Thursday, September 14, 2017

யோக சூத்திரம் - 1.36 - மன அமைதி பெற - உள்ளொளி

யோக சூத்திரம் - 1.36 - மன அமைதி பெற - உள்ளொளி 



विशोका वा ज्योतिष्मती ॥३६॥

viśokā vā jyotiṣmatī ॥36॥

viśokā = சோகம் இல்லாத , கவலை இல்லாமல்

vā = மேலும்

jyotiṣmatī  = ஜோதிமயமான

அது என்ன கவலை இல்லாமல் , ஜ்யோதி மயமான ?

ஒரு சமயப் பெரியவர் ஒருமுறை மிகுந்த கால் வலியால் அவதிப்பட்டார். மருத்துவரிடம் சென்று காண்பித்த போது , மருத்துவர் கூறினார் "உங்கள் காலில் சீழ் பிடித்து இரணமாகி விட்டது. இதை தீர்க்க ஒரே வழி, காலை எடுத்து விடுவதுதான். இல்லை என்றால் அது மேலும் பரவி உயிருக்கே ஆபத்தாகி விடும். காலை எடுக்க கொஞ்சம் செலவு ஆகும். ஒரு ஐம்பதாயிரம் ஆகும் " என்று கூறிவிட்டார்.

அந்த சமயப் பெரியவர் திகைத்துப் போனார். காலை எடுக்க ஐம்பதாயிரம் என்றால், காலைக் கொடுக்க எவ்வளவு வேண்டும் ? எத்தனை இலட்சம் கொடுத்தால் ஒரு கால் கிடைக்கும் ?

ஒரு கால் மட்டுமா ?

கால், கை , கண், இதயம், மூளை, நுரையீரல் என்று ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு தருவது ? எத்தனை கோடி கொடுத்தால் இந்த உடம்பில் உள்ள அனைத்தும் கிடைக்கும் என்று நினைத்துப் பார்த்தார்.

இந்த உடல் விலை மதிப்பற்றது என்று அறிந்து கொண்டார். இது நமக்கு இலவசமாக கிடைத்திருக்கிறது. ஒரு பைசா செலவு செய்யாமல் இதை நாம் பெற்றிருக்கிறோம்.  இது நமக்கு கிடைத்த பரிசு.

சரி, உடல் கூட ஒரு மாதிரி கிடைத்து விடலாம். இப்போதெல்லாம் நிறைய செயற்கை  உறுப்புகள் வருகின்றன. செயற்கை கால், செயற்கை கை என்றெல்லாம் வருகிறது.

உடல் கிடைத்தாலும், உயிர் கிடைக்குமா ?


சரி, உயிரும் கிடைத்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். எத்தனையோ பேர் கோமாவில் கிடக்கிறார்கள். உடல் இருக்கிறது.  உயிர் இருக்கிறது. இருந்தும் என்ன பயன்.

சரி, உடல் இருக்கிறது, உயிர் இருக்கிறது. உடலும் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறது.  நடக்க, பேச, சாப்பிட, என்று வழக்கமான அனைத்து செயல்களும் செய்ய முடிகிறது. ஆனால், Alzheimer போன்ற ஞாபக மறதி இருக்கிறது. பெற்றோர் யார், பிள்ளை யார், மனைவி யார், கணவன் யார், நம் வீடு எது, என்று எதுவும் ஞாபகம் இருப்பதில்லை. கையில் உணவை எடுத்தால் அதை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. யாரவது ஊட்டி விட வேண்டும்.

சரி, இவை எல்லாம் சரியாக இருந்தாலும், மனம் சரியாக இருக்க வேண்டும் அல்லவா ? உலகை, உறவுகளை அறிந்து, அவற்றை அனுபவிக்க மனம் சரியாக இல்லை என்றால்  என்ன செய்வது. நாளும் ஒரு வக்கிரம், கோபம், காமம்,  பொறாமை என்று குப்பை மூடிக் கிடந்தால் வாழ்க்கை சுவைக்குமா ?

யோசித்துப் பாருங்கள்.

நம்மிடம் எவ்வளவு பெரிய விலை மதிக்க முடியாத சொத்து இருக்கிறது.

நமக்குள் ஒளி விடும் அந்த சக்தி , நம்மை நாளும் வழி நடத்துகிறது.

நல்லது கெட்டது எது என்று சொல்கிறது.

ஆபத்தில் இருந்து நம்மை விலகி நடக்க வைக்கிறது.

இன்பங்களை இரசிக்க வைக்கிறது.

துன்பத்தில் இருந்து விடுபட சிந்திக்க வைக்கிறது.

அந்த சக்திதான் "ஒளிமயமான" ஒன்று என்று பதஞ்சலி கூறுகிறார்.

"உள்ளொளி பெருக்கி " என்பார் மணிவாசகர்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் 
சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி 
உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த 
செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் 
எங்கெழுந்தருளுவது இனியே!

அதன் ஆற்றல் அபரிமிதமானது. அதற்கு முன்னால் இந்த பணம், காசு, நிலம், நீச்சு என்பதெல்லாம் ஒன்றும் இல்லை.


அந்த சக்தி நம்மிடம் இருக்கிறது என்று நாம் அறியும் போது , இந்த உலக பொருள்கள் அற்பமாகத் தெரியும்.

பல கோடிக்கு சொந்தமான ஒருவன், ஒரு பத்து ரூபாய் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷப் படுவான் ? கிடைத்தால் சந்தோஷம். கிடைக்காவிட்டால் ஒன்றும் பெரிய துக்கம் இல்லம். எவ்வளவோ இருக்கிறது. இது என்ன ஜுஜுபி என்று இருப்பான் அல்லவா ? ஆனால் அது ஒரு பிச்சைக்காரன் என்றால் , அந்த பத்து ரூபாய் அவனுக்கு ஒரு பெரிய விஷயம்.


நாம் உலகில் உள்ள பொருள்களின் பின்னால் போகிறோம். அது வேண்டும், இது வேண்டும் என்று அலைகிறோம் . காரணம், நம்மிடம் இருக்கும் செல்வத்தின் மதிப்பு தெரியாமல். அந்த பிச்சைக் காரனைப் போல அலைகிறோம் .

நீங்கள் உலகில் விலை மதிக்க முடியாத சொத்துகளின் முதலாளி. இதை நீங்கள் அறிந்தால்,இந்த உலகின் மொத்த பொருள்களும் ஒரு பெரிய விஷயம் இல்லை என்று புரிய வரும்.

அப்போது , ஆசையும், விரக்தியும் தொலையும்.

மனம் மிகுந்த மகிழ்ச்சியில், அமைதியாக இருக்கும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/09/136.html


No comments:

Post a Comment