Sunday, September 10, 2017

யோக சூத்திரம் - 1.34 - மன அமைதி மூச்சு பயிற்சியின் மூலம்

யோக சூத்திரம் - 1.34 - மன அமைதி மூச்சு பயிற்சியின் மூலம்



प्रच्छर्दनविधारणाअभ्यां वा प्राणस्य ॥३४॥

pracchardana-vidhāraṇa-ābhyāṁ vā prāṇasya ॥34॥



pracchardana = வெளியே விடுவதன் மூலம்
vidhāraṇa = நிறுத்தி
ābhya = மேலும்
vā = அல்லது
prāṇasya = மூச்சை

மூச்சை வெளியேற்றி, நிறுத்தி பின் உள் இழுத்து பின் நிறுத்தி , இப்படி செய்வதன் மூலம் அலையும் மனதை நிலை கொள்ளச் செய்ய முடியும்.

எழுதும் போதும் , பேசும் பொழுதும் சில விஷயங்களை பட்டியல் போட வேண்டும் என்றால்  எது  முக்கியமோ அதை முதலில் சொல்ல வேண்டும். முக்கியத்துவம் குறைந்தவற்றை கடைசியில் சொல்ல வேண்டும். 

பெரியவர்களை முதலில் சொல்லி, மற்றவர்களை பின்னால் சொல்ல வேண்டும்.

இராம இலக்குவன் என்று சொல்ல வேண்டும். இலக்குவன் இராமன் என்று சொல்லக் கூடாது. இலக்கணப்படி அது சரியாக இருக்கலாம். ஆனால் அது முறையன்று.

திருமண பத்திரிக்கை அடிக்கும்போது முதலில் தாத்தாவின் பெயரைச் சொல்லி, அப்பாவின் பெயரைச் சொல்லி, பின்னால் மணமகன் பெயரைச் சொல்ல வேண்டும்.

அதே போல காரியங்களை சொல்ல வேண்டும் என்றால், எதை முதலில் செய்ய வேண்டுமோ  அதை முதலில் சொல்ல வேண்டும். கடைசியில் செய்ய வேண்டியதை  கடைசியில் சொல்ல வேண்டும்.

கடைக்குப் போய் சாமான் வாங்கி வா என்று சொல்லலாம்.

சாமான் வாங்கி கடைக்குப் போ என்று சொன்னால் நல்லாவா இருக்கிறது ?

அது போல, இங்கே பதஞ்சலி சொல்கிறார்....

மூச்சை வெளியில் விட்டு, உள்ளே இழுத்து நிறுத்துவதன் மூலம் அலையும் மனதை  அலை பாயாமல் இருக்கச் செய்ய முடியும் என்கிறார்.

முதலில் மூச்சை வெளியேற்ற வேண்டும். முடிந்தவரை வெளியேற்ற வேண்டும். நுரையீரல் காலியாக வேண்டும். மூச்சை வெளியே விட்ட பின். சிறிது நேரம்  நிறுத்துங்கள். உடனே மூச்சை உள்ளே இழுக்காதீர்கள்.

சில நொடிகள் தாண்டி, பின் மெல்லமாக உள்ளே இழுங்கள். எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு.

உள்ளே இழுத்த பின், உடனே வெளியே விடாதீர்கள். கொஞ்ச நேரம் நிறுத்துங்கள்.

பின் மீண்டும் மூச்சை வெளியேற்றுங்கள்.

இப்படி செய்வதன் மூலம் மனதை ஒருமுகப் படுத்த முடியும் .


அதுத்த முறை மனதில் சலனம் ஏற்பட்டால், கோபமோ, துக்கமோ, காதலோ, காமமோ,  எரிச்சலோ, சோகமோ, ஏற்பட்டால் இதை செய்து பாருங்கள்.

மூச்சை முழுவதுமாக வெளியேற்றி, சிறிது நேரம் நுரையீரலை காலியாக வைத்து இருந்து  பின் முழுவதும் நிரப்பி சிறிது நேரம் வைத்திருந்து பின் வெளியேற்றி....

இப்படி சில முறை செய்தால், எந்த மன அழுத்தமும் போய் விடும்.

அது எப்படி மூச்சை இழுத்து, நிறுத்தி, விட்டு, நிறுத்தினால் மன அழுத்தம் போகும் ?

நம் மனதின் சிந்தனை ஓட்டம் நமது சுவாசத்தை பொறுத்தே அமைகிறது.

ஒவ்வொரு மன நிலைக்கும் ஒரு வைத்த சுவாச நிலை இருக்கும்.

மகிழ்ச்சியாக இருக்கும் போது மூச்சு ஒரு விதமாக ஓடும்.

துக்கமாக இருந்தால் இன்னொரு விதமாக.

அதே போல், கோபம் வரும் போது மூச்சு வேக வேகமாக வரும். காமத்திலும் அப்படித்தான்.

மேலே சொன்ன மாதிரி மூச்சை வெளியேற்றி, நிறுத்தி, உள் இழுத்து நிறுத்தினால் ....அது எந்த ஒரு மன நிலையோடும் சேர்ந்த ஒன்று அல்ல. எனவே அப்படி  செய்யும் போது கோபம், துக்கம், மகிழ்ச்சி, எரிச்சல் என்று எதுவும் இருக்காது. எந்த மன நிலையில் இருந்தாலும், அது மாறி விடும்.

மன அழுத்தம் ஏற்படும் போது , மனச் சோர்வு ஏற்படும் போது இப்படி செய்து பாருங்கள்.

யோக சூத்திரங்களை நம்ப வேண்டாம். நீங்களே செய்து பார்த்து அறிந்து கொள்ளலாம்.

எளிய அற்புதமான வழி. காலணா காசு செலவழிக்க வேண்டாம்.

இருந்த இடத்திலேயே செய்து பார்க்கலாம்.

செய்து பாருங்கள்.

மேலும் சிந்திப்போம்.

No comments:

Post a Comment