Thursday, December 7, 2017

யோக சூத்திரம் - 2.13 - வாழ்க்கையை அனுபவிப்பது எப்படி

யோக சூத்திரம் - 2.13 - வாழ்க்கையை அனுபவிப்பது எப்படி


सति मूले तद्विपाको जात्यायुर्भोगाः ॥१३॥

sati mūle tad-vipāko jāty-āyur-bhogāḥ ॥13॥

sati = அப்படி இருப்பதற்கு

mūle =மூல காரணம்

tad = அவர்களின்

vipāko = வெளிப்பாடு,

jāty = சமூக நிலை

āyur = ஆயுள்

bhogāḥ = வாழ்க்கையை அனுபவிப்பது

ஒருவனின் ஆயுள், சமூக நிலை, அவன் எவ்வாறு வாழ்க்கையை அனுபவிக்கிறான் என்பது அதைப் பொறுத்தது 


நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரியும் , உங்கள் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட பாதையிலேயே மீண்டும் மீண்டும் போய் கொண்டிருப்பது. உங்கள் செயல், எண்ணங்கள், எல்லாமே ஒரு செக்கு மாடு மாதிரி மீண்டும் மீண்டும் ஏதோ ஒன்றையே சுத்தி சுத்தி வரும்.

அது பயமாக இருக்கலாம், குழப்பமாக இருக்கலாம், குற்ற உணர்வாக இருக்கலாம், ஆசையாக இருக்கலாம் ஏதோ ஒன்றைப் பற்றியே உங்கள் வாழ்க்கை சுத்தி சுத்தி வரும்.

அதைப் பொறுத்தே நீங்கள் இருக்கும் இடம், உண்ணும் உணவு, செய்யும் செயல்கள் அனைத்தும் இருக்கும். இவை ஏதோ ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை போலத் தெரிந்தாலும், இவற்றிற்கு அடி நாதமாய் ஏதோ ஒன்று இருந்து கொண்டே இருக்கும்.

சிலருக்கு வெளியே போகவே பிடிக்காது. சிலருக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலும் போதும் எங்கே போகலாம் என்று இருப்பார்கள்.

சிலருக்கு தாழ்வு  மனப்பான்மை இருக்கும். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நினைவும் அந்த தாழ்வு மனப்பான்மையை போக்கிக் கொள்ளவே இருக்கும்.

சிலருக்கு, ஆச்சாரம்,
சிலருக்கு , ஆணவம்,
சிலருக்கு, பக்தி , படிப்பு,
சிலருக்கு , சேவை

என்று ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொள்ளகிறார்கள்.

அவர்கள் செய்யும் செயல் அனைத்தும் அதை சார்ந்தே இருக்கிறது.

இங்கு ஒரு முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் .



 jāty-āyur-bhogāḥ

ஜாதி என்று பதஞ்சலி சொல்லுவது சமயம் சேர்ந்த , பிறப்பு சார்ந்த ஜாதி அல்ல. தொழில் சார்ந்த ஜாதி.

சிலருக்கு படிப்பு, சொல்லிக் கொடுப்பது, ஆராய்ச்சி செய்வது இவற்றில் நாட்டம் இருக்கும்.

சிலருக்கு விளையாட்டு, வேலை செய்வது, பிரயாணம் செய்வது இவற்றில் ஆர்வம் இருக்கும்.

சிலருக்கு ஆட்களை கட்டி மேய்ப்பது, அவர்களை ஒழுங்கு படுத்துவது, வேலை வாங்குவது என்று நாட்டம் இருக்கும்.


இப்படி ஒவ்வொருவருக்கும் ஒன்றில் நாட்டம் இருக்கும். அதைப் பொறுத்தே அவர்களின் வேலை அமைகிறது. அதைப் பொறுத்து அவர்களின் சமுதாய அந்தஸ்து அமைகிறது.

பதஞ்சலி இன்னும் மேலே போகிறார்.

அவர்களின் ஆயுளும் அவர்கள் வாழ்க்கையை எப்படி அனுபவிக்கிறார்கள் என்பதும் இந்த கிலேசத்தின் அடிப்படையில் அமைகிறது என்கிறார்.

நாம் பல முறை செய்தி தாள்களில் படித்து இருக்கிறோம்...கோவில் வாசலில் பிச்சை எடுத்தவன் பல இலட்சங்களுக்கு அதிபதியாக இருந்து இறந்தான் என்று.

அவனுக்கு எதிர் காலம் பற்றிய பயம். பணத்தை சேமித்துக் கொண்டே இருந்தான். செலவழிக்க மனம் இல்லை. அது அவனின் மன  கிலேசம்.

பதஞ்சலி இது சரி, அது தவறு என்று சொல்ல வரவில்லை.

அவர் சொல்வதெல்லாம் இது தான்...இந்த மன கிலேசம் என்பது மிக மிக ஆழமானது. நம் வாழ்க்கையை நிர்ணயிப்பது. அதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களின் கோபம், பயம், மனப் பான்மை, சந்தோஷம், துக்கம், வேலை, உறவுகளின் தன்மை எல்லாம்  உங்கள் மனதை பொறுத்தே அமைகிறது.

ஆழ்ந்து சிந்தியுங்கள். மீண்டும் மீண்டும் உங்கள் வாழ்வில் தோன்றும் எண்ணம் எது என்று. அது எங்கே இருந்து வருகிறது என்று தேடுங்கள்.

தேடுங்கள்....கண்டடைவீர்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/213.html

No comments:

Post a Comment