யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 2
परिणाम ताप संस्कार दुःखैः गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ॥१५॥
pariṇāma tāpa saṁskāra duḥkhaiḥ guṇa-vr̥tti-virodhācca duḥkham-eva sarvaṁ vivekinaḥ ॥15॥
pariṇāma = பரிணாம = வளர்ச்சி, மாற்றம்
tāpa = தாபம், ஆசை
saṁskāra = படிமங்கள்
duḥkhaiḥ = வலி, துக்கம்
guṇa = குணங்கள்
vr̥tti = அலைகள், சஞ்சலம், மாற்றம் , சலனம்
virodhācca = முரண்பாடு , எதிர் நிலை
duḥkham = வலி, துக்கம்
eva = மேலும்
sarvaṁ = சர்வம், எங்கேயும், எப்போதும்
vivekinaḥ = விழிப்புணர்வு பெற்றவர்கள்
துன்பத்திற்கு காரணம், வெளி உலக மாற்றம், அவை நம்மில் ஏற்படுத்தும் தாக்கம், விழிப்புணர்வு இல்லாமை.
துன்பத்திற்கு என்ன காரணம் ?
முதலாவது காரணம் - பரிணாம - என்கிறார்.
பரிணாமம் என்றால் என்ன ?
மாற்றம். வெளி உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. இன்று ஏதோ ஒன்று விளம்பரத்தில் வருகிறது, அல்லது நண்பர் வீட்டில் பார்க்கிறோம், அதன் மேல் ஆசை வருகிறது. நமக்கும் அது போல இருந்தால் எப்படி இருக்கும் என்று ஏக்கம் வருகிறது. அதை அடைய மனம் விரும்புகிறது. கஷ்டப்பட்டு அடைந்தும் விடுகிறோம். அடைகிற வரையில் துன்பம்தான். அடைந்த பின் இன்பம் வருகிறதா ? இல்லை.
ஏன் இல்லை ?
பரிணாமம். உலகம் மாறிப் போகிறது. நாம் அடைந்ததை விட சிறந்த ஒன்று வந்து விடுகிறது. அட, இதுனால என்ன பிரயோஜனம். இதை விட அது நல்லா இருக்கே என்று மனம் வேறொன்றை நாடுகிறது.
அது மட்டும் அல்ல,
இன்னொரு பரிணாமமும் இருக்கிறது....அது...நாம் அடைந்த பொருள் நாளடைவில் மாறி விடும்.
பழசாகி விடும். தேய்ந்து போகும். கெட்டு போகும். மங்கிப் போகும். வாங்கிய போது இருந்த மெருகு எதிலும் இருக்காது.
இதில் பொருளில் மட்டும் அல்ல. மனித உறவுகளிலும் அப்படித்தான்.
அழகான பெண் என்று கல்யாணம் கட்டிக் கொண்டு வருகிறான். கல்யாணம் முடிந்த பின், இவளை அவள் அழகோ ? அவளை திருமணம் செய்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்குமோ ? என்று மனம் அலை பாய்கிறது.
திருமணம் ஆன சில வருடங்களில், அலுப்பு வந்து விடுகிறது. ஓரிரண்டு குழந்தைகள் பிறந்த பின் பெண்ணின் அழகு முன்பு போல் இருப்பது இல்லை. மாற்றம் வருகிறது.
அது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. வயது ஏறும். முதுமை வரும். அழகு குன்றும்.
இது ஒரு புறம்.
இன்னொரு பரிணாமம் இருக்கிறது. மூன்றாவது பரிணாமம் ...அது நம் மனம்.
ஆசைப் படும் போது இருக்கும் மனம், அதை அடையும் போது இருப்பது இல்லை. மனம் மாறிக் கொண்டே இருக்கிறது.
நம்மிடம் இருக்கும் எத்தனையோ பொருள்கள், உறவுகள் , அவை எல்லாம் ஒரு காலத்தில், அவற்றை அடைவதே நம் இலட்சியம் என்று இருந்தோம். அது மட்டும் கிடைத்து விட்டால் , சொர்கமே கிடைத்த மாதிரி என்று இருந்தோம். கிடைத்த பின் சொர்கம் மாதிரியா இருக்கு ?
அது அப்படி இருக்கும் போது , இப்போதுள்ள ஆசைகள் மட்டும் அதற்கு விதி விலக்கா ? இவையும் நமக்கு இன்பம் தரப் போவது இல்லை. இருந்தும், அவற்றின் பின்னால் ஓடுகிறோம்.
இந்த பரிணாமத்தை புரிந்து கொள்ளாவிட்டால் துன்பம் தான்.
வெளி உலகம் மாறிக் கொண்டே இருக்கும்.
அதனால், நம் மனமும் மாறிக் கொண்டே இருக்கும்.
அது தெரியாமல், இது தான் எனக்கு வேண்டும். அதை அடைந்தால் தான் நிம்மதி. மன அமைதி கிடைக்கும் என்று நினைப்பது வீண் வேலை. அதனால் துன்பம் வருகிறது.
எதை அடைந்தாலும் இன்பமும், அமைதியும் வரப் போவது இல்லை. அப்படி ஒன்று இருந்தால், மனித குலம் அதை இந்நேரம் கண்டு பிடித்திருக்கும்.
சற்றே தள்ளி நின்று யோசியுங்கள்.
எதெல்லாம் ஆசைப் பட்டீர்கள். எவற்றையெல்லாம் அடைந்தீர்கள். அடைந்தவை எல்லாம் உங்களுக்கு நினைத்த இன்பத்தை தந்திருக்கிறதா ? இப்போது எவற்றிற்கு எல்லாம் ஆசைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ? சிந்தியுங்கள்.
துன்பத்திற்கு முதல் காரணம் - பரிணாமம்.
அடுத்த காரணம்.....
http://yogasutrasimplified.blogspot.in/2017/12/215-2.html
No comments:
Post a Comment