல்லாததை நித்யம் என்று நினைக்கிறோம். நித்யம் என்றால் நிரந்தரமானது.


நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

என்பார் வள்ளுவர்.

நில்லாதவற்றை , நிலையின என்று உணர்வது புல்லறிவு என்கிறார் வள்ளுவர்.

இளமை, செல்வம், வாழ்க்கை இவை எல்லாம் நிலையானவை அல்ல. இருந்தும் இவை நிலையானவை என்று நினைத்து அதை சேகரிக்க மனிதன் வாழ் நாள் எல்லாம் செலவழிக்கிறான்.

சரி, இவை நிலையானவை இல்லை என்றால் பின் எது தான் நிலையானது?

இவை நிலையானவை என்று அறியும் அறிவு நிலையானது. உண்மை நிலையானது. இப்படி  , எவை நிலையானவை என்று அறிந்து அவற்றை அடைய முயல வேண்டும்.

சுகத்தை துக்கமாகவும், துக்கத்தை சுகமாகவும் நினைப்பது அவித்தையின் இன்னொரு வெளிப்பாடு.

துக்கம் தருவதை செய்யக் கூடாது. சுகம் தருவதை செய்ய வேண்டும்.

புகை பிடிப்பது, மது அருந்துவது, கண்ட மேனிக்கு உண்பது, facebook , whatsapp அரட்டை,.....

இவை எல்லாம் சுகமா ? துக்கமா ? துக்கம் தருபவை . இருந்தும் மனிதன் இவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். ஏன் ? செய்கின்ற அந்த நேரத்தில் அவை சுகம் "போல" தெரியும். ஆனால், அவை துக்கத்தை கொண்டு தருபவை என்ற அறிவு வர வேண்டும்.


நிறைய வாசிப்பது, உடற் பயிற்சி செய்வது, அளவாக உண்பது ....இவை எல்லாம் அந்த நேரத்துக்கு துன்பமாகத் தெரியும். ஆனால், அவன் இன்பம் பயப்பவை.  இருந்து மனிதன், இவற்றை செய்வது இல்லை.

எது சுகம், எது துக்கம் என்று தெரியாமல் இருப்பது அவித்தை.

சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள். அவற்றுள் எவை எவை சுகம் , துக்கம் என்று அறியுங்கள். துக்கத்தை விலக்கி , சுகத்தை தேடுங்கள்.

தூய்மை மற்றும் தூய்மை அல்லாதவை, இவற்றுக்குள் உள்ள வித்தியாசம் அறியாமல்  இருப்பது.

அது என்ன தூய்மை ? தூய்மை அற்றது ?

நாளை பார்ப்போம்.


http://yogasutrasimplified.blogspot.in/2017/11/25-1.html

No comments:

Post a Comment