Monday, September 18, 2017

யோக சூத்திரம் - 1.38 - மன அமைதி பெற - தூக்கத்தில் வரும் அறிவு

யோக சூத்திரம் - 1.38 - மன அமைதி பெற - தூக்கத்தில் வரும் அறிவு 


स्वप्ननिद्रा ज्ञानाअलम्बनम् वा ॥३८॥

svapna-nidrā jñāna-ālambanam vā ॥38॥


svapna = கனவில்

nidrā = தூக்கத்தில்

jñāna =  ஞானம்

ālambanam = வரும், கிடைக்கும்

vā  = அது

விழித்திருக்கும் போதே ஒண்ணும் புரிவதில்லை. இதில் , தூக்கத்தில், கனவில் வரும் ஞானத்தில் இருந்து என்ன புரியப் போகிறது ?

விழித்திருக்கும் போது நாம் எப்படி அறிவை பெறுகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

யாராவது ஏதாவது சொன்னால், நாம் என்ன செய்கிறோம் ? நமக்கு அந்த விஷயத்தைப் பற்றி நமக்கு ஏதோ ஒரு அபிப்பிராயம் இருக்கும். அந்த புது விஷயம் நமது பழைய அபிப்பிராயத்தோடு ஒத்துப் போனால், "சரிதான்...இது தான் எனக்கு ஏற்கனவே தெரியுமே " என்று அலட்சியமாக விட்டு விடுகிறோம்.

ஒருவேளை புதிதாக சொல்லப்படும் செய்தி நமது பழைய சிந்தனையோடு ஒத்துப் போகவில்லை என்றால்  என்ன செய்வோம் ?

"இதெல்லாம் கதைக்கு ஆகாது"

"நடை முறைக்கு ஒத்து வராது"

"வாழ்க்கையில் கடை பிடிப்பது கடினம் "

"கேக்க நல்லா இருக்கு, ஆனால் இதெல்லாம் செய்ய முடியாது "

என்று தள்ளி விடுகிறோம்.

புதிதாக நாம் எதையும் ஏற்றுக் கொல்வதில்லை.

நீங்கள் பெரிய பக்தராக இருந்தால், யாரவது வந்து கடவுள் இல்லை என்று சொன்னால்,  நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். அவர் எவ்வளவு சொன்னாலும், ஒரு துளி கூட உங்கள் அறிவில் ஏறாது.

நாம் எதையுமே திறந்த மனத்தோடு,  அணுகுவது இல்லை. எல்லாவற்றிக்கும் ஒரு திரை  போட்டிருக்கிறோம். நமக்கு தெரிந்தது, நாம் நம்புவது மட்டும் தான்  உண்மை. மற்றவை எல்லாம் பொய் என்று நினைக்கிறோம்.

நம் நம்பிக்கைக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் நம்மிடம் ஒரு எதிர்ப்பு உண்டாகிறது. சொல்பவர்களிடம் சண்டை போடத் தயாராகிறோம். சில பேர் வன்முறையில் இறங்குகிறார்கள். சிலர் வன்மத்தை மனதிலேயே வைத்துக் கொள்கிறார்கள்.

"அவன் கிடக்கிறான் மடையன். அவனுக்கு என்ன தெரியும்" என்று மனதுக்குள் திட்டுகிறார்கள்.

இந்த எதிர் மறை உணர்வினால் இரண்டு விஷயங்கள் நிகழ்கின்றன.

ஒன்று, நாம் புதிதாக எதையுமே கற்றுக் கொள்வதில்லை. எனவே, நம் அறிவு வளர்வதில்லை. நாம் அறிந்தது, தெரிந்தது, நம்பியதை மட்டுமே மீண்டும் மீண்டும் படிக்கிறோம். ஏற்றுக் கொள்கிறோம். மற்றவற்றை மறுத்து விடுகிறோம். அறிவு வளர்ச்சி என்பது நின்று போகிறது.

இரண்டாவது, நம் கருத்துகளுக்கு எதிர் கருத்தை கொண்டவர்களை வெறுக்கிறோம், அவர்களோடு பிணங்குகிறோம். அவரகள்  மேல் ஒரு கோபமும் எரிச்சலும் கொள்கிறோம்.

இவை நம் மன அமைதியை குலைகின்றன.

எதையும் திறந்த மனத்தோடு ஏற்றுக் கொள்வதன் மூலம், புது புது விஷயங்கள் நமக்கு கிடைக்கின்றன.

அவை நம்மை அறியாமலேயே நமக்குள் இறங்குகின்றன.

அவை, நம்மை அறியாமலேயே நம்முள் ஒரு தாக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அதைத்தான், தூக்கத்தில் கனவில் வரும் ஞானம் என்கிறார்.

நம்மை அறியாமலேயே, நம்முள் தோன்றும் ஞானம்.

அது கனவு மாதிரிதானே.

புது புது  ஞானங்களை உங்களுக்குள்  வர விடுங்கள். பழையனவற்றை தூக்கி  எறியுங்கள்.  எந்த கருத்தையும், ஒரு எதிர் வினையோடு, ஒரு எதிர்போடு சந்திக்காதீர்கள். ஒரு சின்ன குழந்தையின் ஆர்வத்தோடு அணுகுங்கள்.

அது உங்கள் மனதை சுத்தப் படுத்தும்.

உங்கள் அறிவின் ஆழத்தை, அகலத்தை அதிகப் படுத்தும்.

அந்த ஞானம், உங்கள் மன அமைதிக்கு வழி வகுக்கும்.

புது வெள்ளம் பெருகி வரட்டும். வழி விடுங்கள். பாதையை மறைக்காதீர்கள் .

http://yogasutrasimplified.blogspot.in/2017/09/138.html




No comments:

Post a Comment