Thursday, November 16, 2017

யோக சூத்திரம் - 1.46 - விதை

யோக சூத்திரம் - 1.46 - விதை 


ता एव सबीजस्समाधिः ॥४६॥

tā eva sabījas-samādhiḥ ॥46॥




tā = இவை (இந்த சமாதிகள்)
eva = மேலும்
sabīja = விதையுடன் கூடியவை
samādhiḥ = சமாதி

 இதுவரை நாம் பார்த்த சமாதிகள் விதையுடன் கூடியவை.

அதாவது , பொருள், அவற்றின் பெயர் , அவற்றின் தன்மை இவற்றை அறிவது.

அடுத்து, பெயர் எதுவும் இல்லாமல் அவற்றை நேரடியாக அறிவது

மூன்றாவது, வெளி நோக்கி செல்லும் சித்தத்தை உள் நோக்கி செலுத்தி தன்னைத் தான் அறிவது.

இந்த மூன்றும் விதையுடன் கூடிய சமாதி நிலைகள்.

அது என்ன விதையுடன் கூடிய சமாதி ?

அதை பார்ப்பதற்கு முன்னால் , நாம் இந்த நிலைகளை கொஞ்சம் சிந்திப்போம்.

நீங்கள், உங்கள் மனதுக்கு பிடித்தவரை பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கணவனோ, மனைவியோ, காதலனோ, காதலியோ...யாரோ ஒருவர்.

சாதாரணமாக எப்படி பார்ப்போம் ?

சாதாரணமாக நாம் முகத்துக்கு முகம் கூட சரியாக பார்ப்பது இல்லை. எங்கேயோ பார்த்துக் கொண்டு, எதையோ சிந்தித்துக் கொண்டு, பேசுகிறோம்.

அதைத் தாண்டி, நேரில் அமர்ந்து , அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு பேசுகிறீர்கள்  என்று வைத்துக் கொள்வோம்...அப்போது என்ன தெரியும் ? அவர்களின் முகம், கையின் ஸ்பரிசம், முகத்தின் உணர்ச்சிகள் இவை தெரியும். அவர்களின் நல்ல  குணங்கள், சில கெட்ட குணங்கள், சொன்ன வார்த்தைகள் இவை எல்லாம் மனதில் அலை மோதும்.

அடுத்த கட்டம், அவர்களின் அன்பு, நேசம், பாசம், அவர்களோடு செலவழித்த இனிய நினைவுகள் மனதில் ஊசலாடும்.

அடுத்த கட்டம், எப்படி அவர்களின் அன்பு உங்களுக்கு தேவையாக இருந்தது, எப்படி  அது மனதுக்கு இதமாக இருந்தது , சுகமாக இருந்தது என்று தோன்றும்.

இப்படி வெளி உலகில் இருந்து, பொருள்கள், உடல்கள் இவற்றில் இருந்து மென்மையான உணர்ச்சிகளை  தொட்டு பின் நமக்கு அது எப்படி இருந்தது என்று வந்து நிற்போம்.


எது எப்படியாக இருந்தாலும், இவற்றைப் பற்றி சிந்திக்கின்ற நான் என்பது  இருந்து கொண்டே இருக்கும்.

நான் பார்க்கிறேன், நான் இரசிக்கிறேன், நான் அனுபவிக்கிறேன்  என்று ஒவ்வொரு நிலையிலும் , அது வெளியில் உள்ள பொருளாக இருந்தாலும் சரி,  உள் நோக்கி  போவதாக இருந்தாலும் சரி, நான் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நான் என்னை அறிகிறேன், நான் என்னை அறிந்து கொண்டேன் என்று கூறும் போது  அறியும் நான், அறிந்து கொண்ட நான் என்று இரண்டு இருந்து கொண்டே இருக்கும்.

நீங்கள் ஒன்றை அறிகிறீர்கள் என்றால் நீங்கள் வேறு, அறியப் படும் பொருள் வேறு என்று  இரண்டு இருக்க வேண்டும் அல்லவா ? இல்லை என்றால் அறிவது யார் ? அறிவது எதை ?

இந்த பிரிவு இருக்கும் வரை, தொடர்பு இருக்கும்.

தொடர்பு என்று சொல்லும் போது, ஆசை, வெறுப்பு, பயம், அருவெறுப்பு என்று எல்லாம் அதில் அடங்கும்.

இவளே எனக்கு அடுத்த பிறவியிலும் மனைவியாக வேண்டும் என்ற ஆசை இருக்கலாம்.

ஒரு பிறவியே போதும் என்ற வெறுப்பு இருக்கலாம்.


இன்னொரு பிறவி இவளுடனா என்ற பயம் இருக்கலாம்.

எப்படி இருந்தாலும், அந்த பிணைப்பு இருந்து கொண்டே இருக்கும்.

அந்த பிணைப்பு, தொடர்பு இருக்கும் வரை, மனம் மீண்டும் மீண்டும் அதில் விழுந்து  விழுந்து எழும்.

அதைத்தான் விதை என்கிறார் பதஞ்சலி.

எப்படி விதையில் இருந்து மீண்டும் ஒரு மரம் முளைக்கிறதோ, இந்த இருமையினால் (நான், நான் அல்லாத வெளி உலகம் ) மனம் மீண்டும் மீண்டும் விழுகிறது முளைக்கிறது, விழுகிறது முளைக்கிறது.


எண்ண ஓட்டங்கள் இருக்கும் வரை , அலை அடித்துக் கொண்டே இருக்கும். கடல் ஒரு கணம் அலை இல்லாதது போலத் தோன்றினாலும், அடுத்த கணம் பேரலை எழ வாய்ப்பு இருக்கிறது.

இந்த விதை விழுந்து மீண்டும் அதில் இருந்து புது மரம் தோன்றும் செயலை பலர் அறிந்து இருந்தனர்.


உ வே சாமிநாத அய்யர், இறக்கும் தருவாயில், திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலை வாசிக்கச் சொன்னாராம்.

"வித்து மேல் விளையாமல் " என்ற அந்த பாடல்.

இனி பிறவி இல்லாமல் என்ற அந்தப் பாடல்



பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,
கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!



வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின்

என்கிறார் மணிவாசகர்.

நல் வினை, தீ வினை என்றும் ஒன்றாக ஆன பின். நல்லது கெட்டது , உயர்ந்தது, தாழ்ந்தது , என்ற வினைகள் எல்லாம் ஒன்றான பின் ....

எப்படி ஒன்றாகும் ?

சிந்தனை முற்றுமாய் நின்ற பின். நான் செய்கிறேன் என்ற அந்த எண்ணம் நின்ற பின், செயல் இருக்கும், செய்பவன் இருக்க மாட்டான்.

செயல், செய்பவன், செய்யப்படுவது எல்லாம் ஒன்றாகி விடும்.

அது வரை , அனைத்து யோகங்களும் , மீண்டும் மீண்டும் சலனத்தைத் தரும், பிறவியைத் தரும், குழப்பமும், தெளிவும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

இவை முற்றுமாக நின்றபின் என்ன ஆகும் ?

சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/11/146_16.html

No comments:

Post a Comment