யோக சூத்திரம் - 2.10 - காரணத்தை நோக்கி பயணி
ते प्रतिप्रसवहेयाः सूक्ष्माः ॥१०॥
te pratiprasava-heyāḥ sūkṣmāḥ ॥10॥
This burden (klesha) should be nipped in the bud. || 10||
te = அது
prati = மறுபடியும், மூலம், ஆதி
prasava = பிரசவம்
heya = மாற்ற, மறுக்க ,
sūkṣmāḥ = சூக்ஷும, நுண்ணிய
அதை மாற்ற மூலத்தை நோக்கி போ !
எதாவது புரிகிறதா ?
எதை மாற்ற ? எது மூலம் ? ஒண்ணும் புரியவில்லை அல்லவா ?
மன கிலேசத்தை மாற்ற மூலத்தை நோக்கி போ என்கிறார்.
மன கிலேசம் என்பது அவித்தை, அஸ்மிதா, ரகா , பயம் இவற்றால் உண்டாகிறது என்று பார்த்தோம்.
சரி, இவை எல்லாம் இருக்கிறது என்று புரிகிறது. பயம் இருக்கிறது. ஆசை இருக்கிறது. அதெல்லாம் சரி. இவற்றை எப்படி போக்குவது ?
காய்ச்சல் இருக்கிறது என்று தெரிகிறது. தெரிந்தால் மட்டும் போதாதே அதை எப்படி குணப்படுத்துவது என்றும் தெரிய வேண்டுமே ?
சொல்லித் தருகிறார் பதஞ்சலி.
மூலத்தை நோக்கி சென்றால் இவற்றை மாற்ற முடியும் என்கிறார்.
எது மூலம் ?
நமது ஒவ்வொரு குணாதிசயத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அந்த மூல காரணத்தை கண்டு பிடிக்க வேண்டும்.
பயம் - அது எந்த பயமாக இருந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும். மரண பயம், எதிர் காலம் பற்றிய பயம், மூப்பு பற்றிய பயம், தனிமை பயம், இப்படி எந்த பயம் என்றாலும், அதற்கு சிறு வயதில் நடந்த ஏதோ ஒன்று காரணமாக இருக்கும்.
நம்முடைய ஒவ்வொரு எண்ணத்துக்கு பின்னாலும் ஒரு சிறு வயது நிகழ்வு காரணமாக இருக்கும்.
கடவுள் நம்பிக்கை, மதம், எதிர் பாலின் மேல் ஈர்ப்பு, வெறுப்பு, படிப்பு, செல்வம், அரசியல் பிடிப்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் உங்கள் சிறு வயதில் ஏற்பட்ட ஏதோ ஒரு நிகழ்வே காரணம்.
நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்....."நான் ஒரு பெரிய புத்திசாலி , நான் செய்யும் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு முடிவும் நான் திட்டமிட்டு, அலசி ஆராய்ந்து எடுக்கும் முடிவு " என்று.
இல்லவே இல்லை.
நீங்கள் எப்படி முடிவு எடுக்கப் போகிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள் என்பதெல்லாம் உங்களின் பத்து வயதுக்கு முன்பே தீர்மானிக்கப் பட்டுவிட்டது. அந்த தீர்மானத்தில் இருந்து நீங்கள் விலகுவதே இல்லை, பெரும்பாலும்.
எத்தனை ஆயிரம் சிந்தனைகளை, சாட்சிகளை, நிரூபணங்களை தந்தாலும், உங்களின் ஆழ்மன சிந்தனையில் இருந்து நீங்கள் விடுபடுவது இல்லை. மேலோட்டமாக மாறினால் போலத் தோன்றினாலும், அடிப்படையில் நீங்கள் நீங்கள் தான். மாறுவது இல்லை.
மாறுவதா, மாறாமல் இருப்பதா என்பதல்ல கேள்வி. பதஞ்சலி க்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை.
உங்களின் இன்றைய நிலைக்குக் காரணம் உங்கள் கடந்த காலம்.
அது என்ன என்று நீங்கள் தான் தேடி கண்டு பிடிக்க வேண்டும்.
பிரசவம் என்றால் பெறுவது. உதிப்பது. பெற்று எடுப்பது.
பிரதி பிரசவ என்றால் பிரசவித்த அந்த நிலைக்கு போ என்கிறார்.
அது தான் நீங்கள் தோன்றிய அந்த முதல் நிலை. அங்கிருந்து உங்கள் எண்ணங்கள் வலுப் பெற தொடங்குகின்றன.
வாழ்க்கையில் குழப்பமா, பயமா, சபலமா, வெறுப்பா, நடுக்கமா, சூன்யமா ...நீங்கள் எதையும் மாற்ற முடியும். அதற்கான காரணத்தை தேடி கண்டு பிடித்தால்.
சிலருக்கு காரணம் இல்லாமல் முரட்டு பிடிவாதம் இருக்கும், சிலருக்கு அளவுக்கு அதிகமா சாப்பிடத் தோன்றும், தூங்குவது, மது அருந்துவது, ஊர் சுற்றுவது, படிப்பது என்று நல்லது மற்றும் கெட்டது அனைத்துக்கும் உங்கள் பிள்ளை பருவமே காரணம்.
உங்கள் உடல் நிலைக்குக் கூட காரணம் உங்கள் சிறு பிரயாம் தான்.
சிலருக்கு படபடப்பு இருக்கும், இரத்த கொதிப்பு, தூக்கம் இன்மை, என்று பல வித வியாதிகளுக்கும் காரணம் சிறு வயதில் நடந்த நிகழ்வுகள்.
சிலரால் தங்கள் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தத் தெரியாது. அன்பை, காதலைக் கூட சொல்லத் தெரியாது. மனதில் இருக்கும். அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் ஒன்று கிடக்க ஒன்று சொல்லி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவார்கள்.
என்னை ஏன் யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று வருந்துவார்கள்.
இதன் மூல வேர் பிள்ளை பிரயாத்தில் இருக்கிறது.
அதை அறிந்து கொண்டால், இப்போதுள்ள குறையை மாற்ற முடியும்.
காரணத்தை கண்டு பிடித்து விட்டால், காரியம் சரியாய் விடும்.
இதைத்தான் உளவியல் அறிஞர்கள் ஹிப்னாடிசம், regression to the past என்று ரொம்ப மெனக்கெடுகிறார்.
பதஞ்சலி 5000 ஆண்டுகளுக்கு முன்பே இவற்றை பற்றி தீவிரமாக சிந்தித்து இருக்கிறார்.
ஆசை தான், அனைத்தையும் கண்டு பிடித்து நம்மை ஒரு புதிய மனிதனாய் உருவாக்க, தேவை இல்லாத பயம் மற்றும் கவலைகளில் இருந்து விடு பட்டு வாழ்வில் நிம்மதியாக , இன்பமாக இருக்க ஆசைதான்.
நம்மை நாமே ஆராய முடியுமா ? அது பற்றி பதஞ்சலி ஏதாவது சொல்லி இருக்கிறாரா ?
http://yogasutrasimplified.blogspot.in/2017/12/210.html
No comments:
Post a Comment