யோக சூத்திரம் - 2.14 - இன்ப துன்பத்திற்கு காரணம்
ते ह्लाद परितापफलाः पुण्यापुण्यहेतुत्वात् ॥१४॥
te hlāda paritāpa-phalāḥ puṇya-apuṇya-hetutvāt ॥14॥
te = அது
hlāda = இன்பமான
paritāpa = பரிதாப, துக்ககரமான
phalāḥ = பஹ்லா , (phal என்றால் பழம்) பலன்களை
puṇya = புண்ணியம்
apuṇya = அ -புண்ணியம் , புண்ணியம் அல்லாத
hetutvāt = ஹேதுவத் , ஏதுவான, உருவாக்குகின்ற , உதவி செய்கின்ற
செயலின் தன்மையைப் பொறுத்து இன்ப துன்பங்கள் விளைகின்றன.
நாம் அன்றாடம் பார்க்கும் வாழ்க்கையில் நல்லவர்கள் துன்பப் படுகிறார்கள். கெட்டவர்கள் இன்பமாக வாழுகிறார்கள்.
எது எந்த விதத்தில் சரி ?
சட்டத்துக்கு பயந்து, நீதி, நேர்மை, ஞாயம், உழைப்பு என்று இருப்பவன் அல்லல் படுகிறான்.
பொய், புரட்டு, இலஞ்சம், கொலை, கொள்ளை செய்பவன் இன்பமாக இருக்கிறான்.
கடவுள் என்று ஒருவன் இருக்கிறானா ? இதுக்கெல்லாம் என்ன காரணம். சந்தோஷமாக இருக்க இதுதான் வழி என்றால், பின் எல்லோரும் அயோக்கியத்தனம் செய்து விட்டு போகலாமே. நாட்டில் தர்மம் என்று ஒன்று எதற்கு ?
இந்த சந்தேகம் வராத ஆளே கிடையாது.
ரொம்ப யோசித்து கடைசியில், இது போன ஜென்ம பாவ புண்ணியம் என்று தங்களை தாங்களே தேற்றிக் கொள்கிறோம்.
ஏன் ஒரு ஜென்மம் காத்திருக்க வேண்டும் ? இந்த ஜென்மத்திலேயே அதன் பலன் ஏன் கிடப்பது இல்லை ?
சரி, அப்படியே மறு ஜென்மத்தில் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்...இன்று சுகமாக இருப்பவன், போன பிறவியில் நல்லது செய்திருக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டால், இந்த பிறவியில் ஏன் அயோக்கியத்தனம் செய்து சுகமாக இருக்கிறான் ? நல்லது செய்து இன்பமாக இருக்கக் கூடாதா ?
பதஞ்சலி இதற்கு பதில் சொல்கிறார்.
இந்த கடவுள், மறு பிறவி, முன் பிறவி, கர்ம வினை என்று அனைத்தையும் புறம் தள்ளி விடுகிறார்.
அதை எல்லாம் கொண்டு வந்தால் எதையும் நிரூபணம் பண்ண முடியாது.
முன் பிறவியின் தொடர்ச்சி என்று எப்படி நிரூபணம் செய்வது ?
பதஞ்சலி ஒரு விஞ்ஞானி மாதிரி. எதை சோதித்து அறிய முடியுமோ, அது தர்க்க வாதத்துக்கு (logic ) உட்படுமோ, அதை மட்டுமே சொல்லுவார்.
பதஞ்சலி கூறுகிறார், உன் சந்தோஷமும், துக்கமும் உன் செயல்களின் விளைவு. அவ்வளவுதான்.
நீங்கள் இப்போது துன்பப் படுகிறீர்களா ? முன்பு எதையோ சரியாகச் செய்யவில்லை. அவ்வளவு தான்.
முன்பு என்றால் முற்பிறப்பு இல்லை. .இந்த பிறப்புதான்.
கணவனோ மனைவியோ , மாமியார் நாத்தனார் , சம்பந்தி சரியாக அமையவில்லையா ? அதனால் மன கஷ்டமா ?
காரணம் சம்பந்தம் பேசும் போது சரியாக வேலை செய்யவில்லை.
வறுமை வாட்டுகிறதா ? படிப்பு, உழைப்பு, நல்ல ஆட்களின் தொடர்பை ஏற்படுத்தாமல் இருந்ததனால் வந்த விளைவு.
ஆரோக்கிய குறைவா - தவறான உணவு பழக்கம், உடற் பயிற்சி இன்மை ...
இப்படி எந்த நல்லது கெட்டதுக்கும் நாம் செய்யும் செயல்களே காரணம்.
கடவுள், முன் வினை, சுவர்க்கம் , நரகம் இதெல்லாம் தேவை இல்லை.
நல்ல வேலை செய்தால், நல்ல பலன் விளையும். அவ்வளவுதான்.
சரி, அது சரி என்றே எடுத்துக் கொள்வோம். அதனால் என்ன இப்ப ? இதைத் தெரிந்து என்ன செய்யப் போகிறோம் ?
இனிமேல் உங்கள் வாழ்க்கை இன்பமாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் இனி செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் சரியாகச் செய்ய வேண்டும்.
தெளிவான சிந்தனை. சரியான ஆராய்ச்சி. தேவையான உழைப்பு.
ஏனோ தானோ என்று காரியம் செய்தால், பின்னால் அது மன கிலேசத்தில் கொண்டு விடும்.
எதுக்கு தேவை இல்லாமல் முன் பிறவி, முன் வினை, கடவுள் , கத்திரிக்காய் என்று போட்டு குழப்ப வேண்டும்.
என்ன சரிதானே ?
http://yogasutrasimplified.blogspot.in/2017/12/214.html
No comments:
Post a Comment