Wednesday, December 6, 2017

யோக சூத்திரம் - 2.12 - கர்மா

யோக சூத்திரம் - 2.12 - கர்மா 



क्लेशमूलः कर्माशयो दृष्टादृष्टजन्मवेदनीयः ॥१२॥

kleśa-mūlaḥ karma-aśayo dr̥ṣṭa-adr̥ṣṭa-janma-vedanīyaḥ ॥12॥


kleśa = கிலேசம், மன குழப்பங்கள், தடைகள்

mūlaḥ = மூலம், ஆதி

karma = கர்மா

aśayo = சாயா, நிழல், தொடர்ச்சி, பழக்கம்

dr̥ṣṭa = கண்ணுக்குத் தெரிவது

adr̥ṣṭa = கண்ணுக்குத் தெரியாதது

janma = வாழ்க்கையில்

vedanīyaḥ = அனுபவம், பட்டறிவு

நமது பழக்க வழக்கங்கள், மன கிலேசத்தில் இருந்து வருகின்றன. அதிலிருந்து நமது வினை மற்றும் அதன் பலன்கள் தொடர்கின்றன. அந்த மன கிலேசங்கள் சில சமயம் வெளிப்படையாகத் தெரியும். சில சமயம் தெரிவது இல்லை.


கர்மா என்றால் ஏதோ முன் ஜென்மத்தில் செய்தது, இந்த ஜென்மத்தில் நமக்கு வருகிறது என்று கொள்ள வேண்டியதில்லை. முன் ஜென்மம், இந்த ஜென்மம், மறு பிறவி என்பதெல்லாம் நம்பிக்கையின் பால் பிறப்பது. அவற்றை நிரூபணம் பண்ண முடியாது. வேண்டுமானால் நம்பிக் கொள்ளலாம். இந்து சமயம் தவிர மற்ற சமயங்கள் மறு பிறப்பு என்பதை பற்று பேசுவது இல்லை. எனவே அது எல்லா மக்களும் பின் பற்றக் கூடிய ஒன்று அல்ல. அது உலகளாவிய உண்மை என்று சொல்ல முடியாது. இந்த உலகில், ஒரு சிறு பகுதியினர் மறு பிறப்பு என்று நம்புகிறார்கள். அது உண்மையாக  இருக்க வேண்டும் என்று சட்டம் இல்லை.

மேலும், நிரூபணம் பண்ண முடியாத எதையும் பதஞ்சலி சொல்லுவது இல்லை. ஆன்மீக உலகத்தில் பதஞ்சலி வேறு பட்டவர். அனைத்து மதங்களும் எதையாவது நம்பச் சொல்லும். கடவுள், சொர்கம், நரகம், கர்மா, மறு பிறப்பு, நியாயத் தீர்ப்பு என்று சோதித்து அறிய முடியாத ஒன்றை கண்ணை மூடிக் கொண்டு நம்பச் சொல்லும்.


பதஞ்சலி அப்படி அல்ல. அவர் சொல்வது ஒவ்வொன்றையும் நீங்கள் சோதித்து அறிந்து கொள்ளலாம். ஒரு விஞ்ஞான  கோட்பாடு மாதிரி. புவி ஈர்ப்பு விசையை அறிந்து கொள்ள நியூட்டன் மேல் நம்பிக்கை தேவை இல்லை. நீங்களே பரிசோதனை செய்து , விடை சரியாக வந்தால் ஏற்றுக் கொள்ளலாம். சரி இல்லை என்றால் விட்டுத் தள்ளி விடலாம். எந்த நம்பிக்கையும் தேவை இல்லை.

அதுபோலத்தான் பதஞ்சலியும்.


அவர் கர்மா என்று சொல்லுவது, நீங்கள் முன்பு கொண்ட கிலேசம்.

அது என்ன முன்பு கொண்ட கிலேசம் ?

உங்களின் ஒவ்வொரு செயலும் எண்ணமும் முன்பு எப்போதோ நீங்கள் உங்களை பழக்கப் படுத்திக் கொண்டதன் விளைவு.

சில விஷயங்களின் மேல் உங்களுக்கு கோபம் வருகிறது, ஆசை வருகிறது, சில பிடித்திருக்கிறது, சிலவற்றை கண்டால் வெறுப்பு வருகிறது, சிலவற்றை நினைத்தால் பயம் வருகிறது....

ஏன் ?

உங்களுக்கு ஒன்றின் மேல் பயம் என்று வைத்துக் கொள்வோம்...அந்த பயம் எல்லோருக்கும் இருக்கிறதா ? இல்லையே ? பின் உங்களுக்கு மட்டும் ஏன் அந்த பயம் ?

காரணம், முன்பு எப்போதோ நீங்கள் உங்கள் மனதில் அந்த பயத்தை ஏற்றுக் கொண்டது.

100 ரூபாய் சேமிப்பு இல்லாதவன், வாழ்க்கையை நம்பிக்கையோடு ஓட்டுகிறான். 5 கோடி ரூபாய் சேமிப்பு உள்ளவன், எதிர் காலம் பற்றி பயம் கொள்ளுகிறான்.

ஏன் ?

நம்முடைய அனைத்து செயல் மற்றும் எண்ணங்களுக்கு காரணம் நமது மனதில் ஏற்கனவே உள்ள கிலேசங்கள்.

நாம் செய்யும் / நினைக்கும் ஒவ்வொன்றும் நமக்குள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த சேர்த்து வைத்த குவியல் தான் நமது பழக்கமாக மாறுகிறது.

இப்படி செய்தால் - கோபம் வரும்.

அப்படி செய்தால் - ஆசை வரும்

இதற்கு - அன்பு
அதற்கு - வெறுப்பு

என்று ஒரு பட்டியல் உங்களுக்குள்ளே இருக்கிறது. அது உங்கள் பழைய அனுபவத்தில் இருந்து வருவது.


நாம் இந்த கணத்தில் வாழ்வது இல்லை. பழைய அழுக்கு மூட்டைகளை தூக்கிக் கொண்டு அதில் இருந்து வாழ்கிறோம்.

முன்பு செய்தது, நினைத்தது இன்றைய செயல் மற்றும் பழக்கமாக இருக்கிறது.

இன்று செய்வது மற்றும் நினைப்பது நாளைய பழக்கமகாக மாறும்.

இதுதான் கர்மா என்று கூறுகிறார்.

சிலருக்கு என்ன வந்தாலும் கிடைத்தாலும் மகிழ்ச்சி இருக்காது. நிம்மதி இருக்காது.

ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் கிடைத்தாலும் , அதில் 30% வரி போய் விட்டதே  என்று கவலைப் படுவார்கள்.

காரணம் அவர்களுடைய பழைய கர்மா. மன கிலேசம்.

எதை நமது மனதில் படிய விடுகிறோம் என்று கவனமாக இருக்க வேண்டும். இன்று நாம்  படிய விடுவது, நாளை நமது எண்ணங்களை செயல்களை உருவாக்கும்.

இரண்டாவது, நமது இன்றைய செயல்களுக்கு எண்ணங்களுக்கு காரணம் என்றோ நமது மனதில் படிந்த நினைவுகள்.

அந்த விழிப்புணர்வு வந்து விட்டால், நமது எண்ணங்களும், செயல்களும் பழையதில் இருந்து விடுபட்டு, இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றார்ப் போல் அமையும்.


ப்ரதி பிரசவ என்று முந்தைய ஸ்லோகத்தில் கூறியதும் இதைத்தான்.

ஏதோ ஒரு சினிமாவில், புத்தகத்தில் வந்த கணவன்/மனைவி பாத்திரம் மனதுக்கு பிடித்துப் போய் விடுகிறது. கணவன் என்றால் அப்படி இருக்க வேண்டும். மனைவி என்றால் அப்படி இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு கற்பனை விழுந்து விடுகிறது. நிஜ வாழ்வில் கணவனோ மனைவியோ அப்படி அமைவதில்லை. என்ன ஆகிறது. கற்பனை கணவனுக்கும் நிஜ கணவனுக்கும் இடையில்  .போராட்டம்.

இது இந்த ஒரு கற்பனையில் மட்டும் அல்ல. இது வெளிப்படையாக தெரியும்.

பல விஷயங்கள் வெளிப்படையாக தெரிவது இல்லை.

சில பேர் சில விஷயங்களை பற்றி பேசவே  தயங்குவார்கள்.

ஏன் ?

அவர்களுக்கு அப்படி சொல்லப்பட்டது. அவர்கள் படித்த புத்தகங்கள், எல்லாம் சேர்ந்து அவரக்ளை அப்படி உருவாக்கி விட்டது.

நாம் நமது  கடந்த காலத்தின் கைதிகளாக இருக்கிறோம்.

இறந்த காலம் என்ற சிறையில் அடைப்பட்டு கிடக்கிறோம். அப்படி சிறையில் இருக்கிறோம் என்று கூடத் தெரியாமல் இருக்கிறோம்.

நல்லாதானே இருக்கிறது. காத்து வருகிறது. வெளிச்சம் வருகிறது. சாப்பாடு வருகிறது. சுகமாகத்தான் இருக்கிறது. இதுக்கு என்ன குறை என்று சிறை நமக்கு பிடித்துப் போய் விடுகிறது.

வெளியில் உள்ளவன் வா என்று அழைத்தாலும், வருவதில்லை. இதில் என்ன குறை இருக்கிறது என்று சுதந்திரமாக வெளியே வரச் சொல்கிறாய் என்று அவனோடு வாதம் செய்கிறோம்.

தங்க விலங்கு.

இந்த விழிப்புணர்வு (awareness ) வர வேண்டும். இறந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் உள்ள தொடர்பை அறிய வேண்டும். அதில் இருந்து விடுபட வேண்டும்.

கர்ம வினையில் இருந்து விடுபடுவது என்பது  அதுதான்.

கோடிக்கணக்கான வருடங்களின் சுமையை தூக்கிக் கொண்டு அலைகிறோம் .

அதை இறக்கி வைத்து விட்டால். சுகம். சொர்கம். விடுதலை. முக்தி. வீடு பேறு.

சிந்தியுங்கள். நீங்கள் இன்றிருப்பது எப்படி என்று. அது எங்கிருந்து வருகிறது என்று.

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/212.html

No comments:

Post a Comment