Wednesday, January 15, 2020

யோக சூத்திரம் - 2.53 - தாரணை

யோக சூத்திரம் - 2.53 - தாரணை 


धारणासु च योग्यता मनसः ॥५३॥

dhāraṇāsu ca yogyatā manasaḥ ॥53॥

dhāraṇāsu = மனதில் கொள்ள

ca = மேலும்

yogyatā = தகுதி

manasaḥ = மனம்

இவற்றின் மூலம் மனதில் கொள்ள பக்குவம் அடைய முடியும் 


கொஞ்ச நாள் ஆனதால், நமக்கு முன்பு படித்தது சற்று மறந்து இருக்கலாம். சற்று நினைவு படுத்திக் கொள்வோம்.

யோகத்தின் நோக்கம், மனதில் உண்டாகும் சலனங்களை (விருத்தி) நிறுத்தி, மனதை ஒருமுகப் படுத்தி, இறுதியில் சமாதி அடைவது. அது தான் நோக்கம். அதை அடைய 8 படிகளை பதஞ்சலி சொல்கிறார். அஷ்டாங்க யோகம்.

1. இயமம்,
2. நியமம்,
3. ஆசனம்,
4. பிராணாயாமம்,
5. பிரத்தியாகாரம்,
6. தாரணை,
7. தியானம்,
8. சமாதி

முந்தைய ப்ளாகுகளை ஒரு முறை  வாசித்துவிட்டு வாருங்கள்.

'இவற்றின் மூலம் மனம் தாரணை அடைய தகுதி பெறும்".

தாரணை என்றால் என்ன?

மனதில் அடக்குதல் என்று பொருள்.

அது என்ன மனதில் அடக்குதல்?

நம் மனதில் எதை வைத்தாலும் ஒரு நிமிடம் கூட அங்கு இருக்காது. முயன்று பாருங்கள். ஏதாவது ஒன்றை. எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்கள்   விருப்பமானவர், உங்கள் விருப்பமான கடவுள், சினிமா நடிகர், நடிகை, உறவினர், உணவு, நிகழ்ச்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.  கண்ணை மூடி, அதை மட்டும் நினையுங்கள் பார்ப்போம். ஒரு நிமிடம் கூட   அது உங்கள் மனதில் நிற்காது. அதில் இருந்து மற்றொன்று என்று தாவிக் கொண்டே இருக்கும்.

ஆசை ஆசையாக வாங்கிய புடவை, ஒரு முறை உடுத்திய பின், மனம் அதில் ஒன்றுவது இல்லை.  அடுத்ததை விரும்புகிறது.

கனவு கண்டு, செங்கல் செங்கலாக கட்டிய வீடு...சிறிது காலத்தில் சலித்து விடுகிறது.

மனம் எதையும் பற்றி நிற்பது இல்லை. ஓட்டை குடத்தைப் போல ஒழுகிக் கொண்டே இருக்கிறது.  என்ன போட்டாலும், காணாமல் போய் விடுகிறது.

இதுதான் மனச் சலனம். இதை நிறுத்த வேண்டும்.

உண்மையை அறிய வேண்டும் என்றால், மனம் ஒன்றை பற்றி நிற்க வேண்டும். தாரணை என்றால் உள்வாங்கிக் கொள்ளுதல். உள்ளே நிறுத்துதல்.  ஒன்றை மட்டும் உள்ளே வைத்து இருத்தல் என்று பொருள்.

மனம் ஒன்றை மட்டும் பற்றி நின்றால், அது பற்றிய தெளிவு பிறக்கும்.

"மனதில் உறுதி வேண்டும் " என்பான் பாரதி. ஒன்றைப் பற்றினால் , அதில் இலயிக்க வேண்டும்.

அது வருவதற்கு, அதற்கு முன்னால் சொன்ன படிகளை தாண்டி வர வேண்டும்.

மனதுக்குள் ஒன்றை மட்டும் நிறுத்தி வைத்தால், என்ன கிடைக்கும்?

அடுத்த சூத்திரத்தில் பார்ப்போம்.


https://yogasutrasimplified.blogspot.com/2020/01/253.html

No comments:

Post a Comment