Monday, January 20, 2020

யோக சூத்திரம் - 3.1 - விபூதி பாதம் - தாரணை

யோக சூத்திரம் - 3.1 - விபூதி பாதம் - தாரணை 


இது மூன்றாவது அத்யாயம்.

விபூதி என்றால் சிறப்பான என்று பொருள். சிறப்பானவற்றை பெறுவது பற்றியது இந்த அத்யாயம்.

சிறப்பானது என்றால் என்ன?

சித்திகள் என்று சொல்ல்கிறார்கள். விசேஷமான சக்தி. யோகாவின் மூலம், சில விசேட சக்திகளைப் பெறலாம்.

அடடே இது சுவாரசியமாக இருக்கிறேதே...தண்ணி மேல நடப்பது, எதிர்காலத்தை அறிவது, இறந்தவர்களை பிழைக்க வைப்பது போன்ற சித்து வேலை எல்லாம் செய்யலாமா என்று நினைக்காதீர்கள்.  அதுவும் கிடைக்கலாம். ஆனால், அவை கிடைக்கும் என்று பதஞ்சலி சொல்லவில்லை. அது என்ன விசேட சக்தி என்று இந்த அத்யாயம் முடிவில் நீங்கள் உணர்வீர்கள்.

முதல் சூத்திரம் தாரணை பற்றியது.

தாரணை என்றால், ஒன்றை மனதில் வைத்து இருப்பது. ஒன்றை மட்டும் மனதில் நிறுத்து வைப்பது. குறிப்பாக சொல்லப் போனால், மனம் முழுவதும் ஒன்றை மட்டுமே நிறைத்து வைப்பது. வேறு ஒன்று வராமல் இருப்பது.

நம் மனம் பொதுவாகவே, ஒன்றை பற்றும், சிறிது நேரத்தில் அதை விட்டு விட்டு இன்னொன்றைப் பற்றும். ஒன்றை பற்றி அதையே மனம் முழுவதும் நிறைத்து  வைப்பது. அதற்கு பெயர் தாரணை.

மனதை ஒரு முகப் படுத்துவது (concentration) என்று ஒரு விதத்தில் சொல்லலாம்.

மனதை ஒரு நிலை படுத்தாமல் ஒன்றும் செய்ய முடியாது. மனம் ஒன்ற வேண்டும். இலயிக்க வேண்டும்.

அது எப்படி முடியும்?  மனதை எப்படி நிலை நிறுத்துவது?

வீட்டில் இருந்தால் அலுவலகம் நினைவு வருகிறது. அங்கு போனால், வீட்டு ஞாபகம் வருகிறது. சாப்பிட உட்கார்ந்தால்,  போக்குவரத்து நெரிசல், நேரத்துக்கு போய் சேர முடியுமா என்ற கவலை வருகிறது.

மனம் எதையும் அனுபவிப்பது கிடையாது.

மனதை ஒரு நிலை படுத்த மனதை பழக்க வேண்டும். ஒரு நாளில் வருவது அல்ல அது.  நீண்ட பயிற்சி வேண்டும்.

எப்படி பயிற்சி செய்வது?


அது தான் சூத்திரம்.

(deshah bandhah chittasya dharana)

தேச பந்த சித்தஸ்ய தாரண

தேச = இடம், பொருள்

பந்த = பிணைப்பு, தொடர்பு

சித்தஸ்ய = மனதில்

தாரண  = அதுவே தாரண


மனம் ஒன்றில் நிலை நிற்க வேண்டும் என்றால், முதலில் நாம் ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், அதே இடத்தில் இருந்து பயிற்சி செய்ய வேண்டும். இடம் மாறிக் கொண்டே இருந்தால் மனம் நிலை கொள்ளாது.

அடுத்தது, மனதை ஏதோ ஒரு பொருளின் மேல் செலுத்த வேண்டும். அது எதுவாக  வேண்டுமானாலும் இருக்கலாம். தீபம், ஓம் என்ற எழுத்து, சாமி படம், நடிகை படம்,  கோகோ கோலா பாட்டில், ஏதோ ஒரு தலைவர் படம்....எதுவாக  வேண்டுமானாலும் இருக்கலாம்.

மூன்றாவது, மனதுக்கும், அந்த பொருளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பந்தம், பிணைப்பு அது வேண்டும். அந்த பொருளுக்கும் உங்களுக்கும்  என்ன தொடர்பு ?  தொடர்பு இல்லாவிட்டால் மனம் அதைப் பற்றாது.

Cryogenic engine படத்தை கொண்டு வந்து வைத்தால், அது என்ன என்றே தெரியாது. அப்புறம் அல்லவா அதனோடு தொடர்பு கொள்ள முடியும்.

ஒரு இலட்டு படத்தை வைத்தால், என்னால் அதனோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.  அதன் நிறம், மனம், சுவை அடடா என்று மனம் அதிலேயே இலயிக்கும் , எனக்கு.

உங்களுக்கு எது பிரியமோ, அதை வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் உங்கள் மனதை முழுவதும் செலுத்துங்கள். அது பயிற்சியின் முதல் படி.

yogasutrasimplified.blogspot.com/2020/01/31.html




1 comment: