Monday, November 20, 2017

யோக சூத்திரம் - 1.48 - உண்மை அறிதல்

யோக சூத்திரம் - 1.48 - உண்மை அறிதல் 


ऋतंभरा तत्र प्रज्ञा ॥४८॥

r̥taṁbharā tatra prajñā ॥48॥



r̥tam = உண்மை, சத்யம்
bharā = நிரம்பி இருக்கும் , சூல் கொண்டு
tatra = அங்கே
prajñā = பிரஞ்ஞா , உண்மையான அறிவு, அறிதல் பற்றிய உணர்வு


அந்த இடத்தில், அந்த நேரத்தில் உண்மை அறிதல் நிகழும். 

நம் அறிவு என்பது உண்மை, பொய் என்று எல்லாம் நிறைந்தது. அதனால் நமக்கு அடிக்கடி சந்தேகம் வருகிறது. நாம் நினைப்பது சரிதானா என்ற சந்தேகம் வருகிறது.

ஒருவேளை நாம் சரி என்று நினைத்துக் கொண்டிருப்பது தவறாக இருக்குமோ என்று மனம் சஞ்சலப் படுகிறது.

இத்தனை நாள் சரி என்று நினைத்தது இப்படி ஆகி விட்டதே என்று கவலைப் படுகிறோம்.

காரணம், நம் அறிவு முழுமை பெற்றது அல்ல.

தவறானவற்றை சரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். சரியானவற்றை தவறு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

இதற்கு காரணம் என்ன ?

நம் அறிவு என்பது முழுக்க முழுக்க இரவல் அறிவு. யார் யார் சொன்னதெல்லாம் நாம் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். நமக்கென்று ஒரு  உண்மையான அனுபவம் கிடையாது. மற்றவர்களின் அனுபவத்தை நம் அனுபவம் போல , நாமே கண்டு பிடித்தது போல சொல்லிக் கொண்டு திரிகிறோம்.

முந்தைய சூத்திரத்தில் அதைத்தான் சொன்னார் - அனுபவ அறிவு. உண்மையின் நேரடி தரிசனம்.

நீச்சல் அடிப்பது எப்படி என்று ஆயிரம் புத்தகம் படித்தாலும் , நீருக்குள் இறங்கி  ஒரு நிமிடம் நீந்தி வரும் அனுபவத்துக்கு ஈடாகாது.

உண்மையான அறிவு உள்ளே செல்ல வழி இல்லாமல் , பொய்யான, இரவல் ஞானங்களை இட்டு  நிரப்பி வைத்திருக்கிறோம்.

எல்லாவற்றையும் காலி செய்யுங்கள். அப்போதுதான் புது பொருள்கள் வைக்க இடம் இருக்கும்.

அடுத்தது, வீட்டின் கதவு ஜன்னல்களை எல்லாம் மூடி வைத்திருக்கிறோம்.

நான் இந்த மதம். நான் இந்த ஜாதி. இந்த இனம். இந்த குருவின் சிஷ்யன் . இந்த  வழியில் நடப்பவன் என்றும் மற்றவை எல்லாம் தேவை இல்லை என்றோ அல்லது தவறென்றோ நினைத்து அவற்றை மறுக்கிறோம்.

இப்படி அனைத்து ஜன்னல்களையும் , கதவையும் மூடி வைத்திருந்தால் எங்கே  வெளிச்சம் வரும், எங்கே புதிய காற்று வரும்.

வீட்டை காலி செய்தால் மட்டும் போதாது, கதவு ஜன்னல்களை திறந்து வையுங்கள்.

வெளிச்சம் வந்து வீட்டை நிறைக்கும். புத்தம் புது காற்று வரும்.

வீடு முழுவதும் வெளிச்சமாக , சுத்தமான சுகந்தம் வீசும்.

"அப்போது அறிவு உண்மையால் நிறைந்து இருக்கும்" என்பது சூத்திரம்.


மற்றவர்களின் அனுபவம் உங்கள் அனுபவம் ஆகாது. அனுபவம் நிகழாதவரை உண்மையின் தன்மை புரியாது.

தேடுங்கள். கண்டடைவீர்கள் என்றார் இயேசு பெருமான்.

படியுங்கள் . கண்டடைவீர்கள் என்று சொல்லவில்லை.

நீங்களேதான் தேட வேண்டும்.


படித்ததை, கேள்விப் பட்டதை. வாசித்ததை ஒதுக்கி வையுங்கள். முதலில் இருந்து  தொடங்குங்கள்.

சித்தார்தனுக்கு , அரண்மையில் இல்லாத வசதியா ? எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் கிடைத்திருக்கும். எத்தனை அறிஞர்களை வேண்டுமானாலும்  வரவழைத்து பாடம் கேட்டிருக்கலாம்.

அத்தனையும் வேண்டாம் என்று உதறிவிட்டு காடு மேடெல்லாம் அலைந்தான் உண்மையைத் தேடி. புத்தனானான்.

அத்தனை சொத்துகளையும் தெருவில் போடு என்று சொல்லி விட்டு கட்டிய கோவணத்தோடு  கிளம்பினார் பட்டினத்தார்.

நீங்களே தேடி கண்டுபிடிக்காதவரை , நீங்கள் அறிந்திருப்பது எல்லாம் உண்மை இல்லை.

தேடுங்கள்

தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்.

என்பார் திருநாவுக்கரசர்.

பழைய குப்பைகளை தூக்கிப் போடுங்கள். தேடல் எளிமையாகும்.


http://yogasutrasimplified.blogspot.in/2017/11/148.html




No comments:

Post a Comment