Monday, September 18, 2017

யோக சூத்திரம் - 1.38 - மன அமைதி பெற - தூக்கத்தில் வரும் அறிவு

யோக சூத்திரம் - 1.38 - மன அமைதி பெற - தூக்கத்தில் வரும் அறிவு 


स्वप्ननिद्रा ज्ञानाअलम्बनम् वा ॥३८॥

svapna-nidrā jñāna-ālambanam vā ॥38॥


svapna = கனவில்

nidrā = தூக்கத்தில்

jñāna =  ஞானம்

ālambanam = வரும், கிடைக்கும்

vā  = அது

விழித்திருக்கும் போதே ஒண்ணும் புரிவதில்லை. இதில் , தூக்கத்தில், கனவில் வரும் ஞானத்தில் இருந்து என்ன புரியப் போகிறது ?

விழித்திருக்கும் போது நாம் எப்படி அறிவை பெறுகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

யாராவது ஏதாவது சொன்னால், நாம் என்ன செய்கிறோம் ? நமக்கு அந்த விஷயத்தைப் பற்றி நமக்கு ஏதோ ஒரு அபிப்பிராயம் இருக்கும். அந்த புது விஷயம் நமது பழைய அபிப்பிராயத்தோடு ஒத்துப் போனால், "சரிதான்...இது தான் எனக்கு ஏற்கனவே தெரியுமே " என்று அலட்சியமாக விட்டு விடுகிறோம்.

ஒருவேளை புதிதாக சொல்லப்படும் செய்தி நமது பழைய சிந்தனையோடு ஒத்துப் போகவில்லை என்றால்  என்ன செய்வோம் ?

"இதெல்லாம் கதைக்கு ஆகாது"

"நடை முறைக்கு ஒத்து வராது"

"வாழ்க்கையில் கடை பிடிப்பது கடினம் "

"கேக்க நல்லா இருக்கு, ஆனால் இதெல்லாம் செய்ய முடியாது "

என்று தள்ளி விடுகிறோம்.

புதிதாக நாம் எதையும் ஏற்றுக் கொல்வதில்லை.

நீங்கள் பெரிய பக்தராக இருந்தால், யாரவது வந்து கடவுள் இல்லை என்று சொன்னால்,  நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். அவர் எவ்வளவு சொன்னாலும், ஒரு துளி கூட உங்கள் அறிவில் ஏறாது.

நாம் எதையுமே திறந்த மனத்தோடு,  அணுகுவது இல்லை. எல்லாவற்றிக்கும் ஒரு திரை  போட்டிருக்கிறோம். நமக்கு தெரிந்தது, நாம் நம்புவது மட்டும் தான்  உண்மை. மற்றவை எல்லாம் பொய் என்று நினைக்கிறோம்.

நம் நம்பிக்கைக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் நம்மிடம் ஒரு எதிர்ப்பு உண்டாகிறது. சொல்பவர்களிடம் சண்டை போடத் தயாராகிறோம். சில பேர் வன்முறையில் இறங்குகிறார்கள். சிலர் வன்மத்தை மனதிலேயே வைத்துக் கொள்கிறார்கள்.

"அவன் கிடக்கிறான் மடையன். அவனுக்கு என்ன தெரியும்" என்று மனதுக்குள் திட்டுகிறார்கள்.

இந்த எதிர் மறை உணர்வினால் இரண்டு விஷயங்கள் நிகழ்கின்றன.

ஒன்று, நாம் புதிதாக எதையுமே கற்றுக் கொள்வதில்லை. எனவே, நம் அறிவு வளர்வதில்லை. நாம் அறிந்தது, தெரிந்தது, நம்பியதை மட்டுமே மீண்டும் மீண்டும் படிக்கிறோம். ஏற்றுக் கொள்கிறோம். மற்றவற்றை மறுத்து விடுகிறோம். அறிவு வளர்ச்சி என்பது நின்று போகிறது.

இரண்டாவது, நம் கருத்துகளுக்கு எதிர் கருத்தை கொண்டவர்களை வெறுக்கிறோம், அவர்களோடு பிணங்குகிறோம். அவரகள்  மேல் ஒரு கோபமும் எரிச்சலும் கொள்கிறோம்.

இவை நம் மன அமைதியை குலைகின்றன.

எதையும் திறந்த மனத்தோடு ஏற்றுக் கொள்வதன் மூலம், புது புது விஷயங்கள் நமக்கு கிடைக்கின்றன.

அவை நம்மை அறியாமலேயே நமக்குள் இறங்குகின்றன.

அவை, நம்மை அறியாமலேயே நம்முள் ஒரு தாக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அதைத்தான், தூக்கத்தில் கனவில் வரும் ஞானம் என்கிறார்.

நம்மை அறியாமலேயே, நம்முள் தோன்றும் ஞானம்.

அது கனவு மாதிரிதானே.

புது புது  ஞானங்களை உங்களுக்குள்  வர விடுங்கள். பழையனவற்றை தூக்கி  எறியுங்கள்.  எந்த கருத்தையும், ஒரு எதிர் வினையோடு, ஒரு எதிர்போடு சந்திக்காதீர்கள். ஒரு சின்ன குழந்தையின் ஆர்வத்தோடு அணுகுங்கள்.

அது உங்கள் மனதை சுத்தப் படுத்தும்.

உங்கள் அறிவின் ஆழத்தை, அகலத்தை அதிகப் படுத்தும்.

அந்த ஞானம், உங்கள் மன அமைதிக்கு வழி வகுக்கும்.

புது வெள்ளம் பெருகி வரட்டும். வழி விடுங்கள். பாதையை மறைக்காதீர்கள் .

http://yogasutrasimplified.blogspot.in/2017/09/138.html




Friday, September 15, 2017

யோக சூத்திரம் - 1.37 - மன அமைதி பெற - பற்றில்லாதவனை பற்றுக

யோக சூத்திரம் - 1.37 - மன அமைதி பெற - பற்றில்லாதவனை பற்றுக 


वीतराग विषयम् वा चित्तम् ॥३७॥

vītarāga viṣayam vā cittam ॥37॥

vītarāga viṣayam vā cittam ॥37॥

vīta = நிறுத்தி, முடிவு
rāga = ஆசைகள், பற்றுகள்
viṣayam = விஷயங்கள்
vā = மேலும்
cittam = சித்தம்

மன அமைதி பெற , பற்றினை துறந்தவர்களை பற்றிக் கொள்ளுங்கள்.

சூத்திரத்தின் அர்த்தம் பற்றி பிறகு பார்ப்போம்.

நாம் பல சினிமா, டிவி சீரியல், நாவல், கதைகள் எல்லாம் படிக்கிறோம். அவற்றை பார்க்கும் போதோ, படிக்கும் போதோ அவற்றில் உள்ள பாத்திரங்கள் நம்மை பாதிக்கின்றன அல்லவா.

ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவது செய்தால், நமக்கு சிரிப்பு வருகிறது.

வில்லன் நடிகர் கதாநாயகனுக்கோ, கதாநாயகிக்கோ ஏதாவது தீங்கு செய்தால் அவன் மேல் வெறுப்பு வருகிறது. கதாநாயகன் மற்றும் கதாநாயகி மேல் பரிதாபம் வருகிறது.

சிறுவர்கள், James Bond , Bruce Lee போன்ற ஆக்க்ஷன் கதாநாயகர்களை பார்த்து விட்டு  அது போல செய்ய முயல்வார்கள்.

இளைஞர்கள், இளம் பெண்கள் படங்களில் வரும் காதல் காட்சிகளைப் பார்த்து விட்டு, நமக்கும் அது போல ஒரு துணை கிடைத்தால் எப்படி இருக்கும்  என்று மனதுக்குள் கற்பனை செய்து கொண்டு அவர்களோடு கனவில்  காதல் கொள்வார்கள்.

இல்லை என்று சொல்ல முடியுமா ?

கல்லூரிகளில் சில விரிவுரையாளர்கள் (lecturers ) மிக நன்றாக பாடம் நடத்துவார்கள். அடடா, படித்தால் இப்படி படிக்க வேண்டும். என்ன ஒரு ஞானம், என்ன ஒரு தெளிவு. நாமும் அவரைப் போல படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு ஒரு உத்வேகம் (motivation ) வரும் அல்லவா ?

சரி , அதுக்கும் இந்த சூத்திரத்துக்கும் என்ன சம்பந்தம் ?

மனம் அமைதி இழப்பதற்கு காரணம் , விஷயங்களின் மேல் உள்ள பற்று. ஆசை. பொருள்கள் மேல், அனுபவங்களின் மேல் உள்ள ஆசை.

அது எல்லாருக்கும் தெரிகிறது.

ஆனால், ஆசையை விட முடிவதில்லை. துன்பம் என்றாலும், அந்த ஆசைகளை பற்றிக் கொண்டு அல்லாடுகிறோம்.

ஆசையை விட முடியுமா ? ஆசைகளை விட்டு விட்டால், வாழ்க்கை சுவையாக இருக்குமா ? ஆசையை எப்படி விடுவது ?

நாம் இதுவரை எந்த ஆசையையும் விட்டதில்லை. சொல்லப் போனால், ஆசைகளை  வளர்த்துக் கொண்டே போகிறோம். எனவே, ஆசைகளை விடுவது என்பது என்ற ஒன்றே நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

பின் இதற்கு என்ன தான் வழி. ஆசையை விடு, ஆசையை விடு என்று சொன்னால் மட்டும் போதாது. எப்படி விட வேண்டும் என்றும் சொல்ல வேண்டும் அல்லவா ?

அதற்குத்தான் பதஞ்சலி வழி சொல்கிறார்.

நாம் எதைப் பார்க்கிறோமோ, படிக்கிறோமோ, கேட்கிறோமோ அவற்றால் நாம்  பாதிக்கப்படுகிறோம். சில நாம் அறிந்து நடக்கிறது. சில நாம் அறியாமல் நடக்கிறது.

எனவே, ஆசைகளை விட்டவர்களை, துறவிகளை, ஞானிகளை , பெரியவர்களை  அடிக்கடி காணுங்கள், அவர்கள் சொல்வதை கேளுங்கள், அவர்கள் வாழ்க்கை ம் முறையைப் பாருங்கள். அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  நல்ல பழக்க வழக்கங்கள் உங்களை அறியாமலேயே உங்களுக்குள்  வந்து விடும்.

ஆசையை விட வேண்டாம்.

ஆசையை விட்டவர்களை பாருங்கள், அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக  ஆசை உங்களை விட்டு தானே போய் விடும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

பற்றை விட்டவர்களின் பற்றை பற்றிக் கொள்ளுங்கள் என்கிறார் வள்ளுவர்.

ஏன் ? அப்படி பற்றிக் கொண்டால், நாளடைவில் நமக்கும் அந்த பற்றற்ற தன்மை வந்து விடும்.

 நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
   நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே-நல்லார்
   குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ
   டிணங்கி யிருப்பதுவும் நன்று.

என்பார் ஒளவையார்.

நல்லாரை காண்பது, அவர்கள் சொல்வதை கேட்பது, அவர்களைப் பற்றி பேசுவது, அவர்களைப் போல வாழ்வது நல்லது என்கிறார்.

ஏன் ?

அப்படி இருக்கும் போது நம்மை அறியாமலேயே நல்லவை நமக்குள் வந்து குடி ஏறிவிடும் .

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்

கனவினும் நனவினும் காண்பது தானே!

கடவுளை தொழுவதை விட, அறிவுள்ளவர்களை காண்பது என்கிறார். நேரில் பார்க்க முடியாவிட்டால், கனவிலாவது காண வேண்டும் என்கிறார்.

நல்லவர்களின் சேர்க்கை, அறிஞர்களின் சேர்க்கை ஆசையை விட உதவும். அது  துன்பங்களில் இருந்து விடுபட உதவும். அது மன அமைதிக்கு வழி வகுக்கும்.

பெரியாரை துணை கோடல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

நல்லவர்களை. அறிவுள்ளவர்களை தேடித் கண்டு பிடியுங்கள்.

அவர்கள் தொடர்பு, உங்கள் வாழ்வை வசந்தமாக்கும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/09/137.html

Thursday, September 14, 2017

யோக சூத்திரம் - 1.36 - மன அமைதி பெற - உள்ளொளி

யோக சூத்திரம் - 1.36 - மன அமைதி பெற - உள்ளொளி 



विशोका वा ज्योतिष्मती ॥३६॥

viśokā vā jyotiṣmatī ॥36॥

viśokā = சோகம் இல்லாத , கவலை இல்லாமல்

vā = மேலும்

jyotiṣmatī  = ஜோதிமயமான

அது என்ன கவலை இல்லாமல் , ஜ்யோதி மயமான ?

ஒரு சமயப் பெரியவர் ஒருமுறை மிகுந்த கால் வலியால் அவதிப்பட்டார். மருத்துவரிடம் சென்று காண்பித்த போது , மருத்துவர் கூறினார் "உங்கள் காலில் சீழ் பிடித்து இரணமாகி விட்டது. இதை தீர்க்க ஒரே வழி, காலை எடுத்து விடுவதுதான். இல்லை என்றால் அது மேலும் பரவி உயிருக்கே ஆபத்தாகி விடும். காலை எடுக்க கொஞ்சம் செலவு ஆகும். ஒரு ஐம்பதாயிரம் ஆகும் " என்று கூறிவிட்டார்.

அந்த சமயப் பெரியவர் திகைத்துப் போனார். காலை எடுக்க ஐம்பதாயிரம் என்றால், காலைக் கொடுக்க எவ்வளவு வேண்டும் ? எத்தனை இலட்சம் கொடுத்தால் ஒரு கால் கிடைக்கும் ?

ஒரு கால் மட்டுமா ?

கால், கை , கண், இதயம், மூளை, நுரையீரல் என்று ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு தருவது ? எத்தனை கோடி கொடுத்தால் இந்த உடம்பில் உள்ள அனைத்தும் கிடைக்கும் என்று நினைத்துப் பார்த்தார்.

இந்த உடல் விலை மதிப்பற்றது என்று அறிந்து கொண்டார். இது நமக்கு இலவசமாக கிடைத்திருக்கிறது. ஒரு பைசா செலவு செய்யாமல் இதை நாம் பெற்றிருக்கிறோம்.  இது நமக்கு கிடைத்த பரிசு.

சரி, உடல் கூட ஒரு மாதிரி கிடைத்து விடலாம். இப்போதெல்லாம் நிறைய செயற்கை  உறுப்புகள் வருகின்றன. செயற்கை கால், செயற்கை கை என்றெல்லாம் வருகிறது.

உடல் கிடைத்தாலும், உயிர் கிடைக்குமா ?


சரி, உயிரும் கிடைத்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். எத்தனையோ பேர் கோமாவில் கிடக்கிறார்கள். உடல் இருக்கிறது.  உயிர் இருக்கிறது. இருந்தும் என்ன பயன்.

சரி, உடல் இருக்கிறது, உயிர் இருக்கிறது. உடலும் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறது.  நடக்க, பேச, சாப்பிட, என்று வழக்கமான அனைத்து செயல்களும் செய்ய முடிகிறது. ஆனால், Alzheimer போன்ற ஞாபக மறதி இருக்கிறது. பெற்றோர் யார், பிள்ளை யார், மனைவி யார், கணவன் யார், நம் வீடு எது, என்று எதுவும் ஞாபகம் இருப்பதில்லை. கையில் உணவை எடுத்தால் அதை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. யாரவது ஊட்டி விட வேண்டும்.

சரி, இவை எல்லாம் சரியாக இருந்தாலும், மனம் சரியாக இருக்க வேண்டும் அல்லவா ? உலகை, உறவுகளை அறிந்து, அவற்றை அனுபவிக்க மனம் சரியாக இல்லை என்றால்  என்ன செய்வது. நாளும் ஒரு வக்கிரம், கோபம், காமம்,  பொறாமை என்று குப்பை மூடிக் கிடந்தால் வாழ்க்கை சுவைக்குமா ?

யோசித்துப் பாருங்கள்.

நம்மிடம் எவ்வளவு பெரிய விலை மதிக்க முடியாத சொத்து இருக்கிறது.

நமக்குள் ஒளி விடும் அந்த சக்தி , நம்மை நாளும் வழி நடத்துகிறது.

நல்லது கெட்டது எது என்று சொல்கிறது.

ஆபத்தில் இருந்து நம்மை விலகி நடக்க வைக்கிறது.

இன்பங்களை இரசிக்க வைக்கிறது.

துன்பத்தில் இருந்து விடுபட சிந்திக்க வைக்கிறது.

அந்த சக்திதான் "ஒளிமயமான" ஒன்று என்று பதஞ்சலி கூறுகிறார்.

"உள்ளொளி பெருக்கி " என்பார் மணிவாசகர்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் 
சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி 
உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த 
செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் 
எங்கெழுந்தருளுவது இனியே!

அதன் ஆற்றல் அபரிமிதமானது. அதற்கு முன்னால் இந்த பணம், காசு, நிலம், நீச்சு என்பதெல்லாம் ஒன்றும் இல்லை.


அந்த சக்தி நம்மிடம் இருக்கிறது என்று நாம் அறியும் போது , இந்த உலக பொருள்கள் அற்பமாகத் தெரியும்.

பல கோடிக்கு சொந்தமான ஒருவன், ஒரு பத்து ரூபாய் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷப் படுவான் ? கிடைத்தால் சந்தோஷம். கிடைக்காவிட்டால் ஒன்றும் பெரிய துக்கம் இல்லம். எவ்வளவோ இருக்கிறது. இது என்ன ஜுஜுபி என்று இருப்பான் அல்லவா ? ஆனால் அது ஒரு பிச்சைக்காரன் என்றால் , அந்த பத்து ரூபாய் அவனுக்கு ஒரு பெரிய விஷயம்.


நாம் உலகில் உள்ள பொருள்களின் பின்னால் போகிறோம். அது வேண்டும், இது வேண்டும் என்று அலைகிறோம் . காரணம், நம்மிடம் இருக்கும் செல்வத்தின் மதிப்பு தெரியாமல். அந்த பிச்சைக் காரனைப் போல அலைகிறோம் .

நீங்கள் உலகில் விலை மதிக்க முடியாத சொத்துகளின் முதலாளி. இதை நீங்கள் அறிந்தால்,இந்த உலகின் மொத்த பொருள்களும் ஒரு பெரிய விஷயம் இல்லை என்று புரிய வரும்.

அப்போது , ஆசையும், விரக்தியும் தொலையும்.

மனம் மிகுந்த மகிழ்ச்சியில், அமைதியாக இருக்கும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/09/136.html


Tuesday, September 12, 2017

யோக சூத்திரம் - 1.35 - மன அமைதி பெற - பாகம் 2

யோக சூத்திரம் - 1.35 - மன அமைதி பெற - பாகம் 2




विषयवती वा प्रवृत्तिरुत्पन्ना मनसः स्थिति निबन्धिनी ॥३५॥

viṣayavatī vā pravr̥tti-rutpannā manasaḥ sthiti nibandhinī ॥35॥


viṣaya = விஷயங்களின்
vatī = உணர்வுகளை
vāt = மேலும் 
pravrtti = அலைகளை, சலனங்களை 
utpannā = உற்பத்தி செய்யும்
manasaḥ = மனதில் , அறிந்து
sthiti = நிதானமாக
nibandhanī = தொகுத்து

விஷயங்கள் மற்றும் அவை தரும் அனுபவங்களை மனதில் நிறுத்தி நிதானமாக ஆராய்வதன் மூலம் சித்த சலனங்களை நிறுத்த முடியும் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்

அதை இங்கே காணலாம்

http://yogasutrasimplified.blogspot.in/2017/09/135.html


அதன் தொடர்ச்சியாக, மேலும் சிந்திப்போம். 

நம்மை ஒருவர் திட்டி விடுகிறார் அல்லது அவமானப் படுத்தி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். 

உடனே அவர் மேல் கோபம் வருகிறது. அவருக்கு ஏதாவது தீமை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. பதிலுக்கு திட்டுகிறோம், அல்லது கடுமையான சொற்களை கூறுகிறோம். அவர்களுக்கு ஏதாவது தீமை வர வேண்டும் என்று விரும்புகிறோம். 

இப்படி சொல்லி விட்டானே, அவனை எவ்வளவு நல்லவன் என்று நம்பினேன் , இப்படி செய்து விட்டானே என்று கிடந்து புலம்புகிறோம். 

மனதில் அலை அடிக்கிறது. 


நடந்து முடிந்த சம்பவம் நம்மை அலைக்கழிக்கிறது. 


இப்படி ஒன்று நடந்தால் பரவாயில்லை. வீட்டில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சிக்கல்கள், மாமியார், மருமகள், பிள்ளைகள், உறவுகள், நன்பர்கள், அலுவலகத்தில் உயர் அதிகாரிகள், கீழே வேலை செய்பவர்கள், உடன் இருப்பவர்கள் என்று ஆயிரம் வழிகளில் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. 

ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் இழுத்துக் கொண்டு போகின்றது. ஒன்று ஓய்ந்தால் இன்னொன்று புறப்படுகிறது. 

எப்போதும் நம்மை ஒரு மன அழுத்தத்திலேயே வைத்து இருக்கின்றன. 

இவர்களை நாம் கட்டுப் படுத்த முடியாது. அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். 

பின், இதில் இருந்து விடுபட வழி என்ன ?


இந்த அவமானங்கள், சிறுமைப் படுத்துதல் போன்றவை ஏன் நம்மை வருத்துகின்றன ?

நான் அறிவாளி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன். மற்றவன் என்னை முட்டாள் என்றால் எனக்கு கோபம் வருகிறது. என்னுடைய எண்ணங்களுக்கும் , மதிப்பீடுகளுக்கு அவனுடைய எண்ணங்களுக்கும் மதீப்பீடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி தான் இந்த கோபம் மற்றும் கவலைக்கு காரணம். 

என் மதிப்பீடு சரிதானா என்று நான் சிந்திக்க வேண்டும். ஒரு வேளை அவன் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம்.  ஒரு வேளை அது சரியாக இருந்தால் நான் என்னை முன்னேற்றிக் கொள்ள முயல வேண்டும். ஒரு வேளை அவன் சொல்வது தவறாக இருந்தால், நான் ஏன் கவலைப் படவேண்டும். தவறு செய்தவன் அவன் தானே.

இதில், யார் சரி , யார் தவறு என்பது அல்ல கேள்வி. 

நமது கவலைகளுக்கு, துன்பங்களுக்குக் காரணம் நம் எண்ணங்களே. நமது மதிப்பீடே காரணம் என்று அறிந்து கொண்டால், நமக்கு ஒரு எண்ணம் / மதிப்பீடு இருப்பதைப் போல மற்றவர்களுக்கும் இருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஆயிரம் பேர் ஆயிரம் அபிப்ராயம்  வைத்து இருந்தால் அதில் சில நம்மோடு ஒத்துப் போகும். சில ஒத்துப் போகாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

இவற்றை அறியும் போது , மற்றவர்களின் எண்ணங்கள் நம்மை பாதிக்காது. இல்லை என்றால், யார் என்ன சொன்னாலும் உடனே மேலும் கீழும் குதித்த்துக் கொண்டு இருப்போம். 

சொல்பவர்கள் சொல்லி விட்டுப் போகட்டும். நீங்கள் உங்கள் மன அமைதியை இழக்காதீர்கள். 

கேள்விப் படும் எல்லாவற்றிற்கும் நீங்கள் எதிர் வினை புரிய வேண்டாம் (reaction ). அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவும் வேண்டாம். மறுக்கவும் வேண்டாம். அது அவர்கள் எண்ணம் என்று விட்டு விட்டுப் போய் விடுங்கள். 

அவ்வளவுதான். 

மனம் அமைதி அடையும் போது , தெளிவு பிறக்கும். அந்த தெளிவில் இருந்து இன்பம் தோன்றும். 


http://yogasutrasimplified.blogspot.in/2017/09/135-2.html


Monday, September 11, 2017

யோக சூத்திரம் - 1.35 - மன அமைதி பெற

யோக சூத்திரம் - 1.35 - மன அமைதி பெற 




विषयवती वा प्रवृत्तिरुत्पन्ना मनसः स्थिति निबन्धिनी ॥३५॥

viṣayavatī vā pravr̥tti-rutpannā manasaḥ sthiti nibandhinī ॥35॥


viṣaya = விஷயங்களின்
vatī = உணர்வுகளை
vāt = மேலும்
pravrtti = அலைகளை, சலனங்களை
utpannā = உற்பத்தி செய்யும்
manasaḥ = மனதில் , அறிந்து
sthiti = நிதானமாக
nibandhanī = தொகுத்து

ஏதோ ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத வார்த்தைகளைப் போல இருக்கிறது அல்லவா ?

நாம் சேர்ப்போம்.


நமக்கு சில விஷயங்கள் பிடிக்கிறது. சில பிடிப்பதில்லை. சில பேரை கண்டால் சந்தோஷமாக இருக்கிறது. சிலரை நினைத்தாலே கோபமும் எரிச்சலும் வருகிறது. சில அனுபவங்கள் சுகமாக இருக்கிறது. சில வருத்தத்தை  கொண்டு வருகின்றன.


நல்லதோ, கெட்டதோ, சுகமோ , துக்கமோ எதுவாக இருந்தாலும் அவை மனதில்  அலைகளை கிளப்பி விடுகின்றன.

நல்லவை, சுகமானவை என்றால் அவை மீண்டும் மீண்டும் வேண்டும் என்று ஆசை பிறக்கிறது. இன்னும் அதிகம் வேண்டும் ஆசை பிறக்கிறது. ஒரு வேளை  மீண்டும் கிடைக்காதோ என்று கவலையும் பயமும் பிறக்கிறது.


கெட்டவை , தீயவை என்றால் அவை மீண்டும் வராமல் இருக்க மனம் ஆசைப் படுகிறது. வந்தால் என்ன செய்வது என்று யோசனை செய்கிறது. வரமால் எப்படி  காத்துக் கொள்வது என்று சிந்திக்கிறது.

எப்படி இருந்தாலும், அனைத்து விஷயங்களும், அனுபவங்களும் மனதில் எண்ண அலைகளை  தூண்டி விட்டுக் கொண்டே இருக்கின்றன.

சித்தம் கலங்கிக் கொண்டே இருக்கிறது. கலங்கிய சித்தத்தில் ஒரு தெளிவும் பிறக்காது.

சரி.

விஷயங்களையும், அனுபவங்களையும் விட்டு விட முடியுமா என்றால் அதுவும் முடியாது.

பின் என்னதான் வழி ? அனுபவிக்கவும் வேண்டும், ஆனால் அதனால் பாதிப்பும் இருக்கக் கூடாது என்றால் எப்படி முடியும் ?

முடியும். பதஞ்சலி வழி சொல்கிறார்.

"அனுபவங்களை அறிவதன் மூலம்"

என்கிறார்.

அது என்ன அனுபவங்களை அறிவதன் மூலம் ?

உங்களுக்கு தலை வலிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே என்ன செய்வீர்கள் ? தலை வலி தைலம் இருந்தால் எடுத்து போடுவீர்கள். சில பேர்  கை பக்குவமாக ஏதாவது அரைத்து பத்து போடுவார்கள். சிலர் சூடாக ஒரு  காப்பி குடித்தால் சரியாகி விடும் என்று காப்பி குடிப்பார்கள். சிலர், தலையை இறுக்க துண்டால் கட்டுவார்கள்.

வழி எதுவாக இருந்தாலும், அந்த வலியில் இருந்து உடனடியாக விடுதலை பெற வேண்டும் என்பதே நோக்கம்.

வலியோடு போராடுவீர்கள். எப்படியாவது அதை விரட்டி விட வேண்டும், அதில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்று நினைப்பீர்கள்.

சரி தானே.


மாறாக, இப்படி செய்து பாருங்கள் ஒரு முறை.

வலி எங்கே இருக்கிறது. எந்த இடத்தில் இருக்கிறது. எவ்வளவு அழுத்தமாக வலிக்கிறது, வலி விட்டு விட்டு வருகிறதா, அல்லது தொடர்ந்து இருக்கிறதா,  வலிக்கும் போது வேறு என்ன செய்கிறது என்று வலியோடு ஒன்றி இருங்கள்.  அதை விட்டு விலக வேண்டும், அதை விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைக்காமல். உங்கள் கவனம் முழுவதையும் அந்த வலியின் மேல் வையுங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், வலி போகிறதோ இல்லையோ, அது உங்களை  சிரமப் படுத்தாது. வலி இருக்கும். ஆனால் அது உங்களை பாதிக்காது.


நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு வலியோடு போராடுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அது வலிமை பெறும் . வலியோடு ஒன்றி இருங்கள். வலி போய் விடும்.

வலி மட்டும் அல்ல, மகிழ்ச்சியாக இருக்கும் போது , எது மகிழ்ச்சி தருகிறது, மகிழும் போது என்ன நிகழ்கிறது,  எது சந்தோஷத்தை தூண்டுகிறது என்று மகிழ்ச்சியைப் பற்றி  ஆராயுங்கள்.

நாளடைவில் துன்பமும் இன்பமும் வரும் ஆனால் அவை உங்களை பாதிக்காது. வந்தாயா, வா என்று , போகிறாயா போ என்று சொல்லும் பக்குவம் வரும்.

நாம் வேறு , நம் அனுபவம் வேறு என்று நாம் பிரித்து விடுகிறோம். நாமே அனுபவம் என்று ஆகும் போது அனுபவிப்பன் என்று யாரும் கிடையாது. எனவே அனுபவமும் கிடையாது.

அனுபவம் இல்லாத இடத்தில் மன சஞ்சலங்கள் வராது.

லட்டை வாயில் போட்டவுடன் கரைகிறதா ? சந்தோஷமாக இருக்கிறதா. ஒரு நிமிடம் நிறுத்தி யோசித்துப் பாருங்கள். எது சந்தோஷம் ? லட்டா ? வாயில் உள்ள சுவையா ? சுவை என்றால் அது எங்கே இருக்கிறது ? லட்டிலா ? நாக்கிலா ? மூளையிலா ? மனத்திலா ?

சிந்தித்துப் பாருங்கள். எங்கிருந்து அந்த இன்பம் வருகிறது ? வெளியில் இருந்தா ? உள்ளிருந்தா ? அல்லது இரண்டும் சேரும் ஒரு புள்ளியில்லா ? இரண்டும் கலக்கும் ஒரு புள்ளி என்றால் அது எது ? அது என்ன ?


அனுபவிக்கப் படும் பொருள்,
அனுபவிப்பவன்,
அனுபவம்

இந்த மூன்றும் ஒன்றாக கலந்து ஒரு புள்ளியில் நிற்கும். அதை அறிந்து கொண்டால், இன்பமும் துன்பமும் இல்லை.

" இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே" என்பார் மணிவாசகர்.

"ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்" என்பார் அதிவீரராம பாண்டியர் வெற்றி வேற்கையில் .


"அல்லும் பகலுமில்லாச்  சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்" என்பார் அருணகிரிநாதர்.

அல்லும் பகலும் என்றால் இரவும் பகலும் என்று அர்த்தம். உள் அர்த்தம் துன்பமும் (இரவு) இன்பமும் (பகல்) என்று பொருள்.

இரண்டும் அற்று சும்மா இருக்க வேண்டும் என்கிறார்.

வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
 பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச்
 சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
 போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.

அனுபவங்களோடு ஒன்றுங்கள்.

நல்ல சூரிய உதயத்தைப் பார்த்தால் "ஆகா என்ன அழகு " என்று நினைக்காதீர்கள்.  அந்த அழகோடு ஒன்றுங்கள்.

அந்த அழகும், அந்த  அழகு தரும் அனுபவமும் உங்களுக்குள் ஒன்றாகி விடும்.

சிந்தித்துப் பாருங்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/09/135.html

Sunday, September 10, 2017

யோக சூத்திரம் - 1.34 - மன அமைதி மூச்சு பயிற்சியின் மூலம்

யோக சூத்திரம் - 1.34 - மன அமைதி மூச்சு பயிற்சியின் மூலம்



प्रच्छर्दनविधारणाअभ्यां वा प्राणस्य ॥३४॥

pracchardana-vidhāraṇa-ābhyāṁ vā prāṇasya ॥34॥



pracchardana = வெளியே விடுவதன் மூலம்
vidhāraṇa = நிறுத்தி
ābhya = மேலும்
vā = அல்லது
prāṇasya = மூச்சை

மூச்சை வெளியேற்றி, நிறுத்தி பின் உள் இழுத்து பின் நிறுத்தி , இப்படி செய்வதன் மூலம் அலையும் மனதை நிலை கொள்ளச் செய்ய முடியும்.

எழுதும் போதும் , பேசும் பொழுதும் சில விஷயங்களை பட்டியல் போட வேண்டும் என்றால்  எது  முக்கியமோ அதை முதலில் சொல்ல வேண்டும். முக்கியத்துவம் குறைந்தவற்றை கடைசியில் சொல்ல வேண்டும். 

பெரியவர்களை முதலில் சொல்லி, மற்றவர்களை பின்னால் சொல்ல வேண்டும்.

இராம இலக்குவன் என்று சொல்ல வேண்டும். இலக்குவன் இராமன் என்று சொல்லக் கூடாது. இலக்கணப்படி அது சரியாக இருக்கலாம். ஆனால் அது முறையன்று.

திருமண பத்திரிக்கை அடிக்கும்போது முதலில் தாத்தாவின் பெயரைச் சொல்லி, அப்பாவின் பெயரைச் சொல்லி, பின்னால் மணமகன் பெயரைச் சொல்ல வேண்டும்.

அதே போல காரியங்களை சொல்ல வேண்டும் என்றால், எதை முதலில் செய்ய வேண்டுமோ  அதை முதலில் சொல்ல வேண்டும். கடைசியில் செய்ய வேண்டியதை  கடைசியில் சொல்ல வேண்டும்.

கடைக்குப் போய் சாமான் வாங்கி வா என்று சொல்லலாம்.

சாமான் வாங்கி கடைக்குப் போ என்று சொன்னால் நல்லாவா இருக்கிறது ?

அது போல, இங்கே பதஞ்சலி சொல்கிறார்....

மூச்சை வெளியில் விட்டு, உள்ளே இழுத்து நிறுத்துவதன் மூலம் அலையும் மனதை  அலை பாயாமல் இருக்கச் செய்ய முடியும் என்கிறார்.

முதலில் மூச்சை வெளியேற்ற வேண்டும். முடிந்தவரை வெளியேற்ற வேண்டும். நுரையீரல் காலியாக வேண்டும். மூச்சை வெளியே விட்ட பின். சிறிது நேரம்  நிறுத்துங்கள். உடனே மூச்சை உள்ளே இழுக்காதீர்கள்.

சில நொடிகள் தாண்டி, பின் மெல்லமாக உள்ளே இழுங்கள். எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு.

உள்ளே இழுத்த பின், உடனே வெளியே விடாதீர்கள். கொஞ்ச நேரம் நிறுத்துங்கள்.

பின் மீண்டும் மூச்சை வெளியேற்றுங்கள்.

இப்படி செய்வதன் மூலம் மனதை ஒருமுகப் படுத்த முடியும் .


அதுத்த முறை மனதில் சலனம் ஏற்பட்டால், கோபமோ, துக்கமோ, காதலோ, காமமோ,  எரிச்சலோ, சோகமோ, ஏற்பட்டால் இதை செய்து பாருங்கள்.

மூச்சை முழுவதுமாக வெளியேற்றி, சிறிது நேரம் நுரையீரலை காலியாக வைத்து இருந்து  பின் முழுவதும் நிரப்பி சிறிது நேரம் வைத்திருந்து பின் வெளியேற்றி....

இப்படி சில முறை செய்தால், எந்த மன அழுத்தமும் போய் விடும்.

அது எப்படி மூச்சை இழுத்து, நிறுத்தி, விட்டு, நிறுத்தினால் மன அழுத்தம் போகும் ?

நம் மனதின் சிந்தனை ஓட்டம் நமது சுவாசத்தை பொறுத்தே அமைகிறது.

ஒவ்வொரு மன நிலைக்கும் ஒரு வைத்த சுவாச நிலை இருக்கும்.

மகிழ்ச்சியாக இருக்கும் போது மூச்சு ஒரு விதமாக ஓடும்.

துக்கமாக இருந்தால் இன்னொரு விதமாக.

அதே போல், கோபம் வரும் போது மூச்சு வேக வேகமாக வரும். காமத்திலும் அப்படித்தான்.

மேலே சொன்ன மாதிரி மூச்சை வெளியேற்றி, நிறுத்தி, உள் இழுத்து நிறுத்தினால் ....அது எந்த ஒரு மன நிலையோடும் சேர்ந்த ஒன்று அல்ல. எனவே அப்படி  செய்யும் போது கோபம், துக்கம், மகிழ்ச்சி, எரிச்சல் என்று எதுவும் இருக்காது. எந்த மன நிலையில் இருந்தாலும், அது மாறி விடும்.

மன அழுத்தம் ஏற்படும் போது , மனச் சோர்வு ஏற்படும் போது இப்படி செய்து பாருங்கள்.

யோக சூத்திரங்களை நம்ப வேண்டாம். நீங்களே செய்து பார்த்து அறிந்து கொள்ளலாம்.

எளிய அற்புதமான வழி. காலணா காசு செலவழிக்க வேண்டாம்.

இருந்த இடத்திலேயே செய்து பார்க்கலாம்.

செய்து பாருங்கள்.

மேலும் சிந்திப்போம்.

Friday, September 8, 2017

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 5

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 5


मैत्री करुणा मुदितोपेक्षाणांसुखदुःख पुण्यापुण्यविषयाणां भावनातः चित्तप्रसादनम् ॥३३॥

maitrī karuṇā mudito-pekṣāṇāṁ-sukha-duḥkha puṇya-apuṇya-viṣayāṇāṁ bhāvanātaḥ citta-prasādanam ॥33॥

மனம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும் ?

மனம் பல விதங்களில் அலைக் கழிக்கப்படுகிறது. துக்கம், சோகம், பயம், படபடப்பு,  விரக்தி, எரிச்சல், கோபம், காமம், பொறாமை, துவேஷம் என்று பலப் பல விதங்களில் மனம் அல்லாடுகிறது.

உடலை நோய் பிடிப்பதைப் போல, மனதை இவை பிடித்து ஆட்டுகின்றன.

இதனால் மனம் ஓயாத சஞ்சலத்தில் இருக்கிறது.

இதில் இருந்து எப்படி விடுபடுவது.

மிக நீண்ட பட்டியலைத் தருகிறார். 14 வழிகள் சொல்கிறார். அவை என்னனென்ன என்று பார்ப்போம்.

இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு மேலானவைகளோ உங்களுக்குத் தேவைப் படலாம்.

அவை என்னென்ன ?


maitrī =  அன்பு, நட்பு , அணுக்கத் தன்மை

karuṇā = கருணை

mudito = மகிழ்ச்சி, சந்தோஷமாக இருத்தல்

upekṣana = நடுவு நிலைமை

sukha = சுகம், ஆரோக்கியம்

duḥkha = துக்கம்

puṇya = புண்ணியம்

apuṇya = பாவம்

viṣayānam = சூழ்நிலை

bhāvanātaḥ = பயிற்சி, வளர்த்தல், பழகுதல்

citta = சித்தம்

prasādanam = தெளிவு, அமைதி, இணைந்திருத்தல்

முதல் வழி, நம்மை விட மகிழ்ச்சியாக உள்ளவர்களிடம் மகிழ்வோடு பழகுவது. அதாவது, நம்மை விட  உயர்தவர்கள் மேல் பொறாமை கொள்ளாமல் இருத்தல். 

இரண்டாவது, நம்மை விட தாழ்ந்தவர்களிடம் கருணையோடு இருத்தல். இரக்கம் இல்லை. கருணை.  கருனை என்பது அன்பு சார்ந்தது. 

மூன்றாவது, நல்லொழுக்கம் கொண்டவரை காணும்போது மகிழ்ச்சி.

நான்காவது, தீயவைகளிடம் விருப்பு வெறுப்பு அற்று இருப்பது. 

இதுவரை பார்த்தோம். 

அடுத்தது ஐந்தாவது,  

மூச்சை வெளியே விட்டு, உள்ளே இழுத்து நிறுத்துவதன் மூலம். 

எழுதும் போதும் , பேசும் பொழுதும் சில விஷயங்களை பட்டியல் போட வேண்டும் என்றால்  எது  முக்கியமோ அதை முதலில் சொல்ல வேண்டும். முக்கியத்துவம் குறைந்தவற்றை கடைசியில் சொல்ல வேண்டும். 

பெரியவர்களை முதலில் சொல்லி, மற்றவர்களை பின்னால் சொல்ல வேண்டும்.

இராம இலக்குவன் என்று சொல்ல வேண்டும். இலக்குவன் இராமன் என்று சொல்லக் கூடாது. இலக்கணப்படி அது சரியாக இருக்கலாம். ஆனால் அது முறையன்று.

திருமண பத்திரிக்கை அடிக்கும்போது முதலில் தாத்தாவின் பெயரைச் சொல்லி, அப்பாவின் பெயரைச் சொல்லி, பின்னால் மணமகன் பெயரைச் சொல்ல வேண்டும்.

அதே போல காரியங்களை சொல்ல வேண்டும் என்றால், எதை முதலில் செய்ய வேண்டுமோ  அதை முதலில் சொல்ல வேண்டும். கடைசியில் செய்ய வேண்டியதை  கடைசியில் சொல்ல வேண்டும்.

கடைக்குப் போய் சாமான் வாங்கி வா என்று சொல்லலாம்.

சாமான் வாங்கி கடைக்குப் போ என்று சொன்னால் நல்லாவா இருக்கிறது ?

அது போல, இங்கே பதஞ்சலி சொல்கிறார்....

மூச்சை வெளியில் விட்டு, உள்ளே இழுத்து நிறுத்துவதன் மூலம் அலையும் மனதை  அலை பாயாமல் இருக்கச் செய்ய முடியும் என்கிறார்.

முதலில் மூச்சை வெளியேற்ற வேண்டும். முடிந்தவரை வெளியேற்ற வேண்டும். நுரையீரல் காலியாக வேண்டும். மூச்சை வெளியே விட்ட பின். சிறிது நேரம்  நிறுத்துங்கள். உடனே மூச்சை உள்ளே இழுக்காதீர்கள்.

சில நொடிகள் தாண்டி, பின் மெல்லமாக உள்ளே இழுங்கள். எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு.

உள்ளே இழுத்த பின், உடனே வெளியே விடாதீர்கள். கொஞ்ச நேரம் நிறுத்துங்கள்.

பின் மீண்டும் மூச்சை வெளியேற்றுங்கள்.

இப்படி செய்வதன் மூலம் மனதை ஒருமுகப் படுத்த முடியும் .


அதுத்த முறை மனதில் சலனம் ஏற்பட்டால், கோபமோ, துக்கமோ, காதலோ, காமமோ,  எரிச்சலோ, சோகமோ, ஏற்பட்டால் இதை செய்து பாருங்கள்.

மூச்சை முழுவதுமாக வெளியேற்றி, சிறிது நேரம் நுரையீரலை காலியாக வைத்து இருந்து  பின் முழுவதும் நிரப்பி சிறிது நேரம் வைத்திருந்து பின் வெளியேற்றி....

இப்படி சில முறை செய்தால், எந்த மன அழுத்தமும் போய் விடும்.

அது எப்படி மூச்சை இழுத்து, நிறுத்தி, விட்டு, நிறுத்தினால் மன அழுத்தம் போகும் ?

நம் மனதின் சிந்தனை ஓட்டம் நமது சுவாசத்தை பொறுத்தே அமைகிறது.

ஒவ்வொரு மன நிலைக்கும் ஒரு வைத்த சுவாச நிலை இருக்கும்.

மகிழ்ச்சியாக இருக்கும் போது மூச்சு ஒரு விதமாக ஓடும்.

துக்கமாக இருந்தால் இன்னொரு விதமாக.

அதே போல், கோபம் வரும் போது மூச்சு வேக வேகமாக வரும். காமத்திலும் அப்படித்தான்.

மேலே சொன்ன மாதிரி மூச்சை வெளியேற்றி, நிறுத்தி, உள் இழுத்து நிறுத்தினால் ....அது எந்த ஒரு மன நிலையோடும் சேர்ந்த ஒன்று அல்ல. எனவே அப்படி  செய்யும் போது கோபம், துக்கம், மகிழ்ச்சி, எரிச்சல் என்று எதுவும் இருக்காது. எந்த மன நிலையில் இருந்தாலும், அது மாறி விடும்.

மன அழுத்தம் ஏற்படும் போது , மனச் சோர்வு ஏற்படும் போது இப்படி செய்து பாருங்கள்.

யோக சூத்திரங்களை நம்ப வேண்டாம். நீங்களே செய்து பார்த்து அறிந்து கொள்ளலாம்.

எளிய அற்புதமான வழி. காலணா காசு செலவழிக்க வேண்டாம்.

இருந்த இடத்திலேயே செய்து பார்க்கலாம்.

செய்து பாருங்கள்.

மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/09/133-5.html


யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 4

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 4 


मैत्री करुणा मुदितोपेक्षाणांसुखदुःख पुण्यापुण्यविषयाणां भावनातः चित्तप्रसादनम् ॥३३॥

maitrī karuṇā mudito-pekṣāṇāṁ-sukha-duḥkha puṇya-apuṇya-viṣayāṇāṁ bhāvanātaḥ citta-prasādanam ॥33॥

மனம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும் ?

மனம் பல விதங்களில் அலைக் கழிக்கப்படுகிறது. துக்கம், சோகம், பயம், படபடப்பு,  விரக்தி, எரிச்சல், கோபம், காமம், பொறாமை, துவேஷம் என்று பலப் பல விதங்களில் மனம் அல்லாடுகிறது.

உடலை நோய் பிடிப்பதைப் போல, மனதை இவை பிடித்து ஆட்டுகின்றன.

இதனால் மனம் ஓயாத சஞ்சலத்தில் இருக்கிறது.

இதில் இருந்து எப்படி விடுபடுவது.

மிக நீண்ட பட்டியலைத் தருகிறார். 14 வழிகள் சொல்கிறார். அவை என்னனென்ன என்று பார்ப்போம்.

இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு மேலானவைகளோ உங்களுக்குத் தேவைப் படலாம்.

அவை என்னென்ன ?


maitrī =  அன்பு, நட்பு , அணுக்கத் தன்மை

karuṇā = கருணை

mudito = மகிழ்ச்சி, சந்தோஷமாக இருத்தல்

upekṣana = நடுவு நிலைமை

sukha = சுகம், ஆரோக்கியம்

duḥkha = துக்கம்

puṇya = புண்ணியம்

apuṇya = பாவம்

viṣayānam = சூழ்நிலை

bhāvanātaḥ = பயிற்சி, வளர்த்தல், பழகுதல்

citta = சித்தம்

prasādanam = தெளிவு, அமைதி, இணைந்திருத்தல்

முதல் வழி, நம்மை விட மகிழ்ச்சியாக உள்ளவர்களிடம் மகிழ்வோடு பழகுவது. அதாவது, நம்மை விட  உயர்தவர்கள் மேல் பொறாமை கொள்ளாமல் இருத்தல். 

இரண்டாவது, நம்மை விட தாழ்ந்தவர்களிடம் கருணையோடு இருத்தல். இரக்கம் இல்லை. கருணை.  கருனை என்பது அன்பு சார்ந்தது. 

மூன்றாவது, நல்லொழுக்கம் கொண்டவரை காணும்போது மகிழ்ச்சி.

இதுவரை பார்த்தோம். 

அடுத்தது நான்காவது, 

தீமைகளிடம் விருப்பு வெறுப்பு அற்று இருப்பது.  

விருப்பு இல்லாமல் இருக்கச் சொன்னால் , அது சரி. 

ஏன், தீமையை வெறுக்கக் கூடாது ?

நாம்  எதன் மேல்  நம் மனதைச் செலுத்துகிறோமோ அதை நாம் அடைகிறோம். 

நிறைய பேர் உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் எண்ணம் முழுவதும் எப்படி பருமனை குறைப்பது, எதை சாப்பிட்டால் எடை குறையும்,  எந்த பயிற்சி செய்தால் உடல் எடை குறையும், என்ன குடித்தால் எடை குறையும் என்று எண்ணம் பூராவும் அதிக எடையின் மேலேயே இருக்கும். 

மெலிந்து இருந்தால் எப்படி இருக்கும், மெலிந்தால் எப்படி அழகாக இருப்போம், மெலிந்தால் எப்படி ஆரோக்கியமாக இருப்போம் என்று சிந்திக்க மாட்டார்கள். 

எடை குறையவே மாட்டேன் என்கிறதே, என்ன செய்தாலும் இந்த தொப்பை குறைய மாட்டேன் என்கிறதே  என்று பருமன் மற்றும் தொப்பையின் மேல் அவர்கள் கவனம் இருக்கும். 

இதில் கவனம் இருக்கிறதோ, அதையே நாம் அடைவோம். 

தீயவற்றை வெறுக்க வேண்டும் என்றால், அதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அது எப்படி செய்யப் பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். 

இப்படி மனம் தீயவற்றில் நிலைத்தால் , நாளடைவில் நம்மை அறியாமல் அது நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்ளும். 

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற 
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார் 
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு 

இணங்கி இருப்பதுவும் தீது.

என்பார் ஒளவையார்.  தீயவற்றை பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது, பேசக் கூடாது, சேர்ந்து இருக்கக் கூடாது. 

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பார் வள்ளுவர். 

பதஞ்சலியைப் பொறுத்தவரை மனம் சலனம் அடையக் கூடாது. தீயவற்றைன் மேல் வெறுப்பு காட்டினால் , மனம் அதையே நினைத்து உழலும். 

தீயவற்றை நினைக்கும் போது மனம் சஞ்சலப் படும். எனவே, மனம் அமைதியாக இருக்க வேண்டுமா ?  

தீயவற்றைப் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் இருங்கள். 

மேலும் சொல்கிறார். கேட்போம். 

http://yogasutrasimplified.blogspot.in/2017/09/133-4.html