Friday, September 15, 2017

யோக சூத்திரம் - 1.37 - மன அமைதி பெற - பற்றில்லாதவனை பற்றுக

யோக சூத்திரம் - 1.37 - மன அமைதி பெற - பற்றில்லாதவனை பற்றுக 


वीतराग विषयम् वा चित्तम् ॥३७॥

vītarāga viṣayam vā cittam ॥37॥

vītarāga viṣayam vā cittam ॥37॥

vīta = நிறுத்தி, முடிவு
rāga = ஆசைகள், பற்றுகள்
viṣayam = விஷயங்கள்
vā = மேலும்
cittam = சித்தம்

மன அமைதி பெற , பற்றினை துறந்தவர்களை பற்றிக் கொள்ளுங்கள்.

சூத்திரத்தின் அர்த்தம் பற்றி பிறகு பார்ப்போம்.

நாம் பல சினிமா, டிவி சீரியல், நாவல், கதைகள் எல்லாம் படிக்கிறோம். அவற்றை பார்க்கும் போதோ, படிக்கும் போதோ அவற்றில் உள்ள பாத்திரங்கள் நம்மை பாதிக்கின்றன அல்லவா.

ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவது செய்தால், நமக்கு சிரிப்பு வருகிறது.

வில்லன் நடிகர் கதாநாயகனுக்கோ, கதாநாயகிக்கோ ஏதாவது தீங்கு செய்தால் அவன் மேல் வெறுப்பு வருகிறது. கதாநாயகன் மற்றும் கதாநாயகி மேல் பரிதாபம் வருகிறது.

சிறுவர்கள், James Bond , Bruce Lee போன்ற ஆக்க்ஷன் கதாநாயகர்களை பார்த்து விட்டு  அது போல செய்ய முயல்வார்கள்.

இளைஞர்கள், இளம் பெண்கள் படங்களில் வரும் காதல் காட்சிகளைப் பார்த்து விட்டு, நமக்கும் அது போல ஒரு துணை கிடைத்தால் எப்படி இருக்கும்  என்று மனதுக்குள் கற்பனை செய்து கொண்டு அவர்களோடு கனவில்  காதல் கொள்வார்கள்.

இல்லை என்று சொல்ல முடியுமா ?

கல்லூரிகளில் சில விரிவுரையாளர்கள் (lecturers ) மிக நன்றாக பாடம் நடத்துவார்கள். அடடா, படித்தால் இப்படி படிக்க வேண்டும். என்ன ஒரு ஞானம், என்ன ஒரு தெளிவு. நாமும் அவரைப் போல படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு ஒரு உத்வேகம் (motivation ) வரும் அல்லவா ?

சரி , அதுக்கும் இந்த சூத்திரத்துக்கும் என்ன சம்பந்தம் ?

மனம் அமைதி இழப்பதற்கு காரணம் , விஷயங்களின் மேல் உள்ள பற்று. ஆசை. பொருள்கள் மேல், அனுபவங்களின் மேல் உள்ள ஆசை.

அது எல்லாருக்கும் தெரிகிறது.

ஆனால், ஆசையை விட முடிவதில்லை. துன்பம் என்றாலும், அந்த ஆசைகளை பற்றிக் கொண்டு அல்லாடுகிறோம்.

ஆசையை விட முடியுமா ? ஆசைகளை விட்டு விட்டால், வாழ்க்கை சுவையாக இருக்குமா ? ஆசையை எப்படி விடுவது ?

நாம் இதுவரை எந்த ஆசையையும் விட்டதில்லை. சொல்லப் போனால், ஆசைகளை  வளர்த்துக் கொண்டே போகிறோம். எனவே, ஆசைகளை விடுவது என்பது என்ற ஒன்றே நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

பின் இதற்கு என்ன தான் வழி. ஆசையை விடு, ஆசையை விடு என்று சொன்னால் மட்டும் போதாது. எப்படி விட வேண்டும் என்றும் சொல்ல வேண்டும் அல்லவா ?

அதற்குத்தான் பதஞ்சலி வழி சொல்கிறார்.

நாம் எதைப் பார்க்கிறோமோ, படிக்கிறோமோ, கேட்கிறோமோ அவற்றால் நாம்  பாதிக்கப்படுகிறோம். சில நாம் அறிந்து நடக்கிறது. சில நாம் அறியாமல் நடக்கிறது.

எனவே, ஆசைகளை விட்டவர்களை, துறவிகளை, ஞானிகளை , பெரியவர்களை  அடிக்கடி காணுங்கள், அவர்கள் சொல்வதை கேளுங்கள், அவர்கள் வாழ்க்கை ம் முறையைப் பாருங்கள். அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  நல்ல பழக்க வழக்கங்கள் உங்களை அறியாமலேயே உங்களுக்குள்  வந்து விடும்.

ஆசையை விட வேண்டாம்.

ஆசையை விட்டவர்களை பாருங்கள், அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக  ஆசை உங்களை விட்டு தானே போய் விடும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

பற்றை விட்டவர்களின் பற்றை பற்றிக் கொள்ளுங்கள் என்கிறார் வள்ளுவர்.

ஏன் ? அப்படி பற்றிக் கொண்டால், நாளடைவில் நமக்கும் அந்த பற்றற்ற தன்மை வந்து விடும்.

 நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
   நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே-நல்லார்
   குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ
   டிணங்கி யிருப்பதுவும் நன்று.

என்பார் ஒளவையார்.

நல்லாரை காண்பது, அவர்கள் சொல்வதை கேட்பது, அவர்களைப் பற்றி பேசுவது, அவர்களைப் போல வாழ்வது நல்லது என்கிறார்.

ஏன் ?

அப்படி இருக்கும் போது நம்மை அறியாமலேயே நல்லவை நமக்குள் வந்து குடி ஏறிவிடும் .

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்

கனவினும் நனவினும் காண்பது தானே!

கடவுளை தொழுவதை விட, அறிவுள்ளவர்களை காண்பது என்கிறார். நேரில் பார்க்க முடியாவிட்டால், கனவிலாவது காண வேண்டும் என்கிறார்.

நல்லவர்களின் சேர்க்கை, அறிஞர்களின் சேர்க்கை ஆசையை விட உதவும். அது  துன்பங்களில் இருந்து விடுபட உதவும். அது மன அமைதிக்கு வழி வகுக்கும்.

பெரியாரை துணை கோடல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

நல்லவர்களை. அறிவுள்ளவர்களை தேடித் கண்டு பிடியுங்கள்.

அவர்கள் தொடர்பு, உங்கள் வாழ்வை வசந்தமாக்கும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/09/137.html

No comments:

Post a Comment