யோக சூத்திரம் - 2.9 - பயம்
svarasvāhi viduṣo-'pi samārūḍho-'bhiniveśaḥ ॥9॥
sva = சுயம், தானே
rasa = ரச = இயற்கை, தன்மை
vahi = வாழ்கை ஓட்டத்தில்
viduṣo = குரு, படித்து அறிந்தவர்கள்
api = மேலும்
sama = முழுவதும் , இணையாக
rudhah = மேலோங்கி
abhiniveśaḥ = பயம்
கற்றறிந்த ஞானிகளிடம் கூட வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருவது பயம்.
அவித்தை, அஸ்மிதா, ரகா , துவேஷ இவற்றை பார்த்தோம். இவை எல்லாம் மன கிலேசத்தை உண்டாக்குபவை.
அடுத்தது பயம்.
பயம் என்பது வாழ் நாள் எல்லாம் நம்மை துரத்திக் கொண்டே இருக்கிறது.
நாம் வாழ்க்கையைப் பற்றிக் கொண்டு இருக்கும் போது பயம் நம்மை ஒவ்வொரு கணமும் செலுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் மற்ற உணர்ச்சிகளை அறிந்து கொண்ட அளவுக்கு பயத்தை அறிந்து கொள்வதில்லை ஏன் என்றால், பயம்.
பயம் எப்படி வருகிறது. அதன் விளைவுகள் என்ன என்று பார்த்தால் நமக்கே பிரமிப்பாய் இருக்கும்.
எதிர் காலத்தைப் பற்றிய பயம், மரணம் பற்றிய பயம், ஆசைப் பட்டது கிடைக்காதோ என்ற பயம், கிடைத்தது கை விட்டு போய் விடுமோ என்ற பயம் என்று பயம் ஒவ்வொரு நொடியும் நம் வாழ்வில் பின்னி பிணைந்து கிடக்கிறது.
பயத்தில் இருந்து தப்பிக்க நாம் நம்பிக்கையை கை கொள்கிறோம்.
இவற்றை சில உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.
கணவன் முழுவதும் மனைவியை சார்ந்து இருக்கிறான். அவள் வீட்டு நிர்வாகம் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறாள். அனைத்தையும் அவள் பொறுப்பில் விட்டு விடுகிறான். இவள் இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன் என்ற பயம் அவனுள் எழுகிறது. அந்த பயத்தினால் அவள் செய்யும் செயல்கள் அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சகித்து போகிறான். அடி நாதமாய் இருப்பது பயம். மேலோட்டமாக சொல்லுவது சகிப்புத் தன்மை, (compromise ), விட்டு கொடுத்து போவது, மனைவி மேல் காதல் / நேசம் என்று.
கணவன் தான் சம்பாதிக்கும் ஒரே நபர். அவன் இல்லாவிட்டால் வீட்டின் பொருளாதாரம் குலைந்து விடும். எனவே, அவன் என்ன செய்தாலும், சொன்னாலும் மனைவி பொறுத்து சகித்துப் போகிறாள். அடி நாதம், பயம். அதற்கு வைத்திருக்கும் பெயர் காதல், கற்பு, கணவன் மேல் பக்தி என்று ஏதேதோ பெயர்கள். இவன் இறந்து போனால் நமக்கு விதவை பட்டம் கிடைக்குமே, சமுதாயம் நம்மை மதிக்காதே என்ற பயம். இந்த பயத்துக்கு வேறு வேறு பெயர்கள்.
நிறைய தவறுகள் செய்கிறோம். ஐயோ, என்ன ஆகுமோ என்ற பயம். நரகம், மோசமான மறு பிறப்பு, பிள்ளைகள் தலையில் விழுந்து விடக் கூடாதே என்ற பயம். சமயங்கள் இந்த பயத்தை பயன் படுத்திக் கொள்கின்றன. பாவம் செய்து விட்டாயா ? மறு பிறப்பை பற்றி பயமா ? நரகம் பற்றி பயமா ? சொர்கம் போக மாட்டோம் என்று பயமா ? என்னிடம் வாருங்கள். இறைவனை வழி பட்டால் பாவம் போய் விடும், மன்னிப்பு கிட்டும், சொர்கம் போகலாம் என்று அந்த பயத்தை பயன் படுத்தி சாதாரண மக்களை ஆசை காட்டி பணம் பறிக்கின்றன. கோவிலுக்கு வா, உண்டியலில் காணிக்கை போடு, அந்த பூஜை செய், இந்த பூஜை செய், இதை வாங்கு , அதை வாங்கு என்று சாதாரண மக்களை வதைக்கின்றன.
மதம் ஒரு புறம் என்றால், அரசியல் இன்னொரு புறம்.
உன் மொழியை அவன் அழித்து விடுவான், உன் கலாச்சாரம் போய் விடும், படிப்பில், வேலை வாய்ப்பில் உனக்கு ஒரு முன்னுரிமை (reservation ) போய் விடும் என்று பயமுறுத்துகின்றன. பயந்தவர்கள் என்னிடம் வாருங்கள். எனக்கு வோட்டு போடுங்கள். நான் உங்களை பாதுகாக்கிறேன் என்று சாதாரண மனிதர்களை ஏமாற்றி வோட்டு வாங்குகின்றன.
நமக்கு ஒன்று மற்றவர்களிடம் இருந்து தேவை இருக்கிறது என்றால், அவர் நமக்குத் தர மாட்டாரோ என்ற பயம் வரும். பயத்தின் ஆணி வேர் ஆசை.
பயத்தில் இருந்து நம்பிக்கை (hope ) பிறக்கிறது.
பெற்றோர் மேல் பயம், ஆசிரியர்கள் மேல் பயம், வேலை பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளிடம் பயம், கடவுள் மேல் பயம், மனைவி/கணவன் மேல் பயம், சமுதாயத்தின் மேல் பயம், சட்டம், காவல்துறை, இராணுவம், மற்ற சமுதாயக் குழுக்கள், ...இப்படி வாழ் நாள் முழுவதும் பயத்தினால் நடத்தப் படுகிறது.
பயத்தில் பெரிய பயம் மரண பயம். மரண பயம் இல்லாதார் யார் ?
தேவைகள் குறைந்தால் பயம் குறையும்.
அவித்தை குறைந்தால் பயம் குறையும்.
நாம் நமது பயங்களுக்கு வேறு பெயர் வைத்திருக்கிறோம்.
காதல், பக்தி, புண்ணியம் என்று வேறு வேறு நல்ல பெயர்கள் வைத்திருக்கிறோம்.
பயம் இருக்கும் வரை மன அமைதி என்பது கானல் நீரே.
பதஞ்சலி பயம் நல்லதா கெட்டதா என்ற தர்க்கத்தில் இறங்கவில்லை. பயம் இருந்தால் மன கிலேசம் வரும். அவர் சொல்வது அவ்வளவுதான்.
சிந்திப்போம்.
http://yogasutrasimplified.blogspot.in/2017/12/29.html
No comments:
Post a Comment