Friday, April 27, 2018

யோக சூத்திரம் - 2.46 - ஸ்திரம் சுகம் ஆசனம்

யோக சூத்திரம் - 2.46 - ஸ்திரம் சுகம் ஆசனம் 




स्थिरसुखमासनम् ॥४६॥

sthira-sukham-āsanam ॥46॥

sthira = ஸ்திரம் - உறுதியாக

sukham = சுகம்

āsanam  =ஆசனம் ॥46॥

அஷ்டாங்க யோகத்தின் முதல் இரண்டு படிகளை பார்த்தோம் - இயமம், நியமம்.

மூன்றாவது அங்கம் - ஆசனம்.

ஆசனம் என்றால் என்ன?


ஆசனத்தைப் பற்றி இரண்டே வார்த்தைகளில் கூறுகிறார்.


உடலை வளைத்து, நெளித்து, வயிறை உள்ளே இழுத்து, காலை மடக்கி தலையை தொடுவது எல்லாம் ஆசனம் கிடையாது. 

பதஞ்சலி இரண்டே இரண்டு கூறுகளைக் கூறுகிறார்.

ஸ்திரம் - சுகம். அது தான் ஆசனம். 

அப்படினா என்ன?

நீங்கள் உங்கள் உடலின் போக்கை நன்றாக கவனித்துப் பாருங்கள். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மேல்  உங்களால் ஒரு நிலையில் இருக்க முடியாது. சும்மா உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தால் கூட, உடல் நெளியும். காலைத் தூக்கி மேலே வைப்பீர்கள். அப்புறம் மடித்து வைப்பீர்கள். எழுந்து நடப்பீர்கள்.  ஏதாவது செய்து கொண்டே இருப்பீர்கள். 

ஒரு இடத்தில் உடல் நிலையாக இருக்காது. 

"அப்படி ஒன்றும் இல்லையே. நான் நினைத்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஒரு நிலையில் என்னால் இருக்க முடியுமே" என்று சொல்வீர்களானால், யோசித்துப் பாருங்கள், அது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று. 

சுகமாக இருக்குமா ? ஒரே நிலையில் ஒரு அரை மணி நேரம் அசையாமல் இருந்தால்  சுகமாக இருக்குமா ? இருக்காது. 

உறுதியாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் சுகமாகவும் இருக்க வேண்டும். 

ஏன் என்றால்...மனம் உடலைத் தொடரும். உடல் அலைந்து கொண்டே இருந்தால் மனமும் அலையும். உடல் நின்றால் மனம் நிற்குமா என்றால் இல்லை. ஆனால், மனதை ஒரு முகப் படுத்த வேண்டும் என்றால் முதலில் உடலை சமன் செய்ய வேண்டும். 

உடம்பு அலையாமல் இருக்க வேண்டும். அதே சமயம் உடலை கஷ்டப் படுத்தவும் கூடாது. 

உடம்பு எப்போது உறுதியாகவும் சுகமாகவும் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

நிதானமாக சாப்பிட்டு, தேவையான அளவு உடல் உழைப்பு செய்து, வேண்டிய அளவு அதற்கு ஓய்வு கொடுத்தால் அது உறுதியாகவும் சுகமாகவும் இருக்கும். 

எது சுகமாக இல்லையோ அது ஆசனம் இல்லை. காலை மடக்கி பத்மாசனம் போட்டால் வலிக்கிறதா. அப்படி என்றால் உங்களுக்கு அது ஆசனம் அல்ல. மற்றவர்களுக்கு அது ஆசனமாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு அது ஆசனம் அல்ல. 

எந்நேரமும் படுத்து தூங்குவதுதான் சுகமாக இருக்கிறது. அது ஒரு ஆசனமா என்றால், அது உங்களுக்கு ஸ்திர நிலையைத் தருகிறதா ? தராது. தொந்தியும் தொப்பையும் பெருத்து ஒரு நிலை இல்லாமல் அலைய வேண்டி வரும். 

எனவே உடல் உறுதியாகவும் இருக்க வேண்டும். சுகமாகவும் இருக்க வேண்டும். 

உடலை எப்படி சுகமாக இருக்க வைப்பது ?

அடுத்த சூத்திரத்தில் சொல்கிறார். 

நாளை அதைப் பார்ப்போமா?

http://yogasutrasimplified.blogspot.in/2018/04/246.html

Tuesday, April 24, 2018

யோக சூத்திரம் - 2.45 - சரணாகதி

யோக சூத்திரம் - 2.45 - சரணாகதி 



समाधि सिद्धिःईश्वरप्रणिधानात् ॥४५॥

samādhi siddhiḥ-īśvarapraṇidhānāt ॥45॥


samādhi = சமாதி நிலை

siddhiḥ = சித்திக்கும்

īśvara = ஓர் உயரிய சக்தியிடம்

praṇidhānāt  =  = சரண் அடையும் போது  ॥45॥

ஈஸ்வர சக்தியிடம் சரண் அடையும் போது, சமாதி நிலை சித்திக்கும். அல்லது சமாதி நிலையம், புலன்களுக்கு அற்புத சித்தியும் கிடைக்கும். 

ஆஹா...சமாதி அடைய எளிய வழி கிடைத்து விட்டது. சித்தி அடைய சுலபமான வழி கிடைத்து விட்டது. சரணாகதி அடைந்தால் போதும். எல்லாம் அடைந்து விடலாம். இதோ இப்போதே சரணாகதி அடைந்து விடுகிறேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டு விடலாமே.

சரணாகதி அடைவதில் என்ன சிக்கல். சண்டை போடுவதில் தான் சிக்கல். சரண் அடைவதில் என்ன சிக்கல்.

சண்டை போடுவதை விட பெரிய சிக்கல்.

எதற்காக சரண் அடைவது? சமாதி அடைய, சித்தி பெற. எங்கே ஆசை இருக்கிறதோ, அங்கே சரணாகதி இல்லை. நான் சரண் அடைகிறேன், எனக்கு அதைக் கொடு என்றால்  அது வியாபாரம்.

எப்போது எதிர்பார்ப்பு இருக்கிறதோ , அப்போது அது ஒரு வர்த்தகம் தான்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சரண் அடைய முடியுமா ?

ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்பார் திருமூலர்.  இறைவனை அடைய வேண்டும் என்பதும் ஒரு ஆசை தானே. உள்ளதுக்கெல்லாம் பெரிய ஆசை இறைவனை அடைய வேண்டும் என்று நினைப்பது தான். பேராசை. ஆசையை தவிர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே  உலகில் உள்ள மிகப் பெரிய ஒன்றுக்கு ஆசைப் படுவது எப்படி  சரியாகும் ?

மிகப் பெரிய ஆசை, மிகப் பெரிய துன்பத்தில் தான் போய் முடியும்.

இரண்டாவது, சரண் அடைவது என்றால், எல்லாம் நீ பார்த்துக் கொள் என்று சோம்பேறியாக  இருப்பது அல்ல. கிடைத்தவற்றை பிரசாதமாக ஏற்றுக் கொள்வது.

வாழ்க்கை எதைத் தருகிறதோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்வது.

அது வேண்டும், இது வேண்டாம் என்று சண்டை பிடிப்பது
கூடாது.
யோசித்துப் பாருங்கள், நமக்கு கிடைத்த ஏதாவது  ஒன்றை நாம் முழுமையாய்  ஏற்றுக் கொண்டிருக்கிறோமா ?

மற்றவற்றை விடுங்கள்.  நம்மை நாம் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு இருக்கிறோமா ?

நமது மூக்கு சரி இல்லை, பல் வரிசை சரி இல்லை, உயரம் பத்தாது, முடி  கொடுக்கிறது,  உடல் பருமன் அதிகமாக இருக்குறது, அதிக உயரம், கலர் கொஞ்சம்  கம்மி, அறிவு பத்தாது, தொப்பை அதிகமாக இருக்கிறது, என்று நம்மை பற்றி  நமக்கு எவ்வளவு எதிர் எண்ணங்கள் இருக்கிறது.

நம்மையே நம்மால் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாமா மற்றவர்களை  ஏற்றுக் கொள்ளப் போகிறோம் ? அப்புறம் இந்த உலகில் உள்ள  பொருள்கள், நிகழ்வுகள்.

சதா சர்வ காலமும் ஏதோ ஒரு குறையுடனேயே சுத்திக் கொண்டிருக்கிறோம்.

எவ்வளவு பணம் வந்தாலும், எவ்வளவு வசதி வந்தாலும், எவ்வளவு நல்லது நடந்தாலும்  இன்னும் கொஞ்சம் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும், அது சரி இல்லை, இது சரி இல்லை என்று குறை பட்டுக் கொண்டே இருக்கிறோம்.

அப்படி குறை படுவதால் என்ன ஆகிறது ?

நமது மூளை அந்த குறையின் மேலேயே சதா சர்வ காலமும் தன் சக்தியை செலவிடுகிறது.

அதனால் நமது உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன.

நாம் சந்தோஷமாக இருக்கும் போது சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவை நாம்  ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன.

நாம் கவலையோடு, பயத்தோடு இருக்கும் போது சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவை நம்மை பலவீனப் படுத்துகின்றன.

வாழ் நாள் பூராவும்  கவலை, பயம், என்று இருந்தால் உடல் என்ன ஆகும்.

மனமும் உடலும் நைந்து போகும்.

நமக்கு வாழ்க்கையில் கிடைத்தவை எல்லாம் நல்லவையே என்று அவற்றை  எடுத்துக் கொண்டால்  மனமும் உடலும் மிக மிக ஆரோக்கியமாக இருக்கும். புலன்கள் புது சக்தியைப் பெரும்.

அது சித்தி பெற வழி வகுக்கும்.

சித்தி என்பது நீண்ட தூரம் போன பின் கிடைப்பது.

அதன் முதல் படி, வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை இரசிப்பது. இனிமையாக வாழ்வது. குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருக்காமல், எல்லாம் இனிதே என்று இருப்பது.

நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும், இந்த உலகையும் அப்படியே ஏற்றுக் கொள்வது.

யோசித்துப் பாருங்கள். எவ்வளவு ஆனந்தம் என்று.

இன்னும் எழுதலாம். நீங்களே உங்கள் மனக் கண்ணில் நினைத்துப் பாருங்கள்.

எதிர் நீச்சல் போடாதீர்கள். வாழ்க்கையோடு ஒன்றிப் போங்கள் . மிக மிக சுகமாக இருக்கும்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/04/245.html




Saturday, April 21, 2018

யோக சூத்திரம் - 2.44 - இறைவனை அடைய

யோக சூத்திரம் - 2.44 - இறைவனை அடைய 


स्वाध्यायादिष्टदेवता संप्रयोगः ॥४४॥

svādhyāyād-iṣṭa-devatā saṁprayogaḥ ॥44॥

svādhyāyād = தன்னை அறிவதன் மூலம்

iṣṭa = இஷ்ட, விரும்பிய

devatā = தேவன், தேவதை

saṁprayogaḥ = ஒன்றாக முடியும்

கடவுளை அடைய வேண்டும். முக்தி அடைய வேண்டும். கைலாயம் போக வேண்டும். வைகுண்டப் பதவி அடைய வேண்டும். இறைவன் திருவடியில் ஒன்றாக இருக்க வேண்டும். கடவுளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புகிறார்கள்.

அதற்கு என்ன செய்யலாம் ?

பூஜை செய்யலாம், கோவிலுக்குப் போகலாம், தீர்த்த நீராடலாம், முடி கொடுக்கிறேன், காணிக்கை போடுகிறேன் என்று வேண்டிக் கொள்ளலாம், தினமும் சுலோகம், பாடல்கள் பாடலாம், விரதம் இருக்கலாம், பழைய புத்தகங்களை படிக்கலாம்...என்று பெரிய பட்டியல் இருக்கிறது.

இதை எல்லாம் செய்தால் இறைவனை அடைய முடியாது என்கிறார் பதஞ்சலி.

தன்னை அறிவதன் மூலம் தான் விரும்பிய தேவன்/தேவதையோடு ஒன்றாக இருக்கலாம்  என்கிறார்.

அந்த இஷ்ட தேவதை சிவன்/முருகன்/பிள்ளையார்/ சக்தி/விஷ்ணு/அல்லா/இயேசு என்று யாராக  வேண்டுமானாலும் இருக்கலாம்.

யாரை விரும்புகிறீர்களாளோ அவர்களை அடையலாம்.

இன்னும் சொல்லப் போனால், நீங்கள் உங்கள் இஷ்ட தெய்வத்தை அடைவீர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் உங்கள் இஷ்ட தெய்வமாகவே  ஆகி விடுவீர்கள் என்கிறார்.  ஒன்றாக இருக்கலாம் என்கிறார்.

மனிதன் , தான் யார் என்று அறிவதே இல்லை. என்னைப் பற்றி அறிய என்ன இருக்கிறது என்று கேட்கலாம். அது அந்த அறிவின் முதல் படி.

கடவுள் இருக்கிறார் என்று எப்படித் தெரிந்து கொண்டீர்கள்? கடவுளை ஏன் அடைய வேண்டும் ? ஏதோ சொன்னார்கள், செய்கிறேன். காரணம் எல்லாம் தெரியாது என்று  இயந்திர கதியில் செல்லாமல், எதையும் ஏன், எதற்கு என்று ஆராய வேண்டும். நான் யார், ஏன் இதைச் செய்கிறேன், இதன் அர்த்தம் என்ன என்று அறிய வேண்டும்.

தன்னை அறிவததைத் தவிர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.

சிந்தியுங்கள்.


http://yogasutrasimplified.blogspot.in/2018/04/244.html



Friday, April 20, 2018

யோக சூத்திரம் - 2.43 - சுய ஒழுக்கம் - பாகம் 2

யோக சூத்திரம் - 2.43 - சுய ஒழுக்கம் - பாகம் 2



कायेन्द्रियसिद्धिरशुद्धिक्षयात् तपसः ॥४३॥

kāyendriya-siddhir-aśuddhi-kṣayāt tapasaḥ ॥43॥

kāyendriya = காயம் + இந்திரியம். காயம் என்றால் உடம்பு. காயமே இது பொய்யடா என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா ? உடம்பும் புலன்களும்

siddhir = சித்தி

aśuddhi = களங்கங்களை

kṣayāt = விலக்கிய பின்

tapasaḥ = தவத்தின் மூலம் ॥43॥

உடலும் மனமும் அவற்றில் உள்ள அழுக்குகளை தவத்தின் மூலம் நீக்கிய பின், சித்தி அடையும். 

தவறான உணவு பழக்க வழக்கத்தால் எப்படி உடல் மாசு படுகிறது என்று பார்த்தோம். மேலும் ஒரு வகையில் உடம்பு மாசு படுகிறது என்ற இடத்தில் முந்தைய blog முடிந்தது. 

அது என்ன இன்னொரு வழி ?

நம் மனதில் ஏற்படும் அழுந்தங்களால் உடல் மாசு படுகிறது. 

உதாரணமாக, 

கவலை அதிகமானால் சரியாக சாப்பிடத் தோன்றாது. அப்படியே சாப்பிட்டாலும், சரியாக  செரிமானம் ஆகாது. 

கோபம், காமம், பொறாமை போன்றவை ஏற்படும் போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

பல விதமான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் உடலிலேயே தங்கி விடுகின்றன.  ஏன் என்றால்,நம்மால் நம் உணர்வுகளை சரி வர வெளிப் படுத்த முடிவதில்லை. 

மேலதிகாரியின் மேல் கோபம். என்ன செய்ய முடியும் ?

கணவன் மேல் கோபம் - என்ன செய்து விட முடியும்?

அரசாங்கத்தின் மேல் கோபம் - ஒன்றும் செய்ய முடியாது. 

அது போல பொறாமை. "ஐயோ அவனுக்கு கிடைத்து விட்டதே " என்ற பொறாமை , தூங்க விடாது, நிம்மதியாக இருக்க விடாது. அதற்காக, அவனுக்கு கிடைத்ததை தட்டி பறிக்கவா முடியும்? 

இப்படி நம்முள் எழும் பல உணர்ச்சிகளுக்கு வடிகால் இல்லை. உணர்ச்சிகளை கட்டுப் படுத்தும் அல்லது  அவற்றை சமாளிக்க உதவும் ஹார்மோன்கள் தங்கள் வேலையை செய்கின்றன. ஆனால், உணர்ச்சிகளை வெளிக் காட்ட முடியாமல், அந்த ஹார்மோன்கள் செய்வது அறியாது உடலிலேயே தங்கி விடுகின்றன. 

சரி, அதற்கு என்ன செய்வது ?

முதலில் இந்த உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்து விடு பட வேண்டும். அதற்காக உணர்ச்சியற்ற சடப் பொருளாக இருக்க வேண்டும் என்று அல்ல அர்த்தம். 

உணர்ச்சிகளின் மூலத்தை அறிய வேண்டும். அவை எங்கிருந்து பிறக்கின்றன. எப்படி வளர்கின்றன என்று அறிய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அவற்றின் பிடியில் இருந்து  விடுபட வேண்டும். 

உணர்ச்சிகள் நம் மனதை மட்டும் அல்ல, உடலையும் மாசு படுத்துகின்றன என்று அறிய வேண்டும். உணர்வுகளை சம நிலைப் படுத்த வேண்டும். 

அப்போது மனம் மட்டும் அல்ல , உடலும் தூய்மை அடையும். 

அப்போது சிந்தி அடையலாம். 

நிதானமாக யோசித்துப் பாருங்கள்..

உங்கள் உணவு பழக்கங்கள், உங்கள் உணர்வு பழக்கங்களை...அவை இரண்டையும் சரி செய்தால்  உடலும் மனமும் சரியாகும். 

சித்தி கிடைக்கிறதோ இல்லையோ, ஆரோக்கியமான மனமும் உடலும் கிடைக்கும் அல்லவா?

http://yogasutrasimplified.blogspot.in/2018/04/243-2.html

Wednesday, April 18, 2018

யோக சூத்திரம் - 2.43 - சுய ஒழுக்கம்

யோக சூத்திரம் - 2.43 - சுய ஒழுக்கம் 



कायेन्द्रियसिद्धिरशुद्धिक्षयात् तपसः ॥४३॥

kāyendriya-siddhir-aśuddhi-kṣayāt tapasaḥ ॥43॥

kāyendriya = காயம் + இந்திரியம். காயம் என்றால் உடம்பு. காயமே இது பொய்யடா என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா ? உடம்பும் புலன்களும்

siddhir = சித்தி

aśuddhi = களங்கங்களை

kṣayāt = விலக்கிய பின்

tapasaḥ = தவத்தின் மூலம் ॥43॥

உடலும் மனமும் அவற்றில் உள்ள அழுக்குகளை தவத்தின் மூலம் நீக்கிய பின், சித்தி அடையும். 

இந்த சூத்திரத்தில் பல விஷயங்கள் அடங்கி இருக்கின்றன.

பொறுமையாக ஒவ்வொன்றாக பார்ப்போம்.

சித்தி அடையும் = சித்தி என்றால் மிகுந்த சக்தியை பெறுவது. அஷ்டமா சித்திகள் என்று சொல்லுவார்கள்.  அமானுஷ்யமான சக்திகளை பெறுவது.  உடலை விட்டு வெளியில்  செல்வது, சாதாரண கண்ணுக்குத் தெரியாதவற்றை காண்பது, போன்ற சக்திகள். இந்த சக்திகள் நமது புலன்களுக்கு  கிடைக்கும். எப்போது  என்றால்

உடலிலும் மனத்திலும் உள்ள களங்கங்களை களைந்த பின்.

உடலில் நாம் பல விதங்களில் களங்கங்களை  சேர்த்து வைக்கிறோம். அளவுக்கு அதிகமாக உண்பது. தேவை இல்லாதவற்றை உண்பது. புகை, மது, காப்பி, டீ போன்றவற்றை இடை விடாமல் ஒரு நாளில் பல தடவை உட்கொள்வது. காலையில எழுந்தவுடன் ஒரு காப்பி குடிக்காட்டி எனக்கு வேலையே ஓடாது ...என்று பலர்  சொல்லக் கேட்டு இருக்கிறோம். இது போன்ற நஞ்சுகளை  கொஞ்சம் கொஞ்சமாக நம் உடம்புக்குள்ளே நாமே ஏற்றிக் கொண்டிருக்கிறோம்.  மாமிச உணவு, pizzaa , burger என்று நாவுக்கு அடிமையாகி ,உடம்புக்கு ஒவ்வாதவற்றை திணிக்கிறோம்.

நம் உடம்பு முடிந்த வரை இவற்றில் உள்ள நஞ்சுகளை பிரித்து வெளியேற்றும். வெளியேறாத நஞ்சு உடலிலேயே தங்கி விடும்.

ஏன் முழுவதுமாக வெளியேற்றுவது இல்லை ?  அதற்கு கால அவகாசம் வேண்டும்.  அது முதலில் சாப்பிட்ட நஞ்சை வெளியேற்றிக் கொண்டு இருக்கும் போதே  அடுத்த டம்ளர் காப்பியை உள்ளே தள்ளுகிறோம். அது  சரியாவதற்குள்  ஒரு சமோசா, கொஞ்சம் நூடுல்ஸ், என்று இடை விடாமல் எதையாவது  உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கிறோம்.

வீட்டில் பெண்மணிகள் தரையை தண்ணீர் தெளித்து சுத்தம் செய்வார்கள். அப்போது குழந்தைகள்  அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும். "...டேய் கொஞ்ச நேரம் ஒரு  இடத்துல இருடா...தரை காயட்டும் "   என்பார்கள்.  காய்வதற்குள்  அழுக்கு காலை வைத்தால் அந்த அழுக்கு ஆழமாக படியும்.

அது போல, உடம்பு முன் உண்ட உணவில் உள்ள வேண்டாதவற்றை நீக்கும் போது , மேலும் உண்டால், உடம்பு பழைய உணவில் உள்ள நஞ்சை விட்டு விட்டு  புது உணவை கவனிக்க போய் விடும். அப்போது , வெளியேற்றப் படாமல் உள்ள  நஞ்சு உடலிலேயே தங்கி விடும்.

அதை நீக்க ஒரே வழி, பட்டினி கிடப்பதுதான். விரதம் , உபவாசம் என்று சொன்னார்கள்.  விரதம் இருப்பது சொர்கம் போக அல்ல, உடம்புக்கு கொஞ்சம்  ஓய்வு கொடுக்க.

அன்னிக்கு விரதம் இருந்தால், நேரே சுவர்க்கம், இன்னிக்கு விரதம் இருந்தால்  வைகுண்டம்/கைலாயம், இன்னும் சில நாள் விரதம் இருந்தால் கணவனின் ஆயுள் கூடும்  என்றெல்லாம் சொல்லி வைத்தது உடலின் கூறுகளை அறிந்து  கொள்ள முடியாதவர்களுக்காக.

இப்படி தவறான உணவு பழக்கத்தால் உடலில் அசுத்தம் ஏறிக் கொண்டே போகிறது.

அது மட்டும் அல்ல, இன்னும் ஒரு முக்கியமான வழியில் உடலில் அசுத்தம் ஏறுகிறது .

அது என்ன என்று நாளை பார்ப்போமா ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/04/243.html

Saturday, April 14, 2018

யோக சூத்திரம் - 2.42 - திருப்தியும் மன மகிழ்வும்

யோக சூத்திரம் - 2.42 - திருப்தியும் மன மகிழ்வும் 


संतोषातनुत्तमस्सुखलाभः ॥४२॥

saṁtoṣāt-anuttamas-sukhalābhaḥ ॥42॥

saṁtoṣāt = திருப்தியில்

anuttamas = மிகச் சிறந்த

sukha = சுகம், சந்தோஷம், மகிழ்ச்சி

lābhaḥ = கிடைக்கிறது, அடையலாம்  ॥42॥

மன திருப்தியின் மூலம் மிகச் சிறந்த மகிழ்ச்சியை அடையலாம். 

அது தான் தெரியுமே, சாமியாராகப் போய் விடு, எதற்கும் ஆசைப் படாதே, என்று எல்லோரும் சொல்லுவதைத்தானே பதஞ்சலியும் சொல்கிறார். அது எங்களுக்குத் தெரியும். அடுத்த சூத்திரத்துக்குப் போகலாம் என்று என்று நீங்கள் அவசரப் படுவதற்கு முன்....ஓரிரு வார்த்தைகள். 

திருப்தி என்றால் ஏதோ இருப்பதை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுவது என்று அர்த்தம் அல்ல. ஏதேதோ வேண்டும், இருந்தாலும், ஆசைப் படுவது தவறு என்று சொல்லப் பட்டதால், ஆசைகளை அடக்கிக் கொண்டு, அதே சமயம் அந்த ஆசைகள் நிறைவேறாததால் மனதில் ஒரு துக்கத்தையும் ஏந்திக் கொண்டு அலைவது அல்ல. 

அதில் என்ன மகிழ்ச்சி இருக்கும் ?  சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லி விட்டு போன  நரி மாதிரி ஆகி விடக் கூடாது. 

திருப்தி என்றால், இருப்பதில் மகிழ்ச்சி. எனக்கு இது எல்லாம் கிடைத்திருக்கிறது. அதில் மகிழ்ச்சி கொள்வது. 

நாம் என்றாவது நம்மிடம் இருப்பதற்காக மகிழ்ச்சி அடைந்திருக்கிறோமா ?  இந்த உடம்பு, இந்த மூளை, இந்த நாடு, இந்த மொழி, குடும்பம், பிள்ளைகள், கணவன்,மனைவி, நட்பு, உறவு, என்று ஆயிரம் விஷயம் இருக்கிறது மகிழ்ச்சி கொள்ள. ஒரு நாளைக்கு ஒன்று என்று வைத்துக் கொண்டாலும் அத்தனை நாள் இருக்கிறது கொண்டாட. ஒரு வாழ் நாள் போதாது கொண்டாடி முடிய. 

நாம் கொண்டாடுவது இல்லை. 

இருப்பதில் மகிழ்ச்சி இல்லாவிட்டால், இல்லாத ஒன்று நாளை கிடைத்து விட்டால் மட்டும்  மகிழ்ச்சி வந்து விடுமா ? 

உங்களிடம் இன்று இருக்கும் பல விஷயங்கள் , ஒரு காலத்தில் நீங்கள் "அது மட்டும்  கிடைத்து விட்டால் அப்புறம் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்று நினைத்து ஏங்கியவை தான். இப்போது அவை கிடைத்து விட்டன . எங்கே மகிழ்ச்சி ?

இன்று இன்னொரு பட்டியல் இருக்கிறது. 

இந்த சிக்கலில் இருந்து விடுபட்டால், அந்த விஷயம் நடந்து விட்டால் என்று எப்போதும்  ஒரு பட்டியல் இருந்து கொண்டே இருக்கிறது. 

இவை அனைத்தும் நடந்தாலும் மகிழ்ச்சி வரப்போவது இல்லை. 

ஏன் என்றால், மகிழ்ச்சி என்பது வெளியே இல்லை. 

இருப்பது போதும் என்று சுணங்கி இருப்பது அல்ல திருப்தி. இருப்பதை கொண்டாடுவது  திருப்தி. 

கொஞ்சம் மெலிந்தால் நல்லா இருக்கும், கொஞ்சம் எடை போட்டால் நல்லா இருக்கும், கொஞ்சம் சிவப்பாக இருந்தால் நல்லா இருக்கும், இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்தால் நல்லா இருக்கும்,  பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் படித்தால்  மகிழ்ச்சியாக இருக்கும் என்று இருப்பதை எல்லாம் நீங்கள்  புறம் தள்ளி விடுகிறீர்கள். 

இருப்பது எதுவுமே சரி இல்லை என்று மறுதலிக்கிறீர்கள். எந்நேரம் பார்த்தாலும் ஏதாவது ஒரு குறை. 

என்ன நடந்தாலும் சரி, இன்று மகிழ்ச்சியாக இருக்கப் போவது இல்லை என்று வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது நடந்தால், அப்போது மகிழ்ச்சியாக இருப்பேன் என்று  சொல்லும் போது உங்கள் மகிழ்ச்சி என்றோ ஒரு நாள், எதிர் காலத்தில் இருக்கிறது. இன்று , இப்போது மகிழ்ச்சியாக இருக்கப் போவது  இல்லை என்று முடிவுடன் இருக்கிறீர்கள். 

அதை மாற்ற வேண்டும். 

அது வரும் போது வரட்டும். அல்லது வரமாலேயே போகட்டும். 

இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன் என்று முடிவு எடுங்கள். எனக்கு எவ்வளவோ இருக்கிறது  சந்தோஷப்பட. அவற்றைக் கொண்டு நான் இன்று  சந்தோஷமாக இருப்பேன் என்று முடிவு எடுங்கள். 

அது தான் திருப்தி என்று சொல்லுவது. 

எது நடந்தாலும், எது கிடைத்தாலும் அதில் மகிழ்ச்சி கொள்ளுவது. 

வாழ்க்கையை தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள். 

கல்யாணம் பண்ணினால் சந்தோஷமாக இருப்பேன் 

பிள்ளை பிறந்தால் சந்தோஷமாக இருப்பேன். 

பிள்ளைகள் நல்லா படித்தால் சந்தோஷமாக இருப்பேன் 

அதுகளுக்கு ஒரு நல்ல வேலை   கிடைத்தால் ...

அதுகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்து விட்டால் 

அதுகளுக்கு ஒரு பிள்ளை பிறந்து விட்டால்  

என்று வாழ்க்கையை தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள். 

இன்று வாழுங்கள். இது தான் வாழ்க்கை என்று கொண்டாடுங்கள். 

கிடைத்த ஒவ்வொன்றிற்கும் நன்றி சொல்லுங்கள். 

மற்றவர்கள் வாழ்க்கையோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிடாதீர்கள். பல  சிக்கல்களுக்கு  அது தான் காரணம். 

இந்த கணத்தில் இருந்து வாழத் தொடங்குங்கள். எல்லாவற்றிற்கும் சந்தோஷப் படுங்கள். 

Tuesday, April 10, 2018

யோக சூத்திரம் - 2.41 - உடல் பற்றிய சிந்தனை

யோக சூத்திரம் - 2.41 - உடல் பற்றிய சிந்தனை  


सत्त्वशुद्धिः सौमनस्यैकाग्र्येन्द्रियजयाअत्मदर्शन योग्यत्वानि च ॥४१॥

sattva-śuddhiḥ saumanasya-ikāgry-endriyajaya-ātmadarśana yogyatvāni ca ॥41॥

sattva = தெளிவு, தூய்மை

śuddhiḥ = சுத்தம்

saumanasya = மகிழ்ச்சி,

ikāgry = ஏகாக்ரிய =  ஒருமித்த சிந்தனை

endriyajaya = இந்திரிய ஜெய = புலன்களை வெல்லுதல்

ātmadarśana = தன்னை அறிதல்

yogyatvāni = யோகி அடைவான்

ca = மேலும்

மனத் தெளிவு பிறக்கும் போது, மனதில் ஒரு துள்ளலான மகிழ்ச்சியும், ஒருமித்த மன நிலையும் (concentration ), புலன்களை வெற்றி கொள்ளுதலும் நிகழும். 

முந்தைய சூத்திரத்தில் நமக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி சிந்தித்தோம்.

ஒன்று உடலை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். அல்லது, இந்த உடல் சரி இல்லை   என்று அதை சரிப்படுத்த ஏதேதோ செய்கிறோம். நமது உடலை நாமே  ஏற்றுக் கொள்ளாத போது , அதை மற்றவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் ? மற்றவர்களை நம்மை வெறுத்து விடுவார்களோ என்று பயப் படுகிறோம். இந்த உடலை மேலும் மெருகு ஏற்ற பாடு படுகிறோம்.

அது ஒரு புறம் இருக்க, நம் உடலை நாம் சரி இல்லை என்று வெறுத்து ஒதுக்கும் போது, இன்னொரு உடலைத் தேடுகிறோம். அதன் பெயர் காதல், அன்பு என்று நாமே   சொல்லிக் கொள்கிறோம். உண்மையில் அது ஒரு உடல் சார்ந்த  தேவை. அவ்வளவுதான்.

இப்படி உடலுக்கும் மனதுக்கும் ஒரு இடை விடாத போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

தினமும் ஒரே விதமான உணவை உண்டால், உடம்புக்கு நல்லது. ஆனால், மனம் சலிப்புறும். என்ன , தினமும் ஒரே வகை உணவுதானா என்று.

தினம் தினம் புதுப் புது உணவாக உண்டால், மனம் மகிழ்ச்சி அடையும், உடம்பு ஏற்றுக் கொள்ளாது. வயிற்றுக் கோளாறு வரும்.

இந்த உடம்பு, மனம் இதற்கு இடையில் நடக்கும் போராட்டம் மிகப் பெரிய போராட்டம். பெரும்பாலான சமயம் இதை நாம் அறிவது இல்லை.

எத்தனை விளம்பரப் படங்கள், அழகு சாதனப் பொருள்கள், உடைகள் , அலங்காரங்கள், காதல், ஆண் பெண் உறவு பற்றி எவ்வளவு கதைகள், சினிமா...எல்லாம் இந்த உடல் மற்றும் மனம் பற்றிய சிக்கலின் வெளிப்பாடு.

இந்த சிக்கலைத் தாண்டிச்  செல்ல வேண்டும்.

யோகி, இந்த உடலைத் தாண்டிச்  செல்கிறான்.

தன் உடம்பை மட்டும் அல்ல, இன்னொரு உடம்பின் தேவையையும் தாண்டிச் செல்கிறான்.

தனிமை அவனுக்குச் சுகம்.

தனிமை கண்டதுண்டம்மா , அதில் சாரம் இருக்குதம்மா என்பான் பாரதி.

உலகிலேயே மிக இனிமையானது என்று ஒளவையாரை கேட்டபோது , அவள் சொன்னாள் ,இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று.

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்! 
இனிது இனிது ஏகாந்தம் இனிது; 
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்; 
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்; 
அதனினும் இனிது அறிவுள்ளாரைக் 
கனவினும் நனவினும் காண்பது தானே!


இந்த உடலைத் தாண்டிச் செல்லும் போது, மனத் தெளிவு  பிறக்கிறது.அதன் மூலம் துள்ளலான ஒரு  மகிழ்ச்சியும், புலன் அடக்கமும், தன்னை அறிதலும் நிகழும்.

நாம், இந்த உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது மாறினால் தான் , உண்மையில் நாம் யார் என்று அறிய முடியும். நாம், உடலிலேயே கட்டுண்டு கிடக்கிறோம். ஒன்று நம் உடல் அல்லது பிற உடல்.

நீங்கள் உன்னிப்ப்பாக கவனித்துப் பார்த்தால் தெரியும், மகிழ்ச்சியாக  இருக்கும் போது  உடல் பற்றிய சிந்தனை இருக்காது.

தலைவலி வந்தால்தான் தலை பற்றிய சிந்தனை  வருகிறது. இல்லை என்றால்  தலையைப் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

வயிற்று வலி வந்தால், அனைத்து சிந்தனையும் வயிற்றின் மேலேயே இருக்கும்.

வயிற்று வலி இல்லை என்றால் , வயிற்றைப் பற்றி சிந்திப்போமா?

வலி வந்தால் உடல் பற்றிய சிந்தனை என்று அர்த்தம்.

மாத்தி யோசிப்போம். உடல் பற்றிய சிந்தனை இல்லை என்றால் வலி இல்லை என்று அர்த்தம்.

உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளவை.

பெரும்பாலான மனக் குழப்பங்களுக்கு காரணம் உடல் தான்.

தசரத இராஜாவின் முன்னோர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் விதேகன். வி என்றால்  இல்லை என்று அர்த்தம்.

நாயகன் = தலைவன்.

தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் வி-நாயகன்.

விதேகம் என்றால் உடம்பு இல்லாதவன் என்று அர்த்தம் அல்ல, உடம்பு பற்றிய சிந்தனை  இல்லாதவன். உடலைக் கடந்து சென்றவன். தான் என்பது இந்த உடல் அல்ல என்று அறிந்தவன்.

உடலைத் தாண்டி செல்லும் போது புலன்களை வெற்றி கொள்வது தானே நிகழும்.

புலன்களை வென்றால் நாம் யார் என்று அறிவோம். Self Realization என்று சொல்லுவார்களே அது நிகழும்.

உடம்புகளோடு உள்ள தொடர்பு பற்றி சிந்தியுங்கள். பல உண்மைகள் புலப்படும்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/04/241.html



Wednesday, April 4, 2018

யோக சூத்திரம் - 2.40 - உடம்போடு உள்ள தொடர்பு

யோக சூத்திரம் - 2.40 - உடம்போடு உள்ள தொடர்பு 


शौचात् स्वाङ्गजुगुप्सा परैरसंसर्गः ॥४०॥

śaucāt svāṅga-jugupsā parairasaṁsargaḥ ॥40॥

śaucāt = தூய்மை

svāṅga = தங்கள் உடம்போடு

jugupsā = தூர நின்று, விலகி நின்று,

paraira = மற்றவர்களிடம் இருந்து

asaṁsargaḥ = தொடர்பு இன்றி ॥40॥

தங்கள் உடம்போடும், மற்றவர்கள் உடம்போடும் சேராமல் தள்ளி நிற்பார்கள். 

மற்றவர்கள் உடம்பில் இருந்து தள்ளி நிற்கலாம். அது முடியும். நம் உடம்பை விட்டு நாம் எப்படி தள்ளி நிற்க முடியும் ?

நமக்கு  நம் உடம்போடு உள்ள தொடர்பு எப்படி பட்டது ?

சிலருக்கு தங்கள் உடம்பை ரொம்ப பிடிக்கும். "நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்" என்று பெருமிதம் கொள்வார்கள். ஆண்களாக இருந்தால், கண்ணாடி முன் நின்று கையை முறுக்கி "ஹா எப்படி என் தசைகள், 6 பேக் வயிறு " எண்ணி மகிழ்வார்கள். 

சிலருக்கு தங்கள் உடம்பை கண்டாலே பிடிக்காது. முடியை வெட்டுவார்கள்,  டை அடிப்பார்கள்,  பவுடர் பூசுவார்கள், கண் மை , உதட்டுச் சாயம்,  என்று ஏதாவது   செய்து பார்க்க சகிக்கும்படி முயற்சி செய்வார்கள். 

"என்ன செய்தாலும் இந்த தொப்பை குறைய மாட்டேன் என்கிறது" என்று நடையாய் நடப்பார்கள். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அல்ல. வயிறு சுருங்கி  பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று. 

எந்நேரம் பார்த்தாலும்  உடம்பு பற்றிய கவலை. சிலர் அறுவை சிகிச்சை கூட செய்து  கொள்கிறார்கள். வெட்டி, ஒட்டி, ஏதாவது செய்து அழகாக இருக்க வேண்டும்  என்று முயற்சி செய்கிறார்கள். 


சிலருக்கு ஏதாவது  உபாதை இருக்கும். இது மட்டும் இல்லை என்றால், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று அந்த வியாதியைப் பற்றி சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். 


இன்னும் சிலருக்கு வயதாகிறதே என்ற கவலை.  நரை வரும். தோல் சுருங்கும்.  நினைவு தவறும். அது பற்றிய கவலை. 

பெண்களுக்கு வயதானால், கணவன் தங்கள் மேல் அன்பு காட்ட மாட்டார்களோ என்ற கவலை வரும். 

இப்படி , நம் உடல் நம்ம அலைக்கழிக்கும். நமது சிந்தனையை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும். 

யோகிகள், தங்கள் உடலைப் பற்றி கவலைப் படமாட்டார்கள். அது வேறு எவருடைய உடலோ என்று தள்ளி நின்று பார்ப்பார்கள். 

அதற்காக உடலை கவனிக்காமல் விட்டு விட மாட்டார்கள். உடல் ஒரு கருவி. அது நன்றாக இயங்கினால் தான் , அதன் மூலம் செய்ய வேண்டிய காரியங்களை செய்து கொள்ள முடியும். 

உடலை பாதுகாப்பது, அதன் மூலம் இன்பம் அனுபவிப்பது என்பது அல்ல குறிக்கோள். உடல் மூலம் உயரிய நிலையை அடைய வேண்டும். 

ஏணி மூலம்  உயரே போவது போல. ஏணியையே பார்த்துக் கொண்டிருந்தால்  மேலே போக முடியுமா ? அதற்காக ஏணியை சரிவர பராமரிக்காமல் இருந்தால் மேலே போக முடியுமா ?

அது போல நம் உடலை நாம் கையாள வேண்டும்.

சரியா ?

Sunday, April 1, 2018

யோக சூத்திரம் - 2.39 - பற்றற்று இருந்தால்

யோக சூத்திரம் - 2.39 - பற்றற்று இருந்தால் 


अपरिग्रहस्थैर्ये जन्मकथंता संबोधः ॥३९॥

aparigraha-sthairye janma-kathaṁtā saṁbodhaḥ ॥39॥

aparigraha =பற்றற்று

sthairye = உறுதியாக இருந்தால்

janma = பிறவி

kathaṁtā  = காரணம்

saṁbodhaḥ = அறிவு, ஞானம் ॥39॥

பற்றற்று இருந்தால் பிறவி பற்றிய ஞானம் பிறக்கும்.

பற்றற்று இருந்தால் பிறவி பற்றிய ஞானம் பிறக்கும். யாருடைய பிறவி ?

நம் பிறவி மட்டும் அல்ல, அனைத்து பிறவிகளைப் பற்றிய ஞானமும் கிடைக்கும். அது மட்டும் அல்ல, இந்தப் பிறவி, முன் பிறவி, இனி அடுத்து வருவது என்ன என்ற அறிவும் கிட்டும்.

மொத்தமாக சொல்வதானால் இந்த உலகின் மொத்த பிறப்பு, இறப்பு பற்றிய இரகசியம் தெரியும்.

எப்போது என்றால் பற்றறு இருந்தால்.


பற்றறு இருப்பதற்கும் , இந்த ஞானம் பிறப்பதற்கும் என்ன சம்பந்தம் ?

இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் ?


நாம் எதன் மேல் பற்று கொள்கிறோமோ அதை பாதுகாப்பதில், அதை நம்மோடு வைத்துக் கொள்வதில் , அதற்கு எந்த தீங்கும் வந்து விடாமல் இருக்க கவலைப் பாடுவதில் நம்  வாழ் நாள் எல்லாம் செலவழிந்து விடும். அது போய் விடுமோ என்ற பயம். போய் விட்டால் வருத்தம். துக்கம்.

அது பிள்ளையாக இருக்கலாம், கணவன்/மனைவியாக இருக்கலாம், பணம், அதிகாரம், புகழ், அறிவு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நமது எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் அதை நோக்கியே இருக்கும்.

உதாரணமாக, காலில் ஒரு அடி பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நகம் பிய்ந்து வந்து விட்டது. வலியோடு வலி. மருத்துவரை பார்த்து , மருந்து வைத்து கட்டெல்லாம் போட்டாகி விட்டது. வலி குறைந்தாலும்  முற்றிலுமாக போய் விடவில்லை.

நமது சிந்தனை, நோக்கம் எல்லாம் அந்த வலியின் மேலேயே இருக்கும். வேறு எதிலும் நாட்டம் இருக்காது.

ஒரு தலைவலி வந்தால் அது போகும் வரை, அதே சிந்தனையாக இருக்கும்.

அது போலத்தான் ஒவ்வொரு பற்றும். அவை நம்மை கட்டிப் போடுகின்றன.

பற்று வேறு. ஆசை வேறு. அனுபவிப்பது என்பது வேறு.

ஆசை என்பது இல்லாத ஒன்றின் மேல் வருவது. நமக்கும் அது வேண்டும் என்று விரும்புவது. கப்பலில் போக ஆசை, விமானத்தில் business class இல் போக ஆசை.

நாட்டுப் பற்று. மொழிப் பற்று. இனப் பற்று. பற்று என்பது பற்றிக் கொள்வது. விடாமல் இறுக  பற்றிக் கொள்வது. அதுதான் சிறந்தது என்று நினைப்பது. மற்றவை எல்லாம் துச்சம் என்று நினைப்பது. என் மொழிதான் சிறந்தது. என் மதம் தான்  உயர்ந்தது. என் கடவுள் தான் ஒரே உண்மையான கடவுள் என்று கூறுவது.

பிள்ளைகள் மேல் அன்பு இருக்க வேண்டும். பற்று இருக்கக் கூடாது.

இராமன் கானகம் போனபோது கோசலை இறக்கவில்லை. தசரதன் இறந்தான். இராமன் மேல் கோசலை வைத்தது அன்பு. தசரதன் வைத்தது பற்று.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

பற்றற்ற நிலையே பிறப்பை அறுக்கும் என்பார் வள்ளுவர்.

பிற்ப்பு பற்றிய ஞானம் கிடைக்கும் என்கிறார் பதஞ்சலி. ஞானம் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும் ? மீண்டும் பிறவி வேண்டும் என்று விரும்புவோமா ? அல்லது இந்த பிறவிச் சுழலில் இருந்து மீள வழி தேடுவோமா ? அதை நமது விருப்பத்துக்கு  விட்டு விடுகிறார் பதஞ்சலி.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

மெய் பொருள் கண்டவர்கள் , மீண்டும் இங்கு வந்து பிறக்காத வழிகளை கண்டு பிடிப்பார்கள்  என்கிறார் வள்ளுவர்.

கிடைத்தவற்றை அனுபவிக்கலாம். அவற்றின் மேல் பற்று கூடாது.

அது உறவானாலும் சரி. பொருளானாலும் சரி.

பற்று விடும் போது, அறிவு விசாலம் அடையும். என் மதம், என் அறிவு, என் மொழி, என் பிள்ளைகள் என்பதைத் தாண்டி அறிவு நடுப் புள்ளியில் வந்து நிற்கும். சரி தவறு என்பது தெளிவாகத் தெரியும். ஞானத்தின் எல்லை விரியும்.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று கால எல்லைகளைத் தாண்டி அது நிற்கும்.

கொஞ்சம் விட்டு விலகி நின்று பாருங்கள். அதன் சுகம் தெரியும்.


http://yogasutrasimplified.blogspot.in/2018/04/239.html

யோக சூத்திரம் - 2.38 - பிரம்மச்சரியம்

யோக சூத்திரம் - 2.38 - பிரம்மச்சரியம்




ब्रह्मचर्य प्रतिष्ठायां वीर्यलाभः ॥३८॥

brahma-carya pratiṣṭhāyāṁ vīrya-lābhaḥ ॥38॥

brahma-carya = பிரம்மச்சரியம்

pratiṣṭhāyāṁ = நிலை நின்றால்

vīrya = சக்தி

lābhaḥ = இலாபம், அடையலாம் ॥38॥

பிரம்மச்சாரியத்தில் நிலைத்து நின்றால், சக்தியை அடையலாம்.

என்னடா இது ஏதோ சிட்டு குருவி லேகியம் அளவுக்கு வந்து விட்டது. பிரம்மச்சாரியம் , வீரியம், இலாபம் என்று போகிறதே என்று பார்க்கிறீர்களா...பொறுமை.

பிரம்மச்சரியம் என்றால் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது, சிற்றின்பத்தில் ஈடுபடாமல் இருப்பது என்பது அல்ல அர்த்தம்.

பிரம்மச்சரியம் என்றால் பிரமம் + சாரியம் = பிரம்மத்தின் வழி நடப்பவன், பிரம்மமாக நடை போடுபவன் என்று அர்த்தம். இறைவனை நோக்கிச் செல்பவன், இறைவனாகவே நடை போடுபவன் என்று அர்த்தம்.

பின் எதற்கு வீரியம் இலாபம் என்கிறார் ?

மனிதனின் சக்தியின் கீழ் நிலை பாலுணர்வு சார்ந்தது. அது ஒரு விலங்கினைப் போல  கட்டற்று வெளிப்படுவது. அபரிமிதமான சக்தி ஆனால் அது  அந்த சக்தி வீணாக விரயமாகிப் போகிறது.

ஆணுக்கும் சரி,பெண்ணுக்கும் சரி.


மின்சாரம் இருக்கிறது. அதை வைத்தது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உருப்படியாக ஏதேனும் செய்யலாம். அல்லது அதை வைத்து ஊரைக் கொளுத்தலாம்.  பிரம்மச்சரியம் என்பது மனிதனின் அந்த அடிப்படை சக்தியை மேல் நோக்கி நகர்த்தி அதன் மூலம் பல அரிய காரியங்களை செய்வது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவானது மூன்று நிலைகளில் நிகழலாம்.

உடல் அளவில் உறவு இருக்கலாம்.

உடலைத் தாண்டி உடலும் மனமும் கலந்த உறவாக இருக்கலாம்.

இன்னும் ஒரு படி மேலே போய் இரண்டும் வேறல்ல, ஒன்று என்ற நிலை ஒன்று இருக்கிறது. அங்கே உறவு என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. உறவுக்கு இருவர் வேண்டும்.  அங்கே இரண்டும் ஒன்றாகக் கலந்து விடும்.

அர்த்த நாரி என்று கூறுவது அதைத்தான். அதை மறைமுகமாக, இரகசியமாக சொல்லி  வைத்தார்கள்.சிவனும் சக்தியும் ஒன்றென கலந்த நிலை. தெய்வீக நிலை அது.

80 வயதைத் தாண்டிய நாவுக்கரசர், இறைவனே கண்டே தீருவேன் என்று கைலாயம் புறப்பட்டார். இமயமலை அடிவாரம் வந்து  விட்டார். கால்  விட்டது. உடலால்  உருண்டு,கையால் தேய்த்து தேய்த்து செல்கிறார்.

அப்போது அசரீரி சொல்லியது "மனித உடலோடு இறைவனை காண முடியாது. மீண்டு போ" என்று. நாவுக்கரசர் கேட்கவில்லை. பார்த்தே தீருவேன் என்று அடம் பிடித்தார். அப்போது மீண்டும் அசரீரி சொல்லியது, "இங்கே இருக்கும் குளத்தில் மூழ்கி எழு . உமக்கு தரிசனம் தருவோம்" என்றது.

மூழ்கினார். மூழ்கி எழுந்த போது திருவையாறில் இருந்தார். பார்க்கிறார். உலகம் பூராவும் ஆணும் பெண்ணும் சேர்ந்த வடிவில் இருக்கிறது. அது தான் இறை தரிசனம் என்று கூறுகிறார் நாவுக்கரசர்.

காதல் மடப் பிடியோடு களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்

என்று சிலிர்க்கிறார். பத்துப் பாடல் பாடி இருக்கிறார். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

பிரம்மச்சாரியம் என்பது உணர்ச்சிகளை அடக்குவது அல்ல. அதை அடக்கவும் முடியாது. அந்த உணர்வுகளை, அந்த சக்தியை மேல் நிலைக்கு கொண்டு போவதுதான் பிரம்மச்சரியம்.

காமம் யாருக்கு இல்லை ?

அந்த காமத்தை ஞானம் கொண்டு கையாள வேண்டும். வெறும் அறிவு போதாது.

இராவணன் மிகக்  கற்றவன்.  ஆனால்,காமத்தை வெற்றி கொள்ளும் ஞானம் இல்லை. அழிந்தான்.

கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கலாமோ ? என்று கேட்பார் கம்பர்.



சிற்றிடைச் சீதை என்னும்
    நாமமும் சிந்தை தானும்
உற்று, இரண்டு ஒன்றாய் நின்றால்,
    ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்று ஒரு மனமும் உண்டோ?
    மறக்கலாம் வழி மற்று யாதோ?
கற்றனர் ஞானம் இன்றேல்
    காமத்தைக் கடக்கலாமோ?


ஞானத்தின் துணை கொண்டு , காமத்தை வென்று , வையத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டும்.


http://yogasutrasimplified.blogspot.com/2018/04/238.html