Wednesday, November 8, 2017

யோக சூத்திரம் - 1.40 - அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

யோக சூத்திரம் - 1.40 - அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்



परमाणु परममहत्त्वान्तोऽस्य वशीकारः ॥४०॥

paramāṇu parama-mahattva-anto-'sya vaśīkāraḥ ॥40॥

A person who attains this goal has mastery over everything, from the smallest atom to the entire universe. ||40||


parama = எல்லைகள்
aṇu = அணு, நுண்ணிய பொருள்
parama = எல்லை
maha = மிகப் பெரிய
tvānto = பொருள்
mahattva = மகத்துவம், தன்மை , உண்மை
antah = அந்தம், முடிவு,
asya = இது
vaśīkāraḥ = வசீகரம், கட்டுக்குள் , வசப்படுத்தல்

இது வரை மனதை எப்படி சலனம் இல்லாமல் கொண்டு செல்வது என்று பார்த்தோம். அப்படி செய்தால் என்ன கிடைக்கும் ? அதனால் என்னென்ன இலாபங்கள்.

மிகப் பெரிய பொருளும், மிகச் சிறிய பொருளும் வசப்படும்.


அப்படி என்றால் என்ன ?

நமது புலன்களுக்கு புலப்படுவது இந்த உலகின் மிகச் சிறிய பகுதிதான்.

கன்னுக்குத் தெரியாத எவ்வளவோ கண் முன்னே  இருக்கிறது. நுண்ணியிரிகள், அணு என்று எவ்வளவோ இருக்கிறது. microscope போன்ற கருவிகளால் பார்த்தால் தெரியும். Microscope ன் சக்தியைப் பொறுத்து இருக்கிறது நாம் எவ்வளவு தூரம் பார்க்க முடியும் என்பது.

அது போல தூரத்தில் உள்ள பொருள்களை பார்க்க telescope  போன்ற சாதனங்களை உபயோகப் படுத்துகிறோம். அவற்றின் சக்தி அதிகமாக அதிகமாக தூரத்தில் உள்ள பொருள்களை காண முடியும்.

அது போலத்தான் சத்தம், வாசனை என்பவை.

சரி. அதிலிருந்து என்ன தெரிகிறது ?


இந்த உலகம் என்பது நாம் உணர்வது மட்டும் அல்ல. நமக்குத் தெரியாத எவ்வளவோ இருக்கிறது. கண் முன்னே இருந்தும் நம்மால் காண முடிவதில்லை.

காண முடியவில்லை என்பதால் அவை இல்லை என்று நாம் சொல்ல முடியாது.

ஒன்று புலப்படும்...அணுவுக்கு அணுவாயும், அப்பாலுக்கு அப்பாலும் இந்த  உலகம் விரிந்து கொண்டே போகிறது. முடிவில்லாமல் இது விரிந்து கொண்டே போகிறது.

மேலும், இந்த உலகத்தில் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. ஒன்றிலிருந்து ஒன்று வரும். சாதாரணமாக நாம் இவற்றை அறிவதில்லை. பொருள்கள், உயிர்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை.

அது மட்டும் அல்ல, உணர்வுகள், உணச்சிகள், அவற்றின் வெளிப்பாடுகள் அனைத்தும் தொடர்பு கொண்டவை.

உங்களுக்கும் எனக்கும் தொடர்பு உண்டு.

என் உணர்வுகளுக்கும், நான் சாப்பிட உணவுக்கும் தொடர்பு உண்டு.

நாம் மரத்தை பார்த்தால் இலையை பார்ப்பது இல்லை. இலையை பார்த்தால் மரத்தை பார்ப்பது இல்லை.

இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை.

ஒரு யோகி மிக நுணுக்கமானதையும், மிக  பரந்து பட்டதையும் ஒருங்கே காண்கிறான்.


அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

என்பார் ஒளவையார்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச்
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்

என்பார் மணிவாசகர்.

இந்த அண்ட சராசரங்கள் எல்லாம் , வீட்டில் ஒளியில் மிதக்கும் ஒரு தூசு போல  என்கிறார்.

ஒன்றுமில்லா வெளியே. வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.  அடியேன் அறிவுக்கு அளவானது அதிசயமே என்று அதிசயப் படுகிறார் அபிராமி பட்டார்.


கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

விரிந்து பரந்த இந்த உலகம் யோகிகளுக்கு வசப்படுகிறது

நமக்கு நமது உடலே வசப் பட மாட்டேன் என்கிறது. எங்கே சொன்னால் கேட்கிறது. சாப்பிடாதே என்றால்  சாப்பிடுகிறது.செய்யாதே என்றால் செய்கிறது. பார்க்காதே என்றால் பார்க்கிறது.

யோக நிலையில் மனம் வசப்பட்டால், இந்த பிரபஞ்சம் வசப்படும்.


http://yogasutrasimplified.blogspot.in/2017/11/140.html

No comments:

Post a Comment