Friday, November 10, 2017

யோக சூத்திரம் - 1.43 - சரியான பார்வை

யோக சூத்திரம் - 1.43 - சரியான பார்வை 



स्मृतिपरिशुद्धौ स्वरूपशून्येवार्थमात्रनिर्भासा निर्वितर्का ॥४३॥

smr̥ti-pariśuddhau svarūpa-śūnyeva-arthamātra-nirbhāsā nirvitarkā ॥43॥


smr̥ti = நினைவுகள், ஞாபகங்கள்
pariśuddhau = பரிசுத்தமானபின் , தூய்மையானபின்
svarūpa = உண்மையான நிலை
śūnya = சூன்யம், வெற்றிடம், நீக்கப்பட்டது
iva = இங்கே
artha = அர்த்தம், பொருள், உண்மை
mātra = மட்டுமே
nirbhāsā = ஒளிரும் , விளங்கும்
nirvitarkā = நிர்விதர்க , அடுத்து

சமாதியின் பல படிகளை சொல்லிக் கொண்டு வருகிறார்.

நேற்று நாம் பார்த்தது, "சவிதர்க " சமாதி எனப்படும். அதில், யோகி பொருள், அவற்றின் அர்த்தம் இவற்றின் தன்மைகளை  கொள்கிறான்.

அடுத்த கட்டம், நிர்விதர்க சமாதி.

நாம் உலகை அது இருக்கும் நிலையில் பார்ப்பது இல்லை.

அப்படி என்றால் என்ன ?

உதாரணமாக, நாம் ஒரு மஞ்சள் நிற கண்ணாடியை அணிந்து கொண்டு உலகை பார்த்தால், உலகில் உள்ள எல்லாம் மஞ்சளாகத் தெரியும். நாம் அப்படி பார்க்கிறோம் என்பதற்காக, அதுவே உண்மையாக முடியாது அல்லவா ? எல்லாம் மஞ்சளாக இருப்பது இல்லை.

கண்ணாடியை கழட்டி விட்டு பார்த்தால் , எது உண்மையான நிறம் என்று தெரியும்.

இப்போது அறிவியல் மேலும் வளர்ந்து விட்டது. virtual glass என்று சொல்கிறார்கள். அதை அணிந்து கொண்டு பார்த்தால், இல்லாத ஒன்று கூட இருப்பதாகத் தெரியும். வானில் பறப்பது போலவும், நீருக்குள் மூழ்குவது போலவும், சறுக்கு பலகையில் சறுக்குவது போலவும் தெரியும். அதை அணிந்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் காணப்பது நிஜம் என்று நம்புவார்கள். கீழே வீழ்வது போலத் தெரிந்தால், இருக்கையை இறுக்கி பிடித்துக் கொள்வார்கள். அவர்களுக்கு அது தான் நிஜம்.

சிக்கல் என்ன என்றால், நாம் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறோம் என்றே நமக்குத் தெரியாது.

தெரிந்தால் அல்லவா அதை கழட்டி விட்டு பார்த்து, உண்மை எது என்று அறிந்து கொள்வது.


நமது ஞாபகங்களே நமது கண்ணாடி.

நாம் இந்த உலகை , நமது பழைய ஞாபகங்கள் என்ற கண்ணாடியின் ஊடே பார்க்கிறோம்.

இல்லாததை இருப்பதாய் பார்க்கிறோம்.

இருப்பவற்றை  வேறு விதமாக பார்க்கிறோம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அது தான் சரி என்று நாம் நினைக்கிறோம்.

வேறு மதத்தை சார்ந்தவர்கள் அது சரி அல்ல. ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ளலாம். அது தவறில்லை என்று சொல்லலாம்.

இப்போது , எது சரி. இருவரும், தாங்கள் கொண்டதே சரி என்று வாதம் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

இந்த சரி , தவறு என்ற எண்ணங்களுக்குக் காரணம், அவர்களுக்கு சொல்லித் தரப்பட்ட போதனைகள், அவர்களின் மத நம்பிக்கைகள்.


உண்மையில் சரி தவறு என்று ஒன்றும் கிடையாது.

ஒரு பொருள் இருக்கிறது என்றால், அது எல்லோருக்கும் தெரிய வேண்டும் அல்லவா ?

நெருப்பு இருக்கிறது. ஒருவருக்கு நெருப்பு சுடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னொருவருக்கு நெருப்பு சுடாது என்ற நம்பிக்கை இருக்கிறது.

இரண்டு பேரும் நெருப்பில் கை வைக்கிறார்கள். என்ன ஆகும் ? நம்பினாலும், நம்பாவிட்டாலும் நெருப்பு சுடும்.

உண்மைக்கும், நமது நம்பிக்கைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

வேற்று மதத்தைச் சார்ந்த ஒருவரை , ஒருவர் இந்து கோவிலுக்கு  கூட்டிச் செல்லுங்கள்.  அவருக்கு பக்தி வருமா ? இந்து கடவுளை வணங்க வேண்டும் என்று தோன்றுமா ?

ஒரு இந்து கிறித்துவ தேவாலயத்துக்கு செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு பக்தி வருமா ? என்னடா இது ஒரு மரியாதை இல்லாமல் எல்லோரும் செருப்பு, ஷூ அணிந்து கொண்டு கோவிலுக்குள் வருகிறார்கள் என்று ஒரு நெருடல் வரலாம், சிலுவையில் அறையப்பட்ட யேசுவைப் பார்த்து ஒரு பரிதாபம் வரலாம். பக்தி வருமா ?

உண்மை என்றால், நம்பினாலும், நம்பாவிட்டாலும் பக்தி வந்திருக்க வேண்டும்.

வருவது இல்லை.

நமது கடவுள், மதம், என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் நம்பிக்கையைப் பொறுத்தது. அது உண்மை அல்ல. உண்மை என்றால் எல்லோருக்கும் அது சமமாக இருக்க வேண்டுமே. நம்பாதவனையும் நெருப்பு சுடுவது போல.

கடவுள் நம்பிக்கை மட்டும் அல்ல.

நமது வாழ்வில், ஏராளமான விஷயங்கள் , நாம் உண்மை, சரி, சத்தியம் என்று நம்புபவை எல்லாம் நமக்குச் சொல்லப்பட்ட ஞாபகங்களின் மிச்சம் தான்.

மாமிசம் தின்பது சரியா தவறா ?

wine போன்றவற்றை அருந்துவது சரியா தவறா ?

நமது கொள்கைகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் இவை அனைத்துமே நமக்குச் சொல்லப்பட்டவை. 

அவற்றைத் தாண்டி உண்மை என்ன என்று அறிய வேண்டும்.

யோகிகள் ஞாபகத்தின் தன்மையை அறிவார்கள்.

தங்கள் ஞாபகங்களைத் தாண்டி அவர்கள் உண்மையை அறிவார்கள்.

பொருள்களின் உண்மையான தன்மையை அறிவார்கள்.

உங்கள் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் வண்டி வண்டியாக ஞாபக குவியல்கள் இருக்கின்றன. நீங்கள் அவற்றை எண்ணி பார்ப்பது இல்லை.

உங்கள் கணவரோடு சண்டையா ? அவர் அப்படி செய்திருக்கக் கூடாது , இப்படி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா ?


ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். அவர் செய்வது உண்மை. அவர் அப்படி செய்யக் கூடாது என்று நீங்கள் எதிர்பார்ப்பது உங்கள் கற்பனை. அதற்கு காரணம் உங்களுக்கு சொல்லப்பட்ட விஷயங்கள். அவற்றின் நினைவுகள்.

கற்பூரம் காட்டும் போது , ஏன் என்று சிந்தியுங்கள். கற்பூரம் காட்டுவதால் என்ன நிகழ்கிறது என்று யோசியுங்கள்.

ஒரு இயந்திர கதியில் வாழ்வை செலுத்தாமல் எதையும் சிந்திக்க தலைப் படுங்கள்.

ஒரு கணணி , அதில் பொருத்தப்பட்ட மென் பொருள் என்ன சொல்கிறதோ  அது படி செய்யும்.

நாமும், நமக்குள் ஒரு மென் பொருளை (software ) வைத்திருக்கிறோம். அதன் படி ஒரு இயந்திரம் போல செயல் படுகிறோம்.

சிந்தியுங்கள்.

ஞாபகங்கள் தேவை தான். ஞாபகங்கள் இல்லாமல் வாழ முடியாது.

ஆனால், எந்த ஞாபகம் தேவை, எது தேவை இல்லை என்று அறியும் அறிவு வேண்டும்.

தேவை இல்லாத குப்பைகளை சேர்த்துக் கொண்டு, அவைதான் சரி என்று ஒரு வாழ்க்கை பூராவையும் வீணடிப்பது சரிதானா ?


பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி 

என்பார் மணிவாசகர்.

அவருக்குள்ளும், பொய்யான பல விஷயங்கள் இருந்தன. அவை போக வேண்டும்.

சித்த மலம் தெளிவித்து சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளியவார் யார் பெறுவார் அச்சோவே 

என்பார் மணிவாசகர்.

சித்தத்தில் பல மலங்கள், குற்றங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை நீக்க வேண்டும்.

பாரதியார், தனது  மெய் ஞான தரிசனத்தில் கூறுவார்,

"அகத்தி னுள்ளே, இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ” என்று.

பாரதியாரின் ஞான குரு, குள்ளச் சாமி , பாரதியாரிடம் சொன்னாராம், "மனதுக்குள்ளே ஆயிரம் குப்பைகளை சுமந்து திரிகிறாய் " என்று.



மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டேன் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
தம்பிரானே!இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டைசுமந் திடுவதென்னே? மொழிவாய்”என்றேன்

புன்னகைபூத் தாரியனும் புகலு கின்றான்;
“புறத்தேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே,
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ”
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவபன்சொற் பொருளினையான் கண்டுகொண்டேன்;

பாரதியாரின் மனதில் ஆயிரம் குப்பைகள் என்றால், நமது மனதில் எவ்வளவு இருக்கும். சுத்தம் செய்யுங்கள். வாழ்க்கை வசப்படும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/143.html

No comments:

Post a Comment