Wednesday, November 15, 2017

யோக சூத்திரம் - 1.44 - பார்வையை திருப்பு

யோக சூத்திரம் - 1.44 - பார்வையை திருப்பு 


एतयैव सविचारा निर्विचारा च सूक्ष्मविषय व्याख्याता ॥४४॥

etayaiva savicārā nirvicārā ca sūkṣma-viṣaya vyākhyātā ॥44॥


etayā = இதன் மூலம்
eva = மேலும்
savicārā = ச விசார = ஆராய்வதன் மூலம் savicārā = without an investigation; nirvichara nirvicara  = நிர் விசார = சூக்கும ஆராய்ச்சியின் மூலம்
ca = மேலும்
sūkṣma = சூட்சும
viṣaya = விஷயம்
vyākhyātā = வியாக்யதா = விளக்கப்பட்டது

தியானம் பண்ணுகிறோம். ஆழ்நிலை தியானம் பண்ணுகிறோம். மனதை ஒருமுகப் படுத்துகிறோம் என்று சொல்லும் போது என்ன நிகழ்கிறது ?

மனம் ஏதோ ஒன்றின் மேல் நிலைத்து நிற்கிறது.

அது கடவுளாக இருக்கலாம், ஜோதியாக இருக்கலாம், எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

எதுவாக இருந்தாலும், மனம் வெளியில் உள்ள ஒன்றை பற்றி சிந்திக்கிறது.

மனம் உள்ளில் இருந்து வெளியே செல்கிறது.

வெளியில் உள்ள ஒன்றை அதன் பெயரின் மூலம் சிந்திக்கலாம்.

பெயர் இல்லாமல் சிந்திக்கலாம்.

எப்படியாக இருந்தாலும் அது வெளியில் உள்ள ஒன்று தான்.

அதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று ஒன்றும் இல்லை.

கடவுளை பற்றி நினைத்தால் உயர்தது. வேறு யாரையாவது நினைத்தால் தாழ்ந்தது என்று இல்லை.


வெளியில் உள்ள ஒன்றை மனம் பற்றி நிற்கிறது. அவ்வளவுதான். எதை என்பதில் பெரிய வித்தியாசம் இல்லை.

மூன்றாவது படியில், யோகி மனத்தை உள்நோக்கி திருப்புகிறான் .

பார்ப்பது யார் ? தியானம் செய்வது யார் ? ஏன் தியானம் செய்ய வேண்டும் ? அதை செய்தால் என்ன பலன் ? அந்த பலன் யாருக்கு கிடைக்கிறது ?

நாம் வெளியில் உள்ளவற்றை பற்றி சிந்திக்க செலவிடும் நேரத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட நம்மை பற்றி அறிந்து கொள்ள செலவிடுவதில்லை.

நான் யார் ? நான் ஏன் இப்படி இருக்கிறேன் ? எனது நம்பிக்கைகள் என்ன ? அவை எங்கிருந்து வந்தன ? அவை சரியா தவறா ?

எனது ஆசைகள் என்ன ? இந்த ஆசைகளுக்கு காரணம் என்ன ? இந்த ஆசைகளை அடைய நான் என்னவெல்லாம் இழக்க வேண்டி இருக்கிறது ? இப்படி இழந்து பெற்ற ஆசைகளால் எனக்கு மகிழ்ச்சி உண்டாகுமா ?

சிலர் பணம் பணம் என்று அலைவார்கள். அதற்காக குடும்பத்தைக் கூட பார்க்க மாட்டார்கள். பணம் வந்த பின் என்ன ஆகும் ? அது மகிழ்ச்சியை தருமா ?

எனது பயங்கள் என்ன ? அவை எங்கிருந்து வந்தன ? அவன் என்னை எப்படி செலுத்துகின்றன ?

இப்படி தன்னைத்தானே அறிய முற்பட வேண்டும் ?

நமது ஒவ்வொரு சிந்தனைக்கும், செயலுக்கும் பெரிய காரணம், பின் புலம் இருக்கும்.

நம் பெற்றோர், அவர்கள் நம்மை வளர்த்த முறை, நாம் பார்த்த சினிமாக்கள், படித்த கதைகள், நண்பர்கள், உறவினர்கள் என்று எத்தனையோ பேர் நமது சிந்தனையை செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

இதில் பெரும்பாலோனோர் ஒன்றும் அறியாதவர்கள். அவர்களது மூடத் தனத்தை நம் மீது ஏற்றி வைத்து விடுகிறார்கள். அது போலத்தான் நாம் வாசித்த புத்தகங்களும், சினிமாக்களும், நண்பர்களும்.

நம் வாழ்க்கை அவர்களால் உருவாக்கப் பட்டது. இந்த பாசியை விலக்கினால்  தூய நீர் தெரியும்.  ஆனால்,அதை பார்க்க முடியாதபடி இந்த பாசி படர்ந்திருக்கிறது.

சிந்தனையை உள் நோக்கி திருப்ப வேண்டும்.

மனதில் உள்ள கசடுகளை, மலங்களை நீக்க வேண்டும். அப்போதுதான் உண்மையில் நாம் யார் என்று அறிய முடியும்.

பேற்றை தவம் சற்று செய்யாத என்னை 
பிரபஞ்சம் எனும் சேற்றை கழிய வழி விட்டவா 

என்பார் அருணகிரிநாதர்.

பிரபஞ்சம், இந்த உலகம் ஒரு சேறு போல நம் மனதின் மேல் படிந்து கிடக்கிறது.

ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கை 
பாசத்திடை அல்லல் படையிருந்தனே நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல்  வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன் என்பார் அபிராமி பட்டர்.

சிலந்தி வலை படிந்து கிடக்கிறது. அவற்றை நீக்கி உண்மையான நாம் யார் என்று அறிய வேண்டும்.

அந்த இடத்தில் மனம் எதையும் பற்றி சிந்திக்காது. எந்த பொருளையும் பற்றி சிந்திக்காது.

நிர் விசாரம்

என்கிறார் பதஞ்சலி.



“வான் கெட்டு, மாருதம் மாய்ந்து,
   அழல், நீர், மண் கெடினும்,
தான் கெட்டல் இன்றிச்
   சலிப்பு அறியாத் தன்மையனுக்கு,
ஊன் கெட்டு, உயிர் கெட்டு,
   உணர்வு கெட்டு, என் உள்ளமும் போய்,
நான் கெட்டவா பாடித்
   தெள்ளேணம் கொட்டாமோ!”

ஊன் மறைந்து , உயிர் மறைந்து , உணர்ச்சிகள் போய் , உள்ளமும் போய் , கடைசியில் நான் என்பதும் போய் விட்டது ...அது ஒரு பெரிய இன்பகரமான நிகழ்வு ...அதை பாடி கொண்டாடுவோம் என்கிறார் மணிவாசகர்.

தன்னை மறந்தாள் , தன் பெயரைக் கூட மறந்து விட்டாள் என்பார் திருநாவுக்கரசர்.


முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்
தலைப்பாட்டாள் நங்கை தலைவன் தாளே.


வெளியில் அலையும் மனதை கட்டி கொண்டுவந்து, தன்னை தானே அறிய முற்படுவது யோகத்தின் மூன்றாம் நிலை.

நிர்விசார சமாதி.

டிவி, செய்தித்தாள், அரட்டை, whatsapp , facebook இவற்றில் மனதை அலைய விடாமல், மனதை உள் நோக்கி திருப்பி , நீங்கள் யார் என்று அறிய தொடங்குங்கள்.

பல ஆச்சரியங்கள் காத்திருக்கும் , உங்களுக்கு.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/144.html

No comments:

Post a Comment