Friday, December 29, 2017

யோக சூத்திரம் - 2.17 - துன்பத்தின் காரணம் , தொடர்பு

யோக சூத்திரம் - 2.17 - துன்பத்தின் காரணம் , தொடர்பு


द्रष्टृदृश्ययोः संयोगो हेयहेतुः ॥१७॥

draṣṭr̥-dr̥śyayoḥ saṁyogo heyahetuḥ ॥17॥


draṣṭr̥ = பார்ப்பவன்

dr̥śyaḥ = பார்க்கப் படுவது

saṁyoga = தொடர்பு, ஐக்கியம்,

heya = தவிர்க்கப் பட வேண்டியது

hetuḥ = காரணம்

அனுபவிப்பவனும், அனுபவிக்கப் படுவதும் இரண்டுக்கும் உள்ள தொடர்பு தவிர்க்கப் பட கூடியது. துன்பங்களுக்கு அதுவும் காரணம்.

துன்பங்களை, கஷ்டங்களை எப்படி தவிர்ப்பது என்று ஆரம்பித்தவுடன், "ஆஹா, இதோ நமது எல்லா துன்பங்களுக்கும் ஒரு விடை கிடைத்து விட்டது " என்று எண்ணக் கூடாது.

துன்பங்கள் பலவகை. உடல் துன்பம், உள்ளைத் துன்பம், பணத்தினால் வரும் துன்பம், சட்டச் சிக்கல், உறவுகளால் வரும் துன்பம், என்று பலப் பல துன்பங்கள் உள்ளன. அனைத்துக்கும் ஒரே ஒரு பதில் இருக்க முடியாது.


துன்பங்களுக்கு உள்ள காரணங்களை தொகுத்து, இந்த மாதிரி துன்பங்களுக்கு, இது வழி என்று காண்பிக்கிறார். நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும்  நமது துன்பம் எப்படி பட்ட துன்பம் என்று. கண்டு கொண்ட பின், அதை தீர்க்க   யோக சாத்திரம் என்ன சொல்கிறது என்று அறிந்து அதன் படி செயல் பட வேண்டும்.


நமது உழைப்பும், கொஞ்சம் அறிவும் வேண்டும். முழுச் சோம்பேறியாக இருந்து கொண்டு  எனது துன்பங்களுக்கு யோக சாத்திரம் சரியான தீர்வை சொல்லவில்லை , என்ன பெரிய யோக சாத்திரம் என்று அலுத்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை.

இது யோக சாத்திரத்துக்கு மட்டும் அல்ல. எதைப் படித்தாலும் , இது பொருந்தும். கீதை, இராமாயணம், குறள் என்று எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். 1330 குறளையும் படித்து விட்டேன். என் துன்பம் குறைந்து பாடில்லை என்றால் எப்படி குறையும் ? சுந்தர காண்டம் படித்தால் துன்பம் குறையும் என்று சொல்வார்கள்.  படித்தேன் , ஒன்றும் குறையவில்லை என்று சொல்பவர்களை என்ன சொல்வது. படித்தால் மட்டும் போதாது, அதில் என்ன சொல்லி இருக்கிறது என்று அறிந்து செயல் படவேண்டும்.

சில பேர் படித்துக் கொண்டே இருப்பார்கள். செயல் இருக்காது. கேட்டால், இது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது என்று தள்ளி விடுவார்கள்.

சரி இப்போது சூத்திரத்துக்கு வருவோம்.

நமக்கு வரும் துன்பங்களுக்கு பெரிய காரணம் நாம் எதை அனுபவிக்கிறோமோ, அதை நாமாகவே நாம் பாவித்துக் கொள்வதால் வரும் துன்பம்.

அது என்ன அனுபவிப்பது, பாவிப்பது ?

சொல்கிறேன்.

நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ?

இந்தியன், இந்து/கிறித்துவன் /முஸ்லீம், தென் இந்தியன்/ வட இந்தியன்,  செட்டியார்/முதலியார்/பெந்த கோஸ்தே என்று ஏதாவது சொல்லுவோம் அல்லவா ?


நீங்கள் இந்தியான ?

நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள். அவ்வளவு தான். இந்தியாவின் நிலம், நீர், காற்று, அது தரும் வசதிகளை அனுபவிக்கிறீர்கள். இந்த அனுபவிக்கப் படும் பொருள் சிறிது சிறிதாக உங்களோடு கலந்து விடுகிறது. "நான் இந்தியன்" என்று ஆகி விடுகிறது. வெளியில் இருக்கும் இந்தியாவோடு நீங்கள் ஒன்றாக ஆகி விடுகிறீர்கள்.

நீங்கள் இந்துவா ?

இந்து மத கோட்பாடுகளை கடை பிடிக்கிறீர்கள். சாலை விதிகளை கடை பிடிப்பது போல. வருமான வரி விதிகளை கடை பிடிப்பது போல. சாலை விதிகளை கடை பிடிப்பதால் யாராவது "நான் ஒரு சாலை" என்று சொல்லக் கேட்டு இருக்கிறீர்களா ? அப்படியே சொன்னாலும் நீங்கள் என்ன அப்படி சொல்பவரை பற்றி என்ன நினைப்பீர்கள் ?

ஆனால், ஒரு மத கோட்பாடுகளை கடை பிடிப்பவர்கள் அந்த மதமாகாவே மாறி விடுகிறார். நான் இந்து, முஸ்லீம், கிறித்துவன்  என்று ஆகி விடுகிறார்.

சாலை விதிகள் அடங்கிய புத்தகத்தை ஒருவர் எரித்தால் உங்களுக்கு கோபம் வராது. ஆனால், உங்கள் முன்னால் ஒருவர் கீதையையோ, குரானையோ, பைபிளையோ எரித்தால் உங்களுக்கு இரத்தம் கொதிக்கிறது.

ஏன் ? எதை நீங்கள் அனுபவிக்கிறீர்களோ, அதையே நீங்களாக நீங்கள் கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

சரி. அப்படி நினைத்துக் கொண்டால் என்ன கெட்டு பொய் விட்டது ? அதனால் என்ன துன்பம் வந்து விடும் ?

நான் ஒரு இந்துவாகவோ, இந்தியனாகவோ இருப்பதால் என்ன சிக்கல் ?

நீங்கள் இந்தியன் என்றால், பாக்கிஸ்தான் காரன் மேல் கோபம் வருகிறது. அவனோடு சண்டை போட இராணுவத்தை வளர்கிறீர்கள்.

நீங்கள் இந்து என்றால், முஸ்லீம் மேல் வெறுப்பு வருகிறது. உங்களுக்கு வரமால் இருக்கலாம். ஒரு முஸ்லிமுக்கு உங்கள் மேல் வெறுப்பு வரலாம் அல்லவா , நீங்கள் இந்துவாக இருப்பதால் ?

இப்படி எதையெல்லாம் நீங்கள் உங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறீர்களோ, அது அல்லாத மற்றவற்றில் இருந்து நீங்கள் அந்நியப் பட்டு போகிறீர்கள். அவற்றோடு முரண் படுகிறீர்கள். அவற்றோடு சண்டை போட தயாராக இருக்கிறீர்கள்.

இது ஒரு நிலை.

அடுத்தது, நீங்கள் செய்யும் வேலை. நான் ஒரு டாக்டர், என்ஜினீயர் என்று வேலையோடு நீங்கள் உங்களை ஐக்கிய படுத்திக் கொள்கிறீர்கள்.

இதையும் அடுத்த நிலை, பொருள்களோடு உங்களை தொடர்பு கொடுத்திக் கொண்டு துன்பப் படுவது.

உதாரணமாக, பேனா என்பது எழுதுவதற்கு ஒரு கருவி. அவ்வளவு தான். அது தொலைந்து போனால், இன்னொன்று வாங்கிக் கொள்ளலாம். அதை விட்டு விட்டு  "நான் ஆசை ஆசையாக வைத்திருந்த பேனா தொலைந்து போய் விட்டது " என்று வருந்துபவர்களை காணலாம்.

பேனா என்பது ஒரு உதாரணம் தான்.

நாய் குட்டி, செருப்பு, செல் போன், வீடு, நிலம், என்று உங்கள் பிடிமானம் இதன் மீதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அடுத்த படி,

உறவுகள். பிள்ளை, கணவன், மனைவி, என்று. அவர்களோடு உங்களை நீங்கள் ஐக்கியப் படுத்திக் கே கொள்வதால் எவ்வளவு துயரம் ?

சரி, அதுக்காக எல்லாரையும் விட்டு விட்டு சாமியாராகப் போக முடியுமா ?

வேண்டாம்,  உறவுகளை இராசியுங்கள். அனுபவியுங்கள். ஆனால், அவைதான் நான், அவை இல்லாமல் நான் இல்லை, அவர்கள் இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை என்று அவற்றை உங்களுக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு வருந்தாதீர்கள்.

சற்று சிரமம் தான்.


முடியாவிட்டால் ஒன்று பண்ணுங்கள். உறவுகள் பிரியும் போது வரும் துன்பத்திற்கு காரணம் உறவினர் அல்ல, நீங்கள் அல்ல, நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட மாய சங்கிலி என்று அறிந்து கொள்ளுங்கள் போதும். துன்பம் குறையும்.

அடுத்தது, இவை எல்லாவற்றையும் விட நுண்ணியமானது, இந்த உடல். உங்கள் உடலை நீங்களாகவே நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் இந்த உடலா ? இந்த உடல் தான் நீங்கள் என்றால், ஐந்து வயதில் இருந்த உடலும், இப்போது உள்ள உடலும் ஒன்றா ?

அதை விடுங்கள்.


நீங்கள் உங்கள் உடல் சம்பந்தமாக பேசும் பேச்சுகளை பாருங்கள். நீங்களே ஒத்துக் கொள்வீர்கள், நீங்கள் என்பது இந்த உடல் இல்லை என்று.

உங்களுக்கு தலை வலி என்று வைத்துக் கொள்வோம். மருத்துவரிடம் போகிறீர்கள்.

என்ன சொல்வீர்கள் ?

டாக்டர் எனக்கு தலை வலிக்கிறது என்றுதானே சொல்வீர்கள் ?

எனக்கு தலை வலிக்கிறது என்றால் அதில் உள்ள எனக்கு என்பது யார் ?

என் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு நாள் விடுப்பு வேண்டும் என்று   கேட்கிறோம். என் உடல் என்றால், நான் வேறு , என் உடல் வேறு என்று தெரிகிறது அல்லவா ? என் money purse என்றால், நான் வேறு, என் money purse  வேறு என்று தெரிகிறது அல்லவா ?

என் தலை வலிக்கிறது, என் உடல் , என் பேனா, என் கணவன், என் மனைவி, என் வீடு என்று சொல்லும் போது நான் வேறு என் பேனா வேறு, என் கணவன் வேறு, என் மனைவி வேறு என்று தெரிகிறது அல்லவா ?

அதே போல், நீங்கள் வேறு , உங்கள் உடல் என்பது வேறு.

ஆனால், நாம் , நம் உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது மட்டும் அல்ல, மற்றவர்களும் அவர்கள் உடல் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அனுபவிப்பவது நீங்கள். அனுபவிக்கப் படுவது உடல். இந்த உடல் மூலம் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். ஆனால், இந்த உடல் தான் நான் என்று நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள்.

இந்த அனுபவிப்பவன், அனுபவிக்கப் படுவது இரண்டுக்கும் உள்ள தொடர்பு தான் துன்பங்களுக்கு மூல காரணம்.

புரிகிறது தானே ?


http://yogasutrasimplified.blogspot.in/2017/12/217.html



No comments:

Post a Comment