Wednesday, November 15, 2017

யோக சூத்திரம் - 1.45 - ஆதியை நோக்கி

யோக சூத்திரம் - 1.45 - ஆதியை நோக்கி 



सूक्ष्मविषयत्वम्चालिण्ग पर्यवसानम् ॥४५॥

sūkṣma-viṣayatvam-ca-aliṇga paryavasānam ॥45॥




sūkṣma = சூட்சும
viṣaya = விஷயம்
ca = மேலும்
aliṅga = வெளிப்படாத
paryavasānam = எல்லைகள், முடிவைத் தாண்டி

யோகியின் படிப்படியான நிலைகளை கூறிக் கொண்டு வருகிறார்.

முதலாவதாக, பொருள்கள், மனிதர்கள், அவற்றின் தன்மை , அவற்றின் பெயர், போன்றவற்றை தெளிவாக அறிகிறான் யோகி.


இரண்டாவாது, பொருள்களின் பெயர்கள், அவற்றை விட்டு விட்டு அவை உண்மையில் என்ன என்று அறிகிறான்.

மூன்றாவதாக, வெளியில் செல்லும் மனதை திருப்பி தன்னைத் தானே அரியத் தலைப்படுகிறான்.

நான்காவது நிலை, தன்னை அறிய முயலும் போது , தான் என்ற இந்த உடல், மனம்,  நினைவுகள் இவற்றைத் தாண்டி அரூபமான ஒன்றை அறிகிறான்.

இது கொஞ்சம் சிக்கலான ஒன்று. நிதானமாக சிந்திக்க வேண்டிய ஒன்று.

சிந்திப்போம்.

உலகில் உள்ள அனைத்துக்கும் இரண்டு வடிவங்கள் உண்டு. ஒன்று ஸ்தூல வடிவம். மற்றொன்று சூக்கும வடிவம்.

ஸ்தூலம் என்பது திடப் பொருள். பார்க்க, கேட்க, தொட , முகர முடியும்.

சூக்குமம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒன்று.

சில உதாரணங்கள் பார்ப்போம்.


ஒரு ஊதுபத்தி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது கறுப்பாக இருக்கிறது. நீளமாக இருக்கிறது. ஒல்லியாக இருக்கிறது. எடை குறைந்து இருக்கிறது. என்று இவற்றை நாம் அறிகிறோம். இது ஸ்தூல நிலை.

அந்த ஊதுபத்திக்குள் ஒரு மணம் ஒளிந்து கிடக்கிறது. அது தெரியாது. ஊதுபத்தி எரியும் போது அந்த மணம் வெளிப்படும்.

லட்டு பார்க்க மஞ்சளாக இருக்கிறது, உருண்டையாக இருக்கிறது. தொட்டால் நெய் ஒட்டுகிறது . ஏலக்காய், நெய் மணம் மூக்கை துளைக்கிறது. அது ஸ்தூல வடிவம்.

அதன் சுவை இருக்கிறதே அது சூக்கும வடிவம். கண்ணுக்குத் தெரியாது. எந்த பூத கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் தெரியாது. வாயில் போட்டு கரையும் போது அந்த ஒரு கணம் அது வெளிப்படும்.

நல்ல இசையைக் கேட்கிறோம். சுகமாக இருக்கிறது. இசை தெரிந்தவர்களுக்கு அதில் உள்ள இராகம், தாளம், சுருதி எல்லாம் தெரியும். இசை தெரியாதவர்களுக்கு அது ஒரு சத்தம் அவ்வளவுதான். கேட்க இனிமையாக இருக்கிறது. அவ்வளவுதான். இராகம் , சத்தத்தின் சூக்கும வடிவம்.

முதலில் மனிதர்கள், பொருள்கள் இவற்றை காண்கிறோம். அவற்றின் பெயர், அவற்றின் உறவுகள் இவற்றை அறிகிறோம். பின், பெயர் தவிர்த்து அது என்ன என்று அறிய  முற்படுகிறோம். பின், இந்த உலகம் இப்படி இருக்க காரணம் நமது அறிவும், புலன்களும் என்று அறிகிறோம். வெளியில் உள்ளவற்றை அறிந்த மாதிரி நம்மை நாமே அறிய முனைகிறோம்.

அப்படி அறியும் போது இந்த திட வடிவங்களைத் தாண்டி , ஸ்தூல வடிவங்களைத் தாண்டி சூக்கும வடிவம் என்று ஒன்று இருப்பதை நாம் அறிவோம். அது வெளிப்படாது. அது இன்னது என்று கூற முடியாது.

விறகில் தீயினன் பாலில்படு நெய்போல் 
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் 
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால் 

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

விறகின் உள்ளே தீ இருப்பது போல, பாலில்ன் உள்ளே நெய் இருப்பது போல, மணியின் உள்ளே ஒளி இருப்பது போல ஸ்தூலத்திற்குள் சூக்குமம் இருக்கிறது.

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே என்கிறார் அப்பர் சுவாமிகள்.

அதையே பதஞ்சலியும் சொல்கிறார். உள்நோக்கி தேடினால், சூக்குமம் புரியும் என்கிறார்.

சாதாரணமாக யாருக்கும் தெரியாது என்கிறார் அருணகிரிநாதர். "தெரியாது ஒரு பூதற்குமே "


வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்

போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.

என்பது அருணகிரியார் வாக்கு.

மலை மேல் மயிலாடக் கண்டேன் 
மயில் குயில் ஆச்சுதடி குதம்பாய் 
மயில் குயில் ஆச்சுதடி 

என்பார் குதம்பைச் சித்தர்.


மயில் கண்ணுக்குத் தெரியும். அதன் வடிவம், தோகை , அது ஆடும் அழகு எல்லாம் ஸ்தூல வடிவம்.

குயில் என்றால் அதன் குரல் கேட்கும். பொதுவாக குயில் இருக்கும் இடத்தை அறிய முடியாது. குரல் சூக்கும வடிவம்.


எவ்வளவு பெரிய சங்கீத வித்வானாக இருக்கட்டும், அவரிடம் இராகம் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள். சொல்வதற்கு திணறுவார்.

ஒரு பெரிய மருத்துவரிடம் சென்று ஆரோக்கியம் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள். திணறுவார். காய்ச்சல் என்றால் என்ன என்று தெரியும்,  இரத்தக் கொதிப்பு என்றால் என்ன என்று தெரியும். ஆனால் ஆரோக்கியம் என்றால் என்று தெரியாது.

ஸ்தூலம் என்பது வெளிப்டையாகத் தெரியாது.

நான் யார் - உடலா, மனமா, அறிவா, நினைவுகளா என்று சிந்தித்துக் கொண்டே போகும் போது , நான் யார் என்பதை அறிய முடியும், ஆனால் சொல்ல முடியாது.

உடல் தெரிகிறது. அதன் அசைவுகள் தெரிகிறது. அதை ஆட்டுவிக்கும் மனமும் சிந்தையும் கூட தெரிகிறது. மனதை ஆட்டுவிப்பது யார் ? நம் சிந்தனையை செயல் பட செய்வது யார் ?

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

என்பார் மணிவாசகர்.

சிந்தனைக்குள்ளே ஏதோ ஒன்று இருக்கிறது. அதை அறிய முடியும் என்கிறார்.

எப்படி என்று பின்னால் பார்ப்போம்.

பதஞ்சலியின் யோக சூத்திரம் என்பது ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டமான படைப்பு.

நான் எப்போதும் சொல்லுவது போல, மூலத்தை தேடிப் படியுங்கள். ஆயிரம் உரைகள்  ஒரு மூல நூலுக்கு இணையாகாது.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/146.html

No comments:

Post a Comment