Thursday, November 9, 2017

யோக சூத்திரம் - 1.41 - அனுபவம் மட்டுமே

யோக சூத்திரம் - 1.41 - அனுபவம் மட்டுமே 



क्षीणवृत्तेरभिजातस्येव मणेर्ग्रहीतृग्रहणग्राह्येषु तत्स्थतदञ्जनता समापत्तिः ॥४१॥

kṣīṇa-vr̥tter-abhijātasy-eva maṇer-grahītr̥-grahaṇa-grāhyeṣu tatstha-tadañjanatā samāpattiḥ ॥41॥



kṣīna = ஷீணம் என்றால் மெலிதல், குறைதல்

vr̥ttiḥ = என்ன அலைகள், மன சலனங்கள்

abhijātasya = தெளிவு

eva = அது (எப்படி என்றால் )

maṇi = மணி, ஸ்படிகம் போல

grahītr̥ = கிரஹிப்பவன் , பார்ப்பவன், அனுபவிப்பவன்

grahaṇa =அனுவபம். கிரகணம் என்றால் பிடித்தல்.

grāhyeṣu = அனுபவிக்கப் படும் பொருள்

tatstha = இரண்டற கலந்து

tadañjanatā = ஒன்று மற்றொன்றாக மாறி

samāpattiḥ = சம நிலை அடைகின்றன

முதலிலேயே சொல்லி விடுவோம். சமாதி என்றால் இறந்த பின் புதைக்கும் இடம் அல்ல.

சமாதி = சமம் + ஆதி. ஆதியோடு சமமாக ஆகி விடுவது.

மனம் அமைதி ஆனால், என்ன நிகழும் என்று சொல்கிறார் பதஞ்சலி சொல்கிறார்.

நாம் பலவிதமான அனுபவங்களை பெறுகிறோம்.

நல்லவை, கெட்டவை , இனிமையான அனுபவங்கள், கசப்பான அனுபவங்கள்.


அனுபவங்கள் மனதில் படிகின்றன. இனிமையான அனுபவங்கள் என்றால் அவை மேலும் மேலும் வேண்டும் என்று விரும்புகிறோம். துன்பமான அனுபவம் என்றால் அவற்றை மறுபடியும் பெறாமல் இருக்க முயற்சி செய்கிறோம்.

வாழ்க்கை பூராவும் இந்த சிக்கலிலேயே போய் விடுகிறது.

கோபம், பயம், நடுக்கம், எரிச்சல், காதல், காமம், பொறாமை, என்று உணர்ச்சிகளில் சிக்கி தத்தளிக்கிறோம்.

இந்த சூழலில் இருந்து எப்படி விடுபடுவது.

எப்படி உணர்வு கொந்தளிப்பு இல்லாமல், வாழ்க்கையை சுகமாக , மென்மையாக நடத்திச் செல்லுவது ?

எந்த அனுபவத்துக்கும் மூன்று விஷயங்கள் தேவை.

அனுபவிப்பவன்
அனுபவிக்கப் படும் பொருள்
அனுபவம்

Observer  - Observed - and Observation

இந்த மூன்றுக்கும் இடை வெளி இருப்பதால் தான் அனுபவங்கள் நிகழ்கிறது.

மனம் தெளிவு அடையும் போது , இந்த மூன்றும் ஒன்றாக ஆகிவிடுகிறது.


நீங்கள் இது வரை எவ்வளவோ வாசித்து இருக்கலாம். படித்து வியந்து இருக்கலாம்.

அவை அனைத்தையும் மிஞ்சக் கூடியது இந்த ஒரு வரி. எவ்வளவு ஆழமாக சிந்திக்க முடியுமோ, இதை சிந்தியுங்கள். எவ்வளவு நேரம் சிந்திக்க முடியுமோ, அவ்வளவு சிந்தியுங்கள். எத்தனை முறை சிந்திக்க முடியுமோ, அத்தனை முறை சிந்தியுங்கள்.


அனுபவிப்பவன், அனுபவிக்கப் படுவது, அனுபம், இந்த மூன்றும் ஒன்றாகி விடும்.

அனுபவிப்பவனுக்கும், அனுவிக்கப் படுவதற்கும் இடையில் உள்ள இடைவெளி மறைந்து விடும்.

அப்படி மறைந்தால், அனுபவம் என்ற ஒன்றே இருக்காது.

நிகழ்வுகள் இருக்கும். அனுபவங்கள் இருக்காது.

"ஆஹா இந்த ரோஜா மாலர் எவ்வளவு அழகாக இருக்கிறது "

என்று நீங்கள் அனுபவிக்கும் போது நீங்கள் வேறு, ரோஜா வேறு என்ற நிலை இருக்கிறது.

உங்களுக்கும், ரோஜாவுக்கும் ஒரு இடைவெளி இருக்கிறது.

அந்த இடைவெளியினால்தான் அனுபவம் நிகழ்கிறது.

அந்த இடைவெளி ஏன் வருகிறது ?

அந்த இடை வெளி நம்மை அனுபவத்தில் இருந்து பிரிக்கிறது.

அழகான ஒரு சூரிய உதயத்தை பார்க்கிறோம்.

ஒரு கணம். அதன் அழகு, வெளிச்சம், அந்த கடற்கரை, காற்று ,எல்லாம் ஒன்றாக கலந்து நீங்கள் உங்களை மறக்கிறீர்கள். அந்த பிரமாண்டத்தில் உங்களை மறந்து இலயித்து இருக்கிறீர்கள்.

ஒரு கணம் தான். அடுத்த கணமே, "ஆகா என்ன அழகு " என்று உங்கள் சிந்தனை வந்து குறுக்கே விழுகிறது.

அடுத்த கணம், செல் போனை எடுத்து அதை படம் எடுக்க முயல்கிறீர்கள். அந்த அனுபவத்தை படமாக பிடித்து வைத்து பின்னால் பார்க்கலாம் என்று நினைக்கிறீர்கள். உங்கள் நண்பர்களிடம் காட்டலாம் என்று நினைக்கிறீர்கள்.

சூரியன், கடல், காற்று, அழகு எல்லாம் போய் விடாது. அந்த அனுபவ தோய்தல் நின்று போய் விடுகிறது.

அனுபவம் நின்று போவதால், அது முழுமை பெறுவதில்லை. முழுமை பெறாததால், அது மீண்டும் மீண்டும் வேண்டும் என்று மனம் அலைகிறது.


அனுபவங்களை பத்திர படுத்த வேண்டும் என்ற ஆசை, பழைய நினைவுகள் (அன்னைக்கு பாத்த சூரிய உதயம் போலவே இருக்கு ), என்று மன சஞ்சலம் குறுக்கே வந்து எதையும் முழுமையாக அனுபவிக்க விடுவதில்லை.

மன சஞ்சலம் போய் விட்டால், ஸ்படிக மணி எப்படி தன் அருகில் உள்ளதை அப்படியே பிரதி பலிக்குமோ, அது போல நீங்களும் இந்த உலகை உங்களில் பிரதி பலிப்பீர்கள்.

உங்களுக்கும், இந்த உலகுக்கும் இடையே உள்ள இடைவெளி மறைந்து போகும்.

நீங்கள் வேறு, இந்த உலகம் வேறு அல்ல என்ற நிலை வரும்.

அதுவே சமாதி .

நான் என்ற எண்ணம் மறையும். நான் என்ற அகந்தை உலகில் கரையும்.

அங்கே அனுபவிப்பவனும் கிடையாது, அனுபவிக்கப் படுவதும் கிடையாது.

அனுபவம் மட்டுமே இருக்கும்.


"என்னை மறந்து இருந்தேன் , இறந்தே விட்டது இவ்வுடம்பே " என்பார் அருணகிரி நாதர்.

சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் துளைத்த வைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்ப மௌனத்தை உற்று
நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்ட
என்னை மறந்து இருந்தேன் இறந்தே விட்டது இவ்வுடம்பே.


சிந்திப்போம்

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/141.html

No comments:

Post a Comment