Thursday, November 30, 2017

யோக சூத்திரம் - 2.6 - அஸ்மித

யோக சூத்திரம் - 2.6 - அஸ்மித


दृग्दर्शनशक्त्योरेकात्मतैवास्मिता ॥६॥

dr̥g-darśana-śaktyor-ekātmata-iva-asmitā ॥6॥


dr̥k = (nom. sg. f.) பார்ப்பவன்
darśana-śakti = பார்க்கும் சக்தி
eka = ஒன்று
ekātmatā = ஒன்றிணைந்து
eva = அதாவது
asmitā = அஸ்மிதா

பார்ப்பவனையும் பார்வையையும் ஒன்றாக நினைத்து குழம்புவது அஸ்மிதா.

ரொம்ப குழப்பமாக இருக்கிறதா ?

இதை வேறு விதமாக சிந்தித்தால் பொருள் விளங்கும்.

மன கிலேசத்துக்கு முதல் காரணம் அவித்தை என்று பார்த்தோம். அது எப்படியெல்லாம் வெளிப்படும் என்றும் பார்த்தோம்.

அவித்தையை தொடர்ந்து வருவது அமிஸ்த.

அமிஸ்த என்றால் அறிவுக்கும் ஞாபகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்புவது.


நமது அறிவு என்பது நமது ஞாபகம் அன்றி வேறு என்ன.

நமக்குத் தெரியும் என்று நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் எப்போதோ யாரோ சொல்லக் கேட்டதன்  ஞாபகங்களின் தொகுதி தான்.

நாம் எதையும் தோண்டி துருவி ஆராய்ந்தது அல்ல.

சொன்னார்கள் , கேட்டுக் கொண்டோம்.

படித்தோம், மனதில் இருத்திக் கொண்டோம்.

அவ்வளவே.

வெளியில் உள்ள உலகமானது வேறு விதமாக இருக்கிறது. அது மாறிக் கொண்டே இருக்கிறது. நமது ஞாபக குவியலை விட அது மிகவும் சிக்கலாக இருக்கிறது. (complex )

நாம் , இந்த வெளி உலகை, அதாவது உண்மையை நம் ஞாபக குவியலோடு (memory template ) ஒத்துப் பார்க்கிறோம். இரண்டும் ஒன்றாகிப் போகினால் , நல்லது. இல்லை என்றால் சிக்கல் ஆரம்பமாகிறது.

இதற்கு ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம்.

பிற மத கருத்துகளை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா ?

நீங்கள் சைவமாக இருந்தால், மாமிசம் சாப்பிடுவதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா ?

ஓரினத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதை உங்களால் ஜீரணிக்க முடிகிறதா ?

திருமணம் ஆகாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக இருப்பது சரி என்று உங்களுக்குப் படுகிறதா ?

இவற்றில் எல்லாம் உங்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்கலாம். அந்த அபிப்பிராயம் அறிவினால் வந்தது அல்ல. நீங்கள் ஆராய்ந்து, அதன் சாதக பாதகங்களை அறிந்து பின் வந்த அறிவு அல்ல. அவை உங்களின் பழைய நினைவு குவியலில் இருந்து வந்தவை.


அதனால் அவை தவறு என்று ஆகி விடாது.


ஆனால், நீங்கள் ஒன்றை மட்டும் எப்போதும் அறிந்து இருக்க வேண்டும்.

அறிவு என்பது வேறு. ஞாபகம் என்பது வேறு.

பார்வை என்பது வேறு. பார்ப்பவன் என்பது வேறு.

இரண்டையும் போட்டு குழப்பக் கூடாது.

இந்த தெளிவு வராதவரை உலகோடு கிடையாது முட்டி மோதிக் கொண்டிருப்போம்.

அது எப்படி சரியாகும், இது தான் சரி, அவன் இப்படி செய்திருக்கக் கூடாது,  அது  நியாயமே இல்லை என்று மனதுக்குள் எந்நேரமும் அலை அடித்துக் கொண்டே இருக்கும்.

அது நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும்.

அடுத்த தடவை ஏதோ ஒன்றில் உங்களுக்கு தடங்கல் வந்தால், ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.

நீங்கள் அறிவு பூர்வமாக அதை எதிர் கொள்கிறீர்களா அல்லது உங்கள் பழைய நினைவுகளில் இருந்து எதிர் கொள்கிறீர்களா என்று.

பெரும்பாலான சமயம், அது நினைவின் வெளிப்பாடாகவே இருக்கும்.

நமது ஞாபகம் என்பது , அறிவை அடைய பெரிய தடை.

நாம் நினைத்துக் கொண்டிருப்பது தான் சரி என்று நாம் உறுதியாக நம்புவோம். அதற்கு எதிரான எந்த கருத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அது தான் அறிவுக்குத் தடை.

தவறானவற்றை விட்டுத் தள்ள மனம் வருவது இல்லை.

பழக்கத்தை விடுவது மிக மிககடினம் . அப்படியே பழகி போய் விட்டது என்று அதை தொடர்ந்து கொண்டே இருப்போம்.

நினைவில், ஞாபகத்தில் இருந்து செயல் படும் போது  நாம் ஒரு இயந்திரம் போல  செயல் படுகிறோம். ஒரு கணணி போல ஆகி விடுகிறோம்.

அறிவு என்பது அன்றலர்ந்த மலர் போன்றது. ஞாபகம் என்பது வாடி அழுகிப் போன மலர் போன்றது.


ஞாபகம் என்பது கண்களுக்கு போடும் திரை. கலர் கண்ணாடி. அதன் மூலம் உலகைப் பார்த்தால், அது வேறு விதமாகத்தான் தெரியும்.

கணவனை பார்க்கும் போது , இன்று தான் முதன் முதலில் பார்க்கும் , பேசப் போகும் காதலனைப் போல் பாருங்கள். வித்தியாசம் தெரியும்.

எதையும் ஞாபகத்தின் இடையூறு இல்லாமல், தெளிவான பார்வையோடு சிந்திக்க முடிகிறதா என்று பாருங்கள்.

பதஞ்சலி இதை ஏன் சொல்கிறார் என்றால், சிறு வயதில் நமக்கு பல விஷயங்கள் சொல்லப் படுகின்றன. அறியாத அந்த வயதில் சொல்லப் படுபவை எல்லாம் நம் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடுகிறது. அவற்றை நாம் உண்மை என்றே நம்புகிறோம்.

அவற்றிற்கு எதிரான ஏதாவது வேறு கருத்து வந்தால், நம்மால் சகிக்க முடிவதில்லை . இப்படி கூட மனிதர்கள் யோசிப்பார்களா என்று ஆச்சரியமும், அருவெறுப்பும் வருகிறது.

ஏதோ நாம் அறிந்தது மட்டும் தான் உண்மை போலவும், மற்றவை எல்லாம் தவறு என்று நினைக்கிறோம்.

இது ஆன்மீக முன்னேற்றத்திற்கு பெரிய தடைக் கல்.

சிந்தியுங்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/26.html

No comments:

Post a Comment