Thursday, November 9, 2017

யோக சூத்திரம் - 1.42 - உண்மையான அறிவு

யோக சூத்திரம் - 1.42 - உண்மையான அறிவு



तत्र शब्दार्थज्ञानविकल्पैः संकीर्णा सवितर्का समापत्तिः ॥४२॥

tatra śabdārtha-jñāna-vikalpaiḥ saṁkīrṇā savitarkā samāpattiḥ ॥42॥


tatra =  இது, இவை
śabda = சப்தம், ஒலி , பெயர்
artha = அர்த்தம், பொருள்
jñāna = ஞானம், அறிவு
vikalpaḥ = மாய தோற்றம்
saṁkīrṇa = கலைந்த , குழம்பிய
savitarka = ஏற்றுக் கொள்வதன் மூலம்
samāpattiḥ = சமாதி , மெய்ஞானம்
savitarka samāpattiḥ = சவிதர்க சமாதி எனப்படும்

நாம்  .பலவற்றை படிக்கிறோம். கேட்டு அறிந்து கொள்கிறோம்.

நம் அறிவு என்பது என்ன ?

பொருள்களுக்கும், செயல்களுக்கும் உள்ள பெயரை அறிந்து கொள்கிறோம். அவ்வளவுதான்.

உதாரணமாக  நெஞ்சு வலி என்று மருத்துவரிடம் போகிறோம்.  அவர் சோதனை செய்து விட்டு, இது  miocardial  infarction   என்று சொல்கிறார்.

ஓ, இது  miocardial  infarction ஆ என்று நாம் சொல்லிக் கொள்கிறோம். ஏதோ அந்த பெயரை அறிந்து கொள்வதன் மூலம் அது என்ன என்பதை அறிந்து கொண்டது மாதிரி.

பொருள்கள் மேலே தூக்கிப் போட்டால் கீழே விழுகிறது. ஏன் விழுகிறது என்று கேட்டால் "புவி ஈர்ப்பு விசை" என்கிறோம். கீழே விழும் அந்த செயலுக்கு நாம் ஒரு பெயர் வைத்து இருக்கிறோம். அவ்வளவுதான்.

பொருள்கள், அதன் பெயர்கள் , அதன் தன்மை இவற்றை நாம் அறிவு என்று சொல்கிறோம். யாருக்கு நிறைய பெயர்கள் தெரிகிறதோ அவர் பெரிய அறிஞர் என்று சொல்கிறோம்.

அந்த நாட்டின் தலை நகரின் பெயர் என்ன ?
அதை கண்டு பிடித்த அறிஞரின் பெயர் என்ன ?
எந்த வருடம் இது நிகழ்ந்தது ?
இதையும், இதையும் சேர்த்தால் வரும் பொருளின் பெயர் என்ன ?

இவை எல்லாம் தெரிந்து விட்டால் அவர் பெரிய அறிவாளி என்று நினைக்கிறோம்.

கருப்பான, கடினமான, கரடு முரடான ஒரு பொருள் இருக்கிறது.

"ஓ, அதுவா...அது ஒரு கல்லு " என்று சொல்வதன் மூலம், ஏதோ அதை முழுவதுமாக அறிந்து கொண்டது போல ஒரு பிரமை உண்டாகிறது.

கல்லு என்பது ஒரு பெயர். அதற்கு மேல் ஒன்றும் இல்லை.

ஆழ்ந்து சிந்தித்தால், நமக்கும் வெளி உலகுக்கும் உள்ள தொடர்பு என்பது இந்த  பெயர்களின் மூலமே நடக்கிறது.

கணவன், மனைவி, பிள்ளை, ஓட்டுநர், வேலைக்காரன், தபால்காரன் , இட்லி, தோசை என்று பெயர்களால் ஆனது இந்த உலகம்.

சிக்கல் என்ன என்றால், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு குணாதிசயம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

மனைவி என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று நமக்கு ஒரு எண்ணம் உண்டு.

எல்லா மனைவியும் அப்படி இருப்பார்களா ? எல்லா சமயத்திலும் அப்படி இருப்பார்களா ?

மனைவி என்ற சொல்லை தவிர்த்து விட்டு,  அவள் உங்கள் காதலி என்று நினைத்துப் பாருங்கள். உங்கள் உறவின் தன்மை மாறும். "நீ என் மனைவி இல்ல, என் தாய்" என்று சொல்லிப் பாருங்கள், உறவின் தன்மை மாறும்.

அம்மா என்றால் இப்படி இருக்க வேண்டும். கணவன் என்றால் அவன் குணாதிசயம் இது இது என்று வரையறுத்து வைத்திருக்கிறோம். அப்படி இல்லாத ஒருவரை கணவனாக அடைந்தால் வாழ்க்கை நரகமாக மாறி விடுகிறது. மன அழுத்தம் வருகிறது. மன சோர்வு வருகிறது.

அவன் ஒரு மனிதன். அவனிடமும் குறை நிறை இருக்கும்.

அவள் ஒரு பெண், மனுசி. அவளிடம் குறை நிறை இருக்கும்.

அவளிடம் உள்ள குறை என்ன, நிறை என்ன என்று அறிந்து கொண்டு வாழ்க்கை நடத்தினால் வாழ்க்கை சுகப்படும்.

பெயர்கள் எப்போதும் இறந்த காலத்தை கொண்டு வருகின்றன.

இந்த பெயர் இருந்தால் , அது இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற பழைய நினைவுகளை , அனுபவங்களை கொண்டு வருகின்றன.

நாம் இறந்த காலத்தில் வாழத் தலைப்படுகிறோம்.

பெயர்கள் இல்லாமல் வாழ்க்கையை இரசித்துப் பாருங்கள்.

ரோஜா என்று சொல்லாதீர்கள். அழகாய் இருக்கிறது என்று மனதுக்குள் கூட சொல்லாதீர்கள்.அதைப் பாருங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள்.

அப்படி பெயர் இல்லாமல் பார்க்கும் போது , பார்ப்பவன், பார்க்கப்படுவது, பார்வை என்ற மூன்றும் கரைந்து போகும்.

இசையை கேட்கும் போது ...அடடா, இது இந்த இராகம், இந்த தாளம், இத்தனை கட்டை சுருதி, இந்த வார்த்தைக்கு இந்த அர்த்தம், இதை எழுதியது அவர் , பாடுவது இவர் என்ற பெயர்களை எல்லாம் விட்டு விடுங்கள். அந்த ஒலியோடு வேறு எந்த வார்த்தையும் இல்லாமல் ஒன்றி இருந்து பாருங்கள்.

அப்படி பெயர் இல்லாமல், கேட்கும் போது , கேட்பவன், கேட்கப்படும் ஒலி , கேட்டல் இந்த மூன்றும் ஒரு புள்ளியில் நிற்கும்.


மனைவியை , மனைவி என்ற சொல் இல்லாமல் பாருங்கள். அவள் புதியதாய் தெரிவாள். பழமை அத்தனையும் போய் விடும். ஏதோ புதியதாய் பார்ப்பது போல இருக்கும்.  பார்வையில் ஒரு தெளிவு இருக்கும்.

இறை அனுபவம் பெற்ற பின் மணிவாசகர் கூறுவார் ,

"ஒரு நாமம், ஒரு உருவம் , ஒன்று இல்லாதவர்க்கு ஆயிரம் திரு நாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ " என்று



திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.


பெயர்கள் நமது சிந்தனையை மடை மாற்றுகின்றன. பெயரில்லாமல் சிந்தித்துப் பாருங்கள். சமாதியின் ஒரு வகை அது.


http://yogasutrasimplified.blogspot.in/2017/11/142.html

No comments:

Post a Comment