யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 4
परिणाम ताप संस्कार दुःखैः गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ॥१५॥
pariṇāma tāpa saṁskāra duḥkhaiḥ guṇa-vr̥tti-virodhācca duḥkham-eva sarvaṁ vivekinaḥ ॥15॥
pariṇāma = பரிணாம = வளர்ச்சி, மாற்றம்
tāpa = தாபம், ஆசை
saṁskāra = படிமங்கள்
duḥkhaiḥ = வலி, துக்கம்
guṇa = குணங்கள்
vr̥tti = அலைகள், சஞ்சலம், மாற்றம் , சலனம்
virodhācca = முரண்பாடு , எதிர் நிலை
duḥkham = வலி, துக்கம்
eva = மேலும்
sarvaṁ = சர்வம், எங்கேயும், எப்போதும்
vivekinaḥ = விழிப்புணர்வு பெற்றவர்கள்
துன்பத்திற்கு காரணம், வெளி உலக மாற்றம், அவை நம்மில் ஏற்படுத்தும் தாக்கம், விழிப்புணர்வு இல்லாமை.
துன்பங்களுக்கு காரணம் என்ன ?
முதல் காரணம் - பரிணாமம் - அதாவது மாற்றம்
இரண்டாவது காரணம் - தாபம்
இவை இரண்டையும் இதற்கு முந்தைய பிளாகில் பார்த்தோம்
அடுத்தது,
ஸம்ஸ்கார. ஸம்ஸ்கார என்றால் சுவடுகள், படிமங்கள் என்று அர்த்தம்.
அது என்ன சுவடு, படிமம்...அது எப்படி துன்பத்துக்கு காரணமாகும் ?
அனுபவங்கள் நமக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இன்பமோ, துன்பமோ , நல்லதோ கெட்டதோ அவை நமக்குள் ஒரு பதிவினை விட்டுச் செல்கின்றன.
கடற்கரையில் காலடிச் சுவடுகள் போல, அனுபவங்களின் சுவடுகள் நமக்குள் ஏராளமாய் படிந்து கிடக்கின்றன. சில பேரை நினைத்தாலே வெறுப்பும் கோபமும் வருகிறது. சில பேரை நினைத்தால் மனதுக்குள் மழை அடிக்கிறது. அதே போல சம்பவங்களும். சில சம்பவங்கள் மனதுக்குள் நெருடலை விட்டுச் செல்கின்றன. சில சம்பவங்கள் இனிய நினைவுகளை விட்டுச் செல்கின்றன.
எப்போதோ நடந்து முடிந்த சம்பவங்கள் இன்றும் நம்மை பாதிக்கின்றன. கடந்த காலத்தில் நிகழ்ந்ததை நினைத்து இப்போது வருந்துகிறோம்.
சில சமயம் அவை மீண்டும் கிடைக்காதா என்று ஏங்கி வாடுகிறோம்.
அனுபவங்களை சேர்த்துக் கொண்டே போவதால் ஒவ்வொரு அனுபவம் ஒரு படிமத்தை, ஒரு சுவடை விட்டுச் செல்வதால், யோசித்துப் பாருங்கள், எத்தனை ஆயிரம் சுவடுகள் உங்களுக்குள் இருக்கும் என்று. இவை ஒன்றோடு ஒன்று முட்டி மோதி உங்கள் மனதை அலைக்கழிக்கின்றன. நல்லது கெட்டது என்று எல்லாம் குவிந்து கிடக்கிறது.
வாசனை என்று சொல்லுவார்கள். பெருங்காயம் வைத்த பாத்திரத்தில், பெருங்காயத்தை எடுத்த பின்னாலும் வாசம் வந்து கொண்டே இருப்பதை போல, சம்ஸ்காரம் என்பது உள்ளே இருந்து கொண்டு நம்மை நடத்துகின்றன.
குழந்தைகள் சந்தோஷமாக இருக்கின்றன என்றால் அவைகளிடம் இந்த அனுபவ தொகுப்பு இல்லை.
இவர் நல்லவர், அவர் கெட்டவர் , இது நல்லது, அது கெட்டது , இது உயர்வு, இது தாழ்வு என்று எத்தனையோ படிமங்கள்.
சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் சுவடுகளை.
அடுத்தது குணங்கள்.
ரஜோ , தமோ, சாத்வீகம் என்று மூன்று குணங்கள் நமக்கு இருக்கின்றன.
இதில் சாத்வீகம் என்பது சாந்தம், பொறுமை, நல்லதை நினைப்பது என்பது.
ரஜோ குணம் என்பது வீரியம், செயலாற்றுதல், உழைப்பை தூண்டுவது, செயலை தூண்டுவது.
தமோ குணம் என்பது சோம்பல், முடங்கிக் கிடத்தல், அனுபவித்தல், சுகத்தில் மூழ்குதல் என்பன.
இதில் நமக்கு ரஜோ குணமும், சாத்வீகமும் வேண்டும், தமோ அல்லது தமஸ் என்று சொல்லப் படும் குணம் வேண்டாம், அது கெட்ட குணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படி அல்ல.
இந்த முக்குண கலவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
தமோ குணம் இல்லை என்றால் தூங்க முடியாது. ரஜோ குணம் அளவுக்கு அதிகமாகப் போனால் , ஏதாவது செய்து கொண்டே இருக்கத் தோன்றும். பத்து மணிக்கு மேல் பார்ட்டி, கிளப் என்று அலையும். இருக்கிற நேரம் பூராவையும் அனுபவிக்க வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும். உழைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் ஓய்வும். தூக்கம் வராமல் அவதி படுபவர்கள் தமோ குணம் குறைந்ததால்.
இந்த குணங்கள் மாறு பட்டால் துன்பம் வரும். சாத்வீகம் மிகக் குறைந்தால் உயர்ந்த சிந்தனைகள், நோக்கங்கள் இல்லாமல் போகும். வாழ்க்கை என்பது ஏதோ அனுபவிக்க என்று நினைத்த்துக் கொண்டு எல்லாவற்றையும் அனுபவிக்க துடிக்கும்.
இந்த மூன்று குணங்களும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இல்லை என்றால் சிக்கல் தான்.
மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர் நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று.
என்பார் வள்ளுவர்.
இந்த மூன்றும், மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் (துன்பம் ) செய்யும்.
இவற்றை எப்படி கட்டுப் படுத்துவது என்று எழுதப் புகுந்தால் நீண்டு விரியும். ஆர்வம் உள்ளவர்கள் தேடி அடையுங்கள்.
இந்த துன்பங்களில் இருந்து விடு பட என்ன வழி ?
விழிப்புணர்வு (awareness ) உள்ளவர்கள், இந்த துன்பங்களில் இருந்து விடுபடுவார்கள் என்கிறார்.
எப்படி அவர்கள் விடுபடுவார்கள் என்பதை பார்ப்போம்.
http://yogasutrasimplified.blogspot.in/2017/12/215-4.html
No comments:
Post a Comment