Friday, November 24, 2017

யோக சூத்திரம் - 2.1 - கிரியா யோகம்

யோக சூத்திரம் - 2.1 - கிரியா யோகம் 


तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि क्रियायोगः ॥१॥

tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni kriyā-yogaḥ ॥1॥

tapaḥ = தவம்

svādhyāy = சுய அறிதல்

eśvarapraṇidhānāni = அர்ப்பணிப்பு

kriyā-yogaḥ = கிரியா யோகம்

முந்தைய அத்தியாயத்தில் மனம் எவ்வாறு சலனம் அடைகிறது, அவ்வாறு சலனம் அடைவதால் நாம் எவ்வாறு உலகை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் துன்பப் படுகிறோம், சித்த நிரோதம் என்ற நிலையை அடைந்த யோகி எப்படி இருப்பான் என்று  கூறினார்.

சரி,  அதை எப்படி அடைவது என்ற கேள்வி எழும் அல்லவா ?

அதை எப்படி சாதிப்பது என்று இந்த சாதன பாதத்தில் கூறுகிறார்.

முன்பே கூறியது போல, பதஞ்சலி வள வள என்று பேசுபவர் அல்ல. மிக மிக சுருக்கமாக நேரடியாக  சொல்லுவார்.

சாதன பாதத்தில் முதலில் கிரியா யோகம் பற்றி கூறுகிறார்.

கிரியா யோகம்  என்பது மூன்று பகுதிகளை கொண்டது.

தவம்

தன்னை அறிதல்

அர்பணிப்பு

தவம் என்றால் என்ன ?

காட்டில் போய் , பட்டினி கிடந்து, அக்கினிக்கு நடுவில் நின்று கடவுளை நினைப்பதா தவம் ?

அப்படி என்றால் எல்லோரும் நாட்டை விட்டு கட்டுக்குப் போக வேண்டியதுதானா ?

இல்லை.

எது தவம் என்று யாரைக் கேட்டால் சரியாக இருக்கும் ? வள்ளுவரை கேட்போமா ?

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு

தவத்திற்கு வடிவம் எது என்றால் தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தல், மற்றவர்களுக்கு துன்பம்  செய்யாது இருத்தல் .

அவ்வளவுதான்.

வாழ்க்கை என்பதே ஒவ்வொரு நொடியும் பிரச்சனைகளை வெற்றி கொள்வதுதான். வாழ்க்கை என்பது துன்பம் நிறைந்தது. துக்ககரமானது என்பார்  புத்தர்.

துக்கம் என்றால் ஏதோ சோகம் என்று நினைக்கக் கூடாது.

ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு விதத்தில் வலியை தருகின்றன.  வீட்டில் இருந்து  வெளியே செல்ல வேண்டும் என்றால் உடல் உழைக்க வேண்டும். அது ஒரு வலி.   சின்ன வலிதான். இருந்தாலும் வலிதான் . பேசாமல் வீட்டிலேயே இருந்து  விட்டு போகலாமே ? உண்பதும், அவற்றை செரிப்பதும் எல்லாமே  ஒரு வேலை தான். அந்த வேலை செய்யும் போது உடல் உழைப்பு தேவைப் படுகிறது . அது ஒரு சங்கடம். வலி. துன்பம்.

நாம் முன்னேற வேண்டும் என்றால், நம் முன்னால் உள்ள பிரச்சனைகளை நாம்  சரி செய்ய வேண்டும்.

எப்படி பிரச்சனைகளை சரி செய்வது ? அதற்குண்டான நேரம் ஒதுக்கி, அதற்கு தேவையான  உழைப்பை தருவது.

மாணவனாக இருந்தால் , படிக்க வேண்டும்.

வேலை பார்ப்பவராக இருந்தால், வேலை செய்ய வேண்டும்.

பிள்ளைகளை வளர்க்க வேண்டும். வீட்டை நன்றாக வைத்திருக்க வேண்டும்.  உறவுகளுக்கும், நட்புக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்ணாமல்  நாக்கை கட்டுப் படுத்த வேண்டும், உடற் பயிற்சி செய்ய வேண்டும்.

இப்படி ஒவ்வொன்றும் செய்வதற்கு நேரமும், உழைப்பும் தேவைப் படுகிறது.

உழைப்பு என்றால் வலி இருக்கத்தான் செய்யும்.

தனக்கு வந்த வலியை பொறுத்தல் - தவத்தின் ஒரு கூறு.

வலி பொறுக்க முடியவில்லை என்றால் நீங்கள்  முன்னேற வில்லை என்று அர்த்தம். நீங்கள் உயரும் போது , உங்களின் இன்றைய நிலையை விட்டு உயர்ந்த  நிலைக்கு செல்லும் போது , புது புது பிரச்சனைகள்  வரும். அவற்றை  சமாளிக்க வேண்டும். அப்போதுதான் உயர்வு அடைய முடியும்.

பெரிய நிலையை அடைந்தவர்கள், உயர்ந்தவர்கள் வாழ்க்கையை பாருங்கள். எவ்வளவு வலி தாங்கி வந்திருப்பார்கள் என்று தெரியும். தூக்கம் தொலைத்து, பசி தாகம் மறந்து, பல சுகங்களை தியாகம் செய்து வந்திருப்பார்கள்.  அது தவம்.

சரி, அந்த தவத்தை எதை நோக்கி செய்ய வேண்டும் ?

பணம் வேண்டும்,  பொருள் வேண்டும், வீடு வாசல் வேண்டும், பதவி, அதிகாரம் வேண்டும்  என்று நினைத்து செய்ய வேண்டுமா ?

இல்லை,

தன்னை அறிய தவம் செய்ய வேண்டும்.

உலகிலேயே மிக கடினமான விஷயம் தன்னை அறிவது தான்.  நீங்கள் நினைப்பது போல  அது அவ்வளவு எளிமையான ஒன்று அல்ல.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். ஆனால், நீங்கள் அது என்ன என்றே அறியாமல் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு இயந்திரத்தைப் போல.

உங்களின் ஒவ்வொரு குணத்துக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும்.

அது பக்தியாக இருக்கட்டும், பொறாமையாக இருக்கட்டும், புத்தகம் வாசிப்பதாக  இருக்கட்டும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

நீங்கள் உங்களை அறியாதவரை , அதற்கு காரணம்  தெரியாது. ஏதோ இயந்திர கதியில்  செய்து கொண்டே போவீர்கள்.

"தன்னை அறிதல்"

என்பது க்ரியா யோகத்தின் இரண்டாவது கூறு.


அர்ப்பணிப்பு (ஈஸ்வர ப்ரணிதானம்).

எதற்க்காக அர்பணிப்பு செய்ய வேண்டும். தவம் செய்து, தன்னை அறிந்து பின் எதற்காக அர்ப்பணிக்க வேண்டும் ?


இந்த அர்பணிப்பு என்பதை பல கோணங்களில் பார்க்கலாம்.

ஒன்று, வாழ்வில் நல்ல விஷயங்கள் எதுவும் முடிவது இல்லை. செய்து கொண்டே இருக்க வேண்டியது தான். அதற்கு இவ்வளவு என்று அளவு கிடையாது. இன்று செய்தோம். அவ்வளவு தான். அதற்கு பலன் என்று எதுவும் கிடையாது.

பிள்ளைகள் மேல் அன்பு செய்கிறோம். இவ்வளவு அன்பு செய்தால் போதும். இதுவரை செய்த அன்பையும் சேர்த்து நமது இலக்கை எட்டி விட்டோம் , இனி மேல்  அன்பு செய்ய வேண்டாம் என்று சொல்ல முடியுமா ? அன்பு செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்.  அதற்கு என்ன பலன் இருக்க முடியும் ?

உடற் பயிற்சி செய்தோம். எடை குறைந்தது. நிறுத்தி விட முடியுமா ?

கல்வி கற்கிறோம். போதும். என்று நிறுத்தி விட முடியுமா ?

இது போல பல. செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்.

என்னடா இது நாம் பாட்டுக்கு செய்து கொண்டே இருக்கிறோம். இதற்கு முடிவுதான் என்ன என்று கேட்டால் ஒன்றும் இல்லை. அப்படி என்றால் ஒரு ஆயாசம் வரும்.  அந்த ஆயாசத்தை தவிர்க்கத் தான், அர்ப்பணிப்பு என்ற ஒன்றை சொல்கிறார்கள்.

எனக்காக என்று நான் இதைச் செய்யவில்லை. செய்ய வேண்டியது என் கடமை , செய்து கொண்டு போகிறேன் என்று நினைக்க வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்.

அர்ப்பணிப்பு என்றால் யாருக்கு அர்பணிப்பது ?

ஈஸவர ப்ரணிதானி ....

சிக்கல். ஈஸ்வரன் என்றால் யார் ? சிவன் ? விஷ்ணு  ? பரமாத்மா ? ஆளாளாளுக்கு ஒருவரை சொல்லுவார்கள்.

யோக முறையை பின்பற்றுபவர்கள் (yoga school of thought ), ஈஸ்வரன் என்று சொல்லுவது   ஒரு ஆன்மீக உந்து சக்தியை (spiritual inspiration ). ஒரு உயர் நிலையை.

உங்களுக்கு பிடித்த தெய்வத்துக்கு நீங்கள் அர்பணிப்பதில் ஒரு தவறும் இல்லை. அர்ப்பணிப்பு தான் முக்கியம். யாருக்கு என்பதல்ல.

தவம் - தன்னை அறிதல் - அர்ப்பணிப்பு

இந்த மூன்றும் கிரியா யோகத்தின் மூன்று கூறுகள். இது தான் சாரம். விளக்கம் என்பது ஒரு விவாதப் பொருள். அவ்வளவு தான். மூலத்தை பிடித்துக் கொள்ளுங்கள்.

மொத்தம் 45 ஸ்லோகங்கள் உள்ள அத்யாயம். வாருங்கள் மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/21.html

No comments:

Post a Comment