Sunday, November 26, 2017

யோக சூத்திரம் - 2.3 - மன சஞ்சலங்களுக்குக் காரணம்

யோக சூத்திரம் - 2.3 - மன சஞ்சலங்களுக்குக் காரணம் 



अविद्याअस्मितारागद्वेषाभिनिवेशः क्लेशाः ॥३॥

avidyā-asmitā-rāga-dveṣa-abhiniveśaḥ kleśāḥ ॥3॥

avidyā = அவித்யா , வித்தை இல்லாதது, அறிவீனம்,

asmitā = தான் என்ற உணர்வு

rāga = ஆசை,

dveṣa = துவேஷம் , வெறுப்பு

abhiniveśaḥ = பயம்

kleśāḥ = கிலேசம், சஞ்சலம்

ஆன்மீக பாதையில் செல்லும் போது பல தடைகள் வரும். சமாதி நிலையை அடைய நமக்கு தடையாய் இருப்பவை எவை ?

நம்மால் அந்த நிலையை அடைய முடியுமா ?

முடியும் ? மனம் சஞ்சலப் படாமல் இருந்தால்.

மனம் ஏன் சஞ்சலப் படுகிறது ?

காரணம் சொல்லுகிறார் பதஞ்சலி.

முதலாவது, அவித்தை. அதாவது, அறிவீனம். அவித்தை என்பதை அறிவீனம் என்று கூட சொல்ல முடியாது. அறிவில்லாதவற்றை அறிவு என்று நினைத்துக் கொள்வது. யாரோ சொன்னார்கள், எங்கேயோ படித்தது என்று ஒன்றை பிடித்துக் கொண்டு, அதுவே உண்மையான அறிவு என்று நினைத்துக் கொள்வது. படிப்பதே கொஞ்சம். அதிலும், சரியானவற்றை படிப்பது கிடையாது. அப்படியே சரியானவற்றை படித்தாலும் அவற்றை சரியாக புரிந்து கொள்வது கிடையாது. தவறாக புரிந்து கொள்வது மட்டும் அல்ல, அந்த தவறே சரி என்று நினைத்துக் கொள்வது. இது அவித்தை.

இதை முதலில் சரி செய்ய வேண்டும். எதை அறிவது, எப்படி அறிவது, என்று திட்டமிட்டு  சரியான முறையில் வித்தையை அறிய வேண்டும்.


Whatsapp லும் , youtube லும் பார்த்து விட்டு, இதுதான் அறிவு என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

படிக்காமல் இருப்பதை விட, தவறானதை படித்து , தவறாக புரிந்து கொண்டு அதுவே சரி நினைப்பது ஆபத்தானது.

இரண்டாவது, அஸ்மிதா. தான் என்ற உணர்வு. அகங்காரம். தன்னை முன்னிறுத்தி உலகை அளப்பது. அளவுக்கு அதிகமாக தன்னைப் பற்றி பெருமை கொள்வது. தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்வது. இதனால் பல சிக்கல்கள் வருகின்றன. கோபம் பயம் என்ற இவைகள் இதில் இருந்து வருகின்றன.

மூன்றாவது, ரகா , அதாவது ஆசை. ஆசை என்றால் என்ன ? நமது  சந்தோஷம் வெளியே இருக்கிறது என்று நினைப்பது ஆசை. அந்த பெண் வேண்டும், அந்த கார் வேண்டும், அந்த வீடு வேண்டும், அந்த வெளி நாட்டுக்குப் போக வேண்டும் என்று வெளியில் உள்ள பொருள்கள் நம் சந்தோஷத்துக்கு காரணம் என்று நினைப்பது. நாம் எதெல்லாம் வந்தால் சந்தோஷமாக இருப்போம் என்று நினைக்கிறோமோ , அதை எல்லாம் அடைந்தவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று எண்ணி பார்க்க வேண்டும். நமது சந்தோஷம்  வெளியில் இருந்து வருகிறது என்று நினைப்பதால் ஆசை எழுகிறது.

நான்காவது, துவேஷம். வெறுப்பு. வெறுப்புக்குக் காரணம் அன்பின்மை. நம்மை விட கீழே உள்ளவர்கள் மேல் வெறுப்பு. அந்த வெறுப்பின் மறு வடிவம் நம்மை விட உயர்ந்தவர்கள் மேல் உள்ள பொறாமை. வெறுப்பும் பொறாமையும் ஒன்று தான். இதை அறிய வேண்டும்.

ஐந்தாவது, பயம். ஆசையில் இருந்து பயம் வரும். ஆசைப் பட்டது கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயம். வாழ்க்கையின் மேல் ஆசை வைத்தால், சாவை குறித்து பயம் வரும். ஆசையின் கருவில் பயம் பிறக்கும். பயம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், ஆசை இல்லாமல் இருக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் அறியாமல் இருப்பது அவித்தை.

நேரம் கிடைக்கும் போது இவற்றை தனிமையில் சிந்தித்துப் பாருங்கள்.

இவை எல்லாம் ஒரு முறை படித்தவுடன் புரிகிற விஷயம் அல்ல.


http://yogasutrasimplified.blogspot.in/2017/11/23.html

No comments:

Post a Comment