யோக சூத்திரம் - 2.8 - துவேஷம்
दुःखानुशयी द्वेषः ॥८॥
duḥkha-anuśayī dveṣaḥ ॥8॥
duḥkha = துக்கம், கவலை ,
anuśayī = நம்பிக்கையால், அதனால் , நினைத்துக் கொள்வதால்
dveṣaḥ = துவேஷம், வெறுப்பு ॥8॥
துக்கம் என்று நம்புவதால் துவேஷம் வருகிறது.
அவித்தையின் அடுத்த வெளிப்பாடு துவேஷம்.
முதலில் அவித்தை என்றால் என்ன என்று பார்த்தோம்.
அதில் இருந்து வெளிப்படும் அஸ்மிதா, ராக இவற்றைப் பார்த்தோம்.
அடுத்தது துவேஷம்.
துவேஷம் என்றால் வெறுப்பு.
ராக என்பதின் எதிர்மறை துவேஷம்.
துவேஷம் ஏன் வருகிறது ?
ஒன்று நமக்கு துக்கம் அல்லது கவலையை தரும் என்று நாம் நம்பினால் அதன் மேல் நமக்கு வெறுப்பு வருகிறது.
நமக்கு துன்பம் தந்தவர்களை ஆம் வெறுப்போம் அல்லவா ?
நமக்கு பிடிக்காத ஒன்றின் மேல் வெறுப்பு வருவது இயற்கை தானே. இதில் என்ன இருக்கிறது என்று பதஞ்சலி சொல்ல வந்து விட்டார். இது தான் நமக்குத் தெரியுமே.
காரணம் இல்லாமல் பதஞ்சலி சொல்ல மாட்டார்.
சிந்தித்துப் பார்ப்போம்.
ஒருவர் மேல் வெறுப்பு வருகிறது என்றால் அதற்கு காரணம் அவரா அல்லது நாமா ?
அவர் செய்யும் செய்கைகள், அல்லது பேசும் பேச்சு நமக்கு சுகமாக இல்லை, உடன்பாடு இல்லை, எனவே அது நமக்கு வெறுப்பை, எரிச்சலைத் தருகிறது.
வெறுப்பின் காரணம் அவர் அல்ல. அவருடைய அந்த பேச்சும் செய்கையும் மற்ற சிலருக்கு பிடித்து இருக்கிறதே.
எனவே, வெறுப்பின் காரணம், நமது எண்ணம். அது நம்மை காயப் படுத்துவதால் நாம் அதை வெறுக்கிறறோம்.
சில உதாரணங்கள் பார்ப்போம்.
ஒரு ஆசிரியர் மாணவனை படி, படி என்று ஓயாமல் சொல்லிக் கொண்டு இருக்கிறார். வீட்டுப் பாடம் தருகிறார். சரியாக செய்யவில்லை என்றால் திட்டுகிறார், குட்டுகிறார் . மாணவனுக்கு ஆசிரியர் மேல் வெறுப்பு வருகிறது. எப்படியோ படித்து முடித்து பெரிய ஆளாகி விடுகிறான். இப்போது நினைத்து பார்க்கிறான்....அடடா, அன்று அந்த ஆசிரியர் நம்மை திட்டி, விரட்டி படிக்கச் செய்யாமல் இருந்திருந்தால், நாம் இன்று இந்த நிலையை அடைந்திருக்க முடியுமா என்று நினைத்து அவர் மேல் மரியாதை கொள்கிறான்.
அதே ஆசிரியர் தான், அதே செய்கை தான், அதே மாணவன் தான்...ஒரு காலத்தில் வெறுப்பாக இருந்தது , இப்போதும் நன்றி உணர்வாக மாறிவிட்டது. இது இரண்டும் ஆசிரியருக்குத் தெரியாது. வெறுப்பின் காரணம் ஆசிரியர் அல்ல. மாணவனின் மனப் பங்கு என்று புரிகிறது அல்லவா ?
அதே போலத்தான் பெற்றோரும்.
காலையில் எழுந்திரு, குளி , படி, சாப்பிடு, நேரா நேரத்தில் தூங்கு, அதை செய், இதை செய்யாதே என்று ஆயிரம் குறிப்புகள் (instructions ) கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று பிள்ளைகள் பெற்றோரை வெறுக்கும். அது பெற்றோரின் தவறா ?
அது பிள்ளைகளின் தவறான எண்ணம்.
அவர்கள் சொல்வதோ செய்வதோ தவறாகவே இருந்து விட்டு போகட்டும். அது எதுவாக இருந்தாலும், வெறுப்புக்கு காரணம் அவர்கள் அல்ல. உங்கள் எண்ணம் என்று புரிந்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக , நம்மிடம் இருக்கும் எந்த குணமும் தனித்து நிற்பதில்லை. ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை.
ஆசையும், பயமும், வெறுப்பும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை.
மாணவனை ஆசிரியர் படிக்கச் சொன்னால் மாணவனுக்கு ஆசிரியர் மேல் வெறுப்பு வருகிறது.
காரணம் என்ன ? ஆசை.
மாணவனின் ஆசை.
இது என்ன புது கதையாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ?
மாணவனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் தூங்க ஆசை, சினிமா பார்க்க ஆசை, ஓய்வு எடுக்க ஆசை, நண்பர்களோடு அரட்டை அடிக்க ஆசை...ஆனால் இந்த ஆசிரியர் படி படி என்று உயிரை எடுக்கிறார். மாணவனின் ஆசைக்கு தடையாக இருக்கிறார். எனவே அவர் மேல் வெறுப்பு வருகிறது.
கணவன் மனைவி இடையேயும் இது போன்ற வெறுப்பு வரலாம். வெறுப்புக்கு காரணம் மற்றவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். தான் கேட்டதை கணவன் வாங்கித் தரவில்லை என்றால் கணவன் மேல் வெறுப்பு வருகிறது. காரணம் வேண்டிய பொருளின் மேல் ஆசை. தான் சொல்வதை மனைவி கேட்டு அதன் படி பணிவாக நடக்க வேண்டும் என்று கணவன் ஆசைப் படுகிறான். அவள் அப்படி நடக்கவில்லை என்றால் அவர்கள் மேல் வெறுப்பு வருகிறது. வெறுப்புக்குக் காரணம் மனைவி அல்ல. அவள் அப்படி இருக்க வேண்டும் ஆசைப் பட்ட கணவனின் ஆசையே காரணம்.
நமது ஆசையின் மறு வடிவம்தான் வெறுப்பு.
ஒரு அளவு கோலை (scale ) எடுத்துக் கொண்டால், அதன் ஒரு முனை ஆசை, இன்னொரு முனை வெறுப்பு.
ராக, துவேஷ என்றும் என்று முனைகள். அளவு கோல் என்னவோ ஒன்றுதான். நீங்கள் ஒரு முனைக்கு ஆசை என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். இன்னொரு பகுதிக்கு துவேஷம் என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள். இரண்டும் ஒரு அளவு கோல் தான்.
ஆசை அல்லது ராக என்பது போகும் போது துவேஷமும் போய் விடும்.
நாம், வெறுப்புக்கு காரணம் மற்றவர்கள் என்று நினைக்கிறோம். நாம் தான் காரணம்.
அப்படியானல் வெறுக்கும் செயல் , சொல் என்று எதுவும் இல்லவே இல்லையா ?
கேள்வி அது அல்ல. ஏன் அது உங்களுக்கு வெறுப்பைத் தருகிறது என்று யோசியுங்கள்.
நீங்கள் ஆழமாக யோசித்தால், அனைத்து வெறுப்பும் உங்களது ஆசையில் இருந்து புறப்படுகிறது என்று புரியும்.
நீங்கள் உங்களை மாற்றினால் உங்களை சுற்றி உள்ள உலகம் மாறும்.
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே
வெறுக்கும் செயல்களை செய்தாலும், அப்படி செய்தவரை பொறுப்பது பெரியவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல...என்பார் அபிராமி பட்டர்.
அபிராமி , நீ எனக்கு மறுக்கக் கூடியவற்றை செய்தாலும், நான் உன்னை வெறுக்க மாட்டேன், உன்னை வாழ்த்துவேன் என்கிறார்.
காரணம் என்ன ? வெறுப்புக்குக் காரணம் மற்றவர்களிடம் இல்லை. நம்மிடம் இருக்கிறது என்பதை அறிந்ததனால்.
சிந்தியுங்கள். இது புரிந்தால், வெறுப்பு அன்பாய் மலரும்.
http://yogasutrasimplified.blogspot.in/2017/12/28.html
No comments:
Post a Comment