Tuesday, November 21, 2017

யோக சூத்திரம் - 1.49 - அறிவும், வெளி உலக தொடர்பும்

யோக சூத்திரம் - 1.49 - அறிவும், வெளி உலக தொடர்பும் 



श्रुतानुमानप्रज्ञाअभ्यामन्यविषया विशेषार्थत्वात् ॥४९॥

śruta-anumāna-prajñā-abhyām-anya-viṣayā viśeṣa-arthatvāt ॥49॥

Consciousness is characterized by a special relationship to the object. This relationship exceeds the bounds of knowledge that is received and followed. ||49||


śruta = கேட்டல்
anu = அவற்றில் இருந்து
māna = மனம்
anumāna = அனுமானம். யூகித்தல்
prajñā = பிரஞ்ஞா. அறிவு நிலை.
anya = அந்நியம், வெளியில் உள்ளவை
viṣayā = விஷயம் , பொருள்கள்
viśeṣa = விசேஷம்
artha = அர்த்தம்
arthatvāt = அர்த்தங்களின் தத்துவம், அல்லது ஆழ்ந்த உண்மையான அர்த்தம்

பதஞ்சலி வார்த்தைகளை மிக மிக சுருக்கமாக உபயோகப் படுத்துவார். வள்ளுவரின் குறள் போல. ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் பெரிய பொருள் புதைந்து கிடக்கும். நாம் தான் தோண்டி எடுக்க வேண்டும்.

பொதுவாக நாம் இந்த உலகை எப்படி அறிகிறோம் ?

நமது புலன்கள் வாயிலாக. கண்டு, கேட்டு, முகர்ந்து, சுவைத்து, தொட்டு அறிகிறோம். கண், காது , மூக்கு, நாக்கு, தோல் என்ற இந்த ஐந்து புலன்களும் நமக்கு அறிவை பெற்றுக் கொள்ளும் கருவிகளாக இருக்கின்றன. அல்லவா ?

காது கேட்காவிட்டால் இசை, இராகம், தாளம் , பறவைகளின் ஒலி , போன்றவை என்ன என்றே நமக்குத் தெரியாமல் போய் விடும்.

அதே போல் கண் இல்லை என்றால் நிறம் என்றால் என்ன, ஒளி, இருள் என்றால் என்ன என்று தெரியாது.

இப்படி ஒவ்வொரு புலனும் நமக்கு அறிவை பெற்றுத் தருகின்றன.

நமக்கு ஐந்து புலன்கள் இருப்பதால், ஐந்து அறிவு சாத்தியம்.

இவை மட்டும் இல்லாமல், நமக்கு மனம் என்ற ஆறாவது ஒரு புலன் இருக்கிறது.  மனதின் மூலம் நாம் அனுமானித்து சிலவற்றை அறிகிறோம்.

தூரத்தில் புகை வருகிறது என்றால் அங்கே தீ இருக்கும் என்று அறிகிறோம். அந்த தீயை நாம் காணவும் இல்லை, கேட்கவும் இல்லை, வெப்பத்தை உணரவும் இல்லை இருந்தாலும் தீ இருக்கிறது என்று அறிந்து கொள்கிறோம். காரணம் மனம்.

அது யாராவது பொறி. மனம் வேலை செய்வதால் நாம் ஆறறிவு உடைய பிராணிகள். இல்லை என்றால் நாமும் ஐந்து அறிவு ஜீவன்கள் தான்.


மனம் வேலை செய்வதால் மனிதன் என்று அழைக்கப் படுகிறான்.

எனவே, இந்த ஆறு பொறிகளின் வாயிலாக நாம் இந்த உலகை அறிகிறோம்.

அது பொருளாக இருக்கட்டும், மனிதர்களாக இருக்கட்டும், உணர்வு பூர்வமான விஷயமாக இருக்கட்டும், இந்த ஆறில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவையோ நமக்கு  உதவி செய்கின்றன.

சரி தானே ? அதில் சந்தேகம் இல்லையே ?

இப்போது பதஞ்சலி புதிதாக ஒன்றை சொல்கிறார்.

நிர்விசார சமாதியை அடையும் போது , இந்த புலன்களின் வழி இல்லாமால் நம்மால் இந்த உலகை நேரடியாக அறிய முடியும் என்கிறார்.

புலன்களை by paas செய்து விட்டு, நாம் இந்த உலகை நேரடியாக அறிய முடியும் என்கிறார்.

புலன்கள் மந்தமானவை.

ஒரு குறிப்பிட்ட தூரம் தெரியும். ஒரு குறிப்பிட்ட அளவுள்ள சத்தம் தான் கேட்கும். ஓரளவுக்கு பெரிய உருவங்கள்தான் தெரியும். அதை விட சிறியவை கண் முன் இருந்தாலும் தெரியாது. நுண்ணோக்கி (microscope ) வேண்டும்.

அது மட்டும் அல்ல, நமக்கு 5 புலன்கள் இருக்கின்றன என்பதால், பொருள்களுக்கும் ஐந்து குணங்கள்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவற்றிற்கு ஐந்துக்கும் மேற்பட்ட குணங்கள் இருக்கலாம். நம்மால் அவற்றை  அறியவே முடியாது.

கண் தெரியாத ஒருவருக்கு நிறம் என்றால் என்ன என்று எப்படி சொல்வீர்கள்?  சிந்தித்துப் பாருங்கள்.

அது போல,  இந்த புலன்களைத் தாண்டி பல குணங்கள் இருக்கலாம். அவற்றை அறிய இந்த புலன்கள் உதவாது.

மேலும்,

பொருள்கள் என்பது என்ன ?

குணங்களின் தொகுப்பு.

மல்லிகை என்றால் என்ன ?

வெண்மையாக இருக்கும், நல்ல வாசம் தரும், சின்னதாக இருக்கும், பச்சை நிறத்தில் காம்பு இருக்கும் என்று பல குணங்களின் தொகுப்பு தான் மல்லிகை என்பது.

குணங்கள் என்பது நாம் அவற்றை அறிவதில் இருக்கிறது. ஒருவனுக்கு இராகமாக இருப்பது இன்னொருவனுக்கு சத்தமாக கேட்கிறது. பஞ்சு மெத்தை ஒருவனுக்கு, அதே முள் படுக்கை இன்னொருவனுக்கு.

குணங்கள் , பொருளில் இருக்கிறதா, அதை அறியும் நம்மிடம் இருக்கிறதா ? பொருளில் இருக்கிறது என்றால் மிளகாய் காரம் என்று எல்லோரும் சொல்ல வேண்டுமே ? ஒருவன் உரைப்பே இல்லை என்கிறான், ஒருவன் காரம் மண்டையை பிடிக்கிறது என்கிறான்.

எனவே, குணம் என்பது பொருள் மற்றும் நம் அனுபவம் என்ற கலப்பில் இருக்கிறது. இரண்டும் சேரும் போதுதான் ஒரு பொருளின் தன்மை புலப்படுகிறது.

எனக்குள் அந்த தன்மையை எது அறிகிறது என்று யோகி அறிய முற்படுகிறான்.

அப்படி அறியும் போது , புலன்கள் இல்லாமல் , புலன்களைத் தாண்டி அவன் நேரடியாக உலகை அறிகிறான்.

அவன் அறிவு புலன் சார்ந்தது அல்ல. அனுபவம் சார்ந்தது.

அங்கே அறிபவனும், அறியப்படுவதும், அறிதலும் ஒன்றாக இருக்கும். வெளி உலகம் என்று ஒன்று இல்லை.

சிற்றின்பம் என்பதை அறிந்தவர்கள் , இதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

ஆணும் பெண்ணும் இணையும் அந்த கணத்தில், ஆண் இல்லை, பெண் இல்லை, அனுபவமும் இல்லை, ஆனாலும் எல்லாம் இருக்கிறது.

புலன்கள் மூலம் தான், இருந்தாலும் ஒரு கட்டத்தில் புலன்களை கடந்து அந்த அனுபவம் நிகழ்கிறது.

"காதல் மடப் பிடியோடு களிறு வருவன கண்டேன்,
கண்டேன் அவர் திருப் பாதம், கண்டறியாதன கண்டேன் "

என்றார் நாவுக்கரசர்.

யானையை பார்த்தது இல்லையா அவர்.

யானை இல்லை அவர் சொல்ல வந்தது.

ஆண் யானையும், பெண் யானையும் ஒன்று சேரும்போது நிகழும் அந்த இரசவாதம்.

புலன்கள் அற்றுப் போகும் அந்த இடத்தில் உள்ளும் வெளியும் ஒன்றாக சேர்ந்து விடும் (fusion ). அந்த அனுபவம்.

"உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன் " என்பார் சேக்கிழார்.

உணர முடியும்,சொல்ல முடியாது.

"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் , செல்வர் சிவ புரம்" என்பார் மணிவாசகர்.


புலன்கள் மூலம் அறியாத அந்த அறிவு ஒரு விஷேஷ அறிவு என்கிறார்.

"நீக்கமற  நிறைந்து " என்பார்கள். நான் வேறு, இந்த உலகம் வேறு அல்ல. இரண்டும் வேறு அல்ல. ஒன்றே தான். வேறு போல தெரிகிறது , இந்த் புலன்கள் இருப்பதால். இவற்றைத் தாண்டினால், எல்லாம் ஒன்றாகிப் போகும்.

சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/149.html

No comments:

Post a Comment