யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 3
परिणाम ताप संस्कार दुःखैः गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ॥१५॥
pariṇāma tāpa saṁskāra duḥkhaiḥ guṇa-vr̥tti-virodhācca duḥkham-eva sarvaṁ vivekinaḥ ॥15॥
pariṇāma = பரிணாம = வளர்ச்சி, மாற்றம்
tāpa = தாபம், ஆசை
saṁskāra = படிமங்கள்
duḥkhaiḥ = வலி, துக்கம்
guṇa = குணங்கள்
vr̥tti = அலைகள், சஞ்சலம், மாற்றம் , சலனம்
virodhācca = முரண்பாடு , எதிர் நிலை
duḥkham = வலி, துக்கம்
eva = மேலும்
sarvaṁ = சர்வம், எங்கேயும், எப்போதும்
vivekinaḥ = விழிப்புணர்வு பெற்றவர்கள்
துன்பத்திற்கு காரணம், வெளி உலக மாற்றம், அவை நம்மில் ஏற்படுத்தும் தாக்கம், விழிப்புணர்வு இல்லாமை.
துன்பத்திற்கு என்ன காரணம் ?
முதலாவது காரணம் - பரிணாமம் என்று பார்த்தோம்.
அடுத்தது, தாபம். தாபம் என்றால் ஏக்கம், தவிப்பு. பொருள்களும், உறவுகளும் இன்பம் தருபவைதான். அதில் சந்தேகம் இல்லை. அவற்றை அடைய முயற்சிப்பதிலும் தவறில்லை. ஆனால், அவை கிடைத்தால் தான் வாழ்க்கை, இல்லை என்றால் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்ற தாபம் துன்பத்திற்கு இன்னொரு காரணம்.
சிலருக்கு , தங்களுக்கு வேண்டியதை அடையும் வரை தூக்கம் வராது, நிம்மதி இருக்காது, வேறு எதுவும் ஒரு பொருட்டாகத் தெரியாது.
பணம், அதிகாரம், பதவி, செல்வாக்கு, மதிப்பு, என்று ஏதோ ஒன்றை சதா சர்வ காலமும் அதையே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
சிலர் கடவுள், சொர்கம், வைகுண்டம், கைலாசம், இறைவன் திருவடி என்று ஏங்குவார்கள்.
எல்லா ஏக்கமும் ஒன்றுதான். அது செல் போனாக இருந்தாலும் சரி, புதியதாய் வந்த காராக இருந்தாலும் சரி, இறைவன் திருவடியாக இருந்தாலும் சரி...ஆசை என்பது ஆசைதான். இதன் மேல் ஆசை என்பதில் பெரிய பெரிய வித்தியாயசம் இல்லை.
ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பார் திருமூலர்.
இறைவன் மேல் வைத்த உயர்ந்த ஆசை , பொருள்கள் மேல் வைத்த தாழ்ந்த ஆசை என்று இல்லை.
எல்லா ஆசையும் ஒன்று தான்.
தாபம் மறைந்தால் துன்பம் மறையும்.
நாமாக கற்பித்துக் கொள்கிறோம்...சிற்றின்பத்தின் மேல் ஆசை வைக்கக் கூடாது. பேரின்பத்தின் மேல் ஆசை வைக்கலாம் என்று.
பதஞ்சலியைப் பொறுத்த வரை, எல்லா சிற்றின்பம், பேரின்பம் என்ற பாகு பாடெல்லாம் கிடையாது. எல்லா தாபங்களும் துன்பம் மற்றும் வலிக்கு காரணம். அவ்வளவுதான்.
யோசித்துப் பாருங்கள். தாபம் என்று ஒன்று வந்து விட்டால், மகிழ்ச்சி மறைந்து விடும். இதன் மேல் தாபம் இருக்கிறதோ, அது மட்டுமே பிரதானமாகத் தெரியும். மற்றவை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
உங்கள் தாபம் இதன் மேல் என்று சிந்தியுங்கள். அது எப்படி உங்கள் மகிழ்ச்சியை குறைக்கிறது என்றும் சிந்தியுங்கள்.
நல்ல தாபம், கெட்ட தாபம் என்று லேபிள் ஒட்டாதீர்கள். யாருக்காக அந்த தாபம் என்று நினைக்காதீர்கள் ...நாட்டுக்கு, வீட்டுக்கு ...என்று ஆயிரம் காரணம் கிடைக்கலாம் அந்த தாபத்தை ஞாயப்படுத்த. எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளுங்கள்.
உங்களின் தாபம் எது என்று மட்டும் சிந்தியுங்கள்.
துன்பத்திற்கு மேலும் என்னென்ன காரணங்கள் என்று மேலும் சிந்திப்போம்.
http://yogasutrasimplified.blogspot.in/2017/12/215-3.html
No comments:
Post a Comment