Saturday, November 25, 2017

யோக சூத்திரம் - 2.2 - நோக்கமும் செயலும்

யோக சூத்திரம் - 2.2 - நோக்கமும் செயலும் 



समाधिभावनार्थः क्लेश तनूकरणार्थश्च ॥२॥

samādhi-bhāvana-arthaḥ kleśa tanū-karaṇa-arthaś-ca ॥2॥

samādhi = சமாதி

bhāvana = நிலை, ஒன்று படுத்தல்

arthaḥ = அர்த்தம், நோக்கம், குறிக்கோள்

kleśa = கிலேசம், சுமை, தடை,

tanū = குறைதல்

karaṇa = செய்தல், அடைதல்

arthaś-ca = குறிக்கோளை


செயலும், குறிக்கோளும் ஒன்று பட்டால், தடைகளை மீறி குறிக்கோளை அடையலாம்.

கேட்பதற்கு ஏதோ சாதாரணமான ஒன்றாகத் தோன்றுகிறது. சிந்தித்துப் பார்த்தால் நம் மொத்த வாழ்க்கையும் இந்த ஒரு வரியில் அடங்கும்.


சிந்திப்போம்.


நமக்கு பணம் எடுக்க வேண்டும் என்றால் எங்கு செல்வோம் ? ஒன்று ATM க்கு  போக வேண்டும். அல்லது வங்கிக்குப் போக வேண்டும்.

உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்றால் எங்கு செல்ல வேண்டும் ? உடற் பயிற்சி நிலையத்துக்கு செல்ல வேண்டும். (gym ).

பணம் எடுக்க உடற் பயிற்சி நிலையத்துக்கு சென்றால் எப்படி இருக்கும் ?

வாழ்க்கையில் நாம் அப்படித்தான் செய்து கொண்டு இருக்கிறோம்.

யோசித்துப் பாருங்கள், நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் எந்த குறிக்கோளை நோக்கி போகிறது என்று ?

முதலில் பல பேருக்கு வாழ்வில் குறிக்கோளே கிடையாது. ஏதோ இன்றைய தினம் ஓடினால் சரி என்று இருக்கிறார்கள்.

குறிக்கோள் உள்ளவர்கள் கூட, அதை அடைய என்ன செய்ய வேண்டும் தெரியாமல் தவிக்கிறார்கள்.

தெரிந்தால் கூட , அதைச் செய்யாமல், அதற்கு சம்பந்தமில்லாத பலவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள்.

எப்படி என்று பார்ப்போம்.

ஒரு மாணவனுக்கு என்ன குறிக்கோள் இருக்க முடியும் ? நன்றாக படிக்க வேண்டும், புரிந்து படிக்க வேண்டும், நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும். இவை தானே ?

அவன் செய்யும் செய்லகளைப் பாருங்கள்.

வீடியோ கேம், சினிமா, நண்பர்களோடு ஊர் சுற்றுவது, நாவல் படிப்பது, டிவி பார்ப்பது, அதிகமாக தூங்குவது. இந்த செயல்களுக்கும், படிப்புக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ?

ஒரு குடும்பத் தலைவியின் குறிக்கோள் என்னவாக இருக்க முடியும் ?

வீட்டை நன்றாக பராமரிப்பது, தானும், வீட்டில் உள்ளவர்களும் சந்தோஷமாக இருப்பது,...இவை தானே ?

பொதுவாக அவர்கள் செய்யும் காரியங்களைப் பாருங்கள் ...

அளவுக்கு அதிகமான டிவி சீரியல்கள், மற்ற பெண்களோடு அரட்டை, குப்பை வார மற்றும் மாத பத்திரிகைகளை வாசிப்பது, எந்நேரமும் ஏதாவது வாங்கிக் கொண்டே இருப்பது (shopping ), கணவனை நச்சரிப்பது ...இப்படி பல.

இந்த செயல்களுக்கும், குறிக்கோளும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ?

ஒரு குடும்பத் தலைவனின் குறிக்கோள் என்ன ?

வீட்டை பாதுகாப்பது, பிள்ளைகளுக்கு நல்ல வழியை சொல்லித் தருவது, மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்வது, செல்வம் சேர்ப்பது, என்பவை தானே ?

சதா சர்வ காலமும் அலுவலகத்தியிலேயே பழியாக கிடப்பது, புகை பிடிப்பது, மது அருந்துவது, மற்ற பெண்கள் சகவாசம், சீட்டு ஆடுவது, நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது, பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாமலேயே இருப்பது....


செயலுக்கும், குறிக்கோளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ?

முதலில் ஒரு குறிக்கோளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அந்த குறிக்கோளை நோக்கி எடுத்து வைக்கும் அடியாக இருக்க வேண்டும்.

ஒரு மாணவன் தூங்கப் போகிறான் என்றால் அது கூட அவன் குறிக்கோளை நோக்கி எடுத்து வைக்கும் அடியாக இருக்க வேண்டும். "நான் நீண்ட நேரம் படித்து  களைத்து விட்டேன் ...என் மூளைக்கும் என் உடலுக்கும் ஓய்வு தேவை ..எனவே தூங்கப் போகிறேன் " என்று தூக்கம் கூட குறிக்கோள் அடையவே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் , ஒவ்வொரு செயலையும் யோசியுங்கள்.

நான் பேசுவது, செய்யவது எந்த குறிக்கோளை அடைய உதவுகிறது என்று ?

நான் சீரியல் பார்க்க செலவிடும் இந்த நேரம் எதை அடைய உதவுகிறது என்று சிந்தியுங்கள்.

அரட்டை அடிப்பதனால் நான் என்ன சாதிக்கப் போகிறேன் என்று நினையுங்கள்.

கணவனிடம் சண்டை போடும் முன் (அல்லது மனைவியிடம்) , இதனால் நான் என்ன அடைய நினைக்கிறேன் என்று யோசித்து செயல்படுங்கள்.

உணர்ச்சிகளால் தூண்டப் பட்டு செயல் படுவதை விட்டு விட்டு, அறிவு பூர்வமாக சிந்தித்து செயல் பட வேண்டும்.

ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயலும் நமது குறிக்கோளை அடையும் முயற்சியாக இருக்க வேண்டும்.

சரி, பதஞ்சலி இதையா சொல்லி இருக்கிறார்  என்றால் இல்லை.

அவர் சொன்னது, செயலும் குறிக்கோளும் ஒன்றாக இருந்தால் தடைகளை மீர் குறிக்கோளை அடையலாம் என்று.

அவர் நினைத்துச் சொன்னது, சமாதி நிலை அடையும் குறிக்கோளை.

எப்படி சமாதி நிலை அடைவது என்றால் , நமது எல்லா செயல்களும் அதை அடைவதை நோக்கியே இருக்க வேண்டும்.

சமாதி நிலைக்கு பின்னால் வருவோம்.

முதலில் சின்ன சின்ன விஷயங்களில் குறிக்கோளை சரி செய்து, அவற்றை அடைந்து விட்டால் , அது ஒரு பழக்கமாகி விடும். பின் சமாதி அடைய என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து அதைச் செய்யலாம்

எடுத்தவுடனேயே சமாதி அடைய போகிறேன் என்று ஆரம்பித்தால் சரியாக வராது.

கொஞ்சம் கொஞ்சமாக செல்வோம்.

வாழ்க்கையை நெறி படுத்துங்கள். உயர்ந்த குறிக்கோளை கொள்ளுங்கள்.

வெள்ளத்து அணையது மலர் நீட்டம், மாதர் தம் உள்ளத்து அணையது உயர்வு

என்பார் வள்ளுவர்.

உயர்ந்த குறிக்கோள். அதை அடைய விடா முயற்சி உங்களை சிறந்தவர்களாகச் செய்யும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியாராகப் பெறின் என்பது வள்ளுவம்.

சமாதி நிலை அடைவது மட்டும் அல்ல, வாழ்வில் நீங்கள் நினைத்த எதையும் அடைய இதுவே வழி.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/22.html

No comments:

Post a Comment