யோக சூத்திரம் - 2.18 - வாழ்க்கையின் நோக்கம் என்ன ? - பாகம் 1
प्रकाशक्रियास्थितिशीलं भूतेन्द्रियाअत्मकं भोगापवर्गार्थं दृश्यम् ॥१८॥
prakāśa-kriyā-sthiti-śīlaṁ bhūtendriya-ātmakaṁ bhoga-apavarga-arthaṁ dr̥śyam ॥18॥
prakāśa = பிரகாச, ஒளி பொருந்திய
kriyā = கிரியா, வேலை, கர்மம், தொழில்
sthiti = ஸ்திதி, நிலைத்த, அசையாத
śīlaṁ = சில
bhūta = பூத, பஞ்ச பூதங்களால் ஆன
endriya = இந்திரிய, இந்திரியங்கள்
ātmakaṁ = அப்படி
bhoga= போக , அனுபவித்தல்
apavarga-= அபவர்க , விடுதலை அடைய,
arthaṁ = அர்த்தம் - நோக்கம், குறிக்கோள்
dr̥śyam = திரிஷ்யம், பார்வை, பார்க்கப் படுவது ॥18॥
வாழ்க்கையின் நோக்கம் என்ன ?
எதற்காக வாழ்கிறோம் ? இந்த வாழ்கைக்கு அர்த்தம் தான் என்ன ?
பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், திருமணம் முடித்தோம், பிள்ளைகளை பெற்றோம், அவற்றை வளர்த்தோம், வயதான பின் மறைந்தோம்....இவ்வளவுதானா...எதற்கு இத்தனை பாடு ?
நாம் பிறந்ததால் என்ன ஆகி விட்டது உலகுக்கு ? நாம் பிறக்காவிட்டால் என்ன குறைந்திருக்கும் ?
உலகில் எத்தனை தொல்லைகள், துன்பங்கள், பசி,பிணி, பட்டினி, திருட்டு, கொள்ளை, நோய் , விபத்து, சண்டை , சச்சரவு...இதெல்லாம் எதற்கு ?
இறைவன் உலகைப் படித்தான் என்றால் இத்தனை சிக்கல் எதற்கு ? இவை இல்லாமல் உலகை படைக்க முடியாதா ? சரி அப்படியே படைத்து விட்டாலும், இந்த சிக்கல்களை ஒரு நொடியில் போக வைக்க முடியாதா கடவுளுக்கு ? பின் ஏன் இந்த போராட்டம் ?
துன்பமும், போராட்டமும், எதிர் நீச்சலுக்குமாகவே இருக்கிறது இந்த உலகு.
உலகை விடுங்கள். நமது வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் ? குறிக்கோள் ?
தெரியுமா நமக்கு ? வாழ்ந்து கொண்டிருக்கிறோமே தவிர, எதற்காக என்று தெரியுமா ?
இந்த கேள்விக்கு பலர் பலவிதமாக பதில் சொல்லலாம்...
வாழ்க்கை என்பது அனுபவிக்க, இறைவனை அடைய, முக்தி அடைய, வைகுண்டம் போக, கைலாசம் போக, மற்றவர்களுக்கு உதவி செய்ய, சாஸ்திரப் படி வாழ , ஞானம் பெற என்று எவ்வளவோ சொல்லலாம்.
ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கும். சில பேர், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இருக்குற வரைக்கும் சந்தோஷமா இருந்திட்டு போவோம். அவ்வளவுதான்....என்று இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
முதலில் கற்பனையானவற்றை ஒதுக்கி விடலாம் - சொர்கம், வைகுண்டம், கைலாசம், இறைவன் திருவடி அடைவது போன்றவை. அதை அடைய வேண்டும் என்று விரும்புவர்களுக்கும் தெரியாது, மற்றவர்களுக்கும் தெரியாது அவர்கள் அடைந்தார்களா என்று. முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அடைந்தார்களா இல்லையா என்று தெரியாது. எனவே அவற்றை விட்டு விடலாம்.
பதஞ்சலி , நாம் சரி பார்க்க முடியாத எதையும் சொல்ல மாட்டார். நம்பிக்கை என்பதெல்லாம் அவரிடம் கிடையாது. இதோ இருக்கிறது. நீயே சரி பார்த்துக் கொள் . ஒரு நம்பிக்கையும் தேவை இல்லை என்பது அவர் பாணி.
பின் பணம், செல்வாக்கு, ஞானம், பதவி, புகழ், பிறருக்கு உதவுவது போன்ற குறிக்கோளை எட்டிப் பிடிக்க முடியுமா ? இவ்வளவு ஞானம் போதும், இவ்வளவு செல்வம் போதும், இவ்வளவு புகழ் தான் கணக்கு என்று ஏதாவது இருக்கிறதா ? எப்போது நமது குறிக்கோளை அடைந்து விட்டோம் என்று அறிந்து கொள்வது ? அப்படி ஒரு எல்லைக் கோடே இல்லை. முடிவில்லாத ஒன்றை துரத்துவதில் அர்த்தம் இருக்கிறதா ? நாய் தன் வாலை பிடிக்க முயல்வது போல.
பின், என்னதான் வாழ்க்கைக்கு அர்த்தம் ? எது தான் குறிக்கோள் ?
சிந்திப்போம்
http://yogasutrasimplified.blogspot.in/2017/12/218-1.html
No comments:
Post a Comment