Tuesday, September 12, 2017

யோக சூத்திரம் - 1.35 - மன அமைதி பெற - பாகம் 2

யோக சூத்திரம் - 1.35 - மன அமைதி பெற - பாகம் 2




विषयवती वा प्रवृत्तिरुत्पन्ना मनसः स्थिति निबन्धिनी ॥३५॥

viṣayavatī vā pravr̥tti-rutpannā manasaḥ sthiti nibandhinī ॥35॥


viṣaya = விஷயங்களின்
vatī = உணர்வுகளை
vāt = மேலும் 
pravrtti = அலைகளை, சலனங்களை 
utpannā = உற்பத்தி செய்யும்
manasaḥ = மனதில் , அறிந்து
sthiti = நிதானமாக
nibandhanī = தொகுத்து

விஷயங்கள் மற்றும் அவை தரும் அனுபவங்களை மனதில் நிறுத்தி நிதானமாக ஆராய்வதன் மூலம் சித்த சலனங்களை நிறுத்த முடியும் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்

அதை இங்கே காணலாம்

http://yogasutrasimplified.blogspot.in/2017/09/135.html


அதன் தொடர்ச்சியாக, மேலும் சிந்திப்போம். 

நம்மை ஒருவர் திட்டி விடுகிறார் அல்லது அவமானப் படுத்தி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். 

உடனே அவர் மேல் கோபம் வருகிறது. அவருக்கு ஏதாவது தீமை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. பதிலுக்கு திட்டுகிறோம், அல்லது கடுமையான சொற்களை கூறுகிறோம். அவர்களுக்கு ஏதாவது தீமை வர வேண்டும் என்று விரும்புகிறோம். 

இப்படி சொல்லி விட்டானே, அவனை எவ்வளவு நல்லவன் என்று நம்பினேன் , இப்படி செய்து விட்டானே என்று கிடந்து புலம்புகிறோம். 

மனதில் அலை அடிக்கிறது. 


நடந்து முடிந்த சம்பவம் நம்மை அலைக்கழிக்கிறது. 


இப்படி ஒன்று நடந்தால் பரவாயில்லை. வீட்டில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சிக்கல்கள், மாமியார், மருமகள், பிள்ளைகள், உறவுகள், நன்பர்கள், அலுவலகத்தில் உயர் அதிகாரிகள், கீழே வேலை செய்பவர்கள், உடன் இருப்பவர்கள் என்று ஆயிரம் வழிகளில் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. 

ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் இழுத்துக் கொண்டு போகின்றது. ஒன்று ஓய்ந்தால் இன்னொன்று புறப்படுகிறது. 

எப்போதும் நம்மை ஒரு மன அழுத்தத்திலேயே வைத்து இருக்கின்றன. 

இவர்களை நாம் கட்டுப் படுத்த முடியாது. அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். 

பின், இதில் இருந்து விடுபட வழி என்ன ?


இந்த அவமானங்கள், சிறுமைப் படுத்துதல் போன்றவை ஏன் நம்மை வருத்துகின்றன ?

நான் அறிவாளி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன். மற்றவன் என்னை முட்டாள் என்றால் எனக்கு கோபம் வருகிறது. என்னுடைய எண்ணங்களுக்கும் , மதிப்பீடுகளுக்கு அவனுடைய எண்ணங்களுக்கும் மதீப்பீடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி தான் இந்த கோபம் மற்றும் கவலைக்கு காரணம். 

என் மதிப்பீடு சரிதானா என்று நான் சிந்திக்க வேண்டும். ஒரு வேளை அவன் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம்.  ஒரு வேளை அது சரியாக இருந்தால் நான் என்னை முன்னேற்றிக் கொள்ள முயல வேண்டும். ஒரு வேளை அவன் சொல்வது தவறாக இருந்தால், நான் ஏன் கவலைப் படவேண்டும். தவறு செய்தவன் அவன் தானே.

இதில், யார் சரி , யார் தவறு என்பது அல்ல கேள்வி. 

நமது கவலைகளுக்கு, துன்பங்களுக்குக் காரணம் நம் எண்ணங்களே. நமது மதிப்பீடே காரணம் என்று அறிந்து கொண்டால், நமக்கு ஒரு எண்ணம் / மதிப்பீடு இருப்பதைப் போல மற்றவர்களுக்கும் இருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஆயிரம் பேர் ஆயிரம் அபிப்ராயம்  வைத்து இருந்தால் அதில் சில நம்மோடு ஒத்துப் போகும். சில ஒத்துப் போகாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

இவற்றை அறியும் போது , மற்றவர்களின் எண்ணங்கள் நம்மை பாதிக்காது. இல்லை என்றால், யார் என்ன சொன்னாலும் உடனே மேலும் கீழும் குதித்த்துக் கொண்டு இருப்போம். 

சொல்பவர்கள் சொல்லி விட்டுப் போகட்டும். நீங்கள் உங்கள் மன அமைதியை இழக்காதீர்கள். 

கேள்விப் படும் எல்லாவற்றிற்கும் நீங்கள் எதிர் வினை புரிய வேண்டாம் (reaction ). அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவும் வேண்டாம். மறுக்கவும் வேண்டாம். அது அவர்கள் எண்ணம் என்று விட்டு விட்டுப் போய் விடுங்கள். 

அவ்வளவுதான். 

மனம் அமைதி அடையும் போது , தெளிவு பிறக்கும். அந்த தெளிவில் இருந்து இன்பம் தோன்றும். 


http://yogasutrasimplified.blogspot.in/2017/09/135-2.html


No comments:

Post a Comment