Sunday, January 19, 2020

யோக சூத்திரம் - 2.55 - புலன் ஆளுமை

யோக சூத்திரம் - 2.55 - புலன் ஆளுமை 


tatah parama vashyata indriyanam

tatah = அவ்வாறாக

parama = உயர்ந்த

vashyata = மேலாண்மை, கட்டுப்பாடு

indriyanam = புலன்கள்


அவ்வாறு செய்தால் புலன்களை நம் கட்டுக்குள் கொண்டு வர முடியும். 

அவ்வாறு என்றால் எவ்வாறு?

முந்திய சூத்திரத்தில் கூறியவாறு, புலன்களை வெளி உலக தொடர்பில் இருந்து துண்டித்தால் அவை உள் நோக்கி திரும்பும்.

நாம், நம்மை அறிந்து கொள்வதில்லை. நம்மை விட்டு விட்டு உலகில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்ள முயல்கிறோம்.

மேலை நாட்டு அறிவியல் என்பது வெளி நோக்கி செல்கிறது ; நமது ஆன்மிகம் என்பது உள் நோக்கி செல்கிறது என்று சொல்லுவார்கள்.

அவர்கள், நிலா, செவ்வாய் கிரகம், கடலின் ஆழத்தில் என்ன இருக்கிறது, எரிமலைக்குள் என்ன இருக்கிறது,  என்று வெளியே தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகமோ, ஆத்மா, புத்தி, மனம், சித்தம், என்று உள் நோக்கி  சென்று கொண்டு இருக்கிறது.

ஒரு கால கட்டத்தில், நாம் ஆன்மீக தேடலை விட்டு விட்டு அறிவியல் பால் செல்லத் தொடங்கிவிட்டோம்.

பள்ளிகளில், கல்லூரிகளில் யோக சூத்திரம் பற்றி எங்கே சொல்கிறார்கள். சில தலைமுறைகள்  இப்படி ஒன்று இருக்கிறது என்று தெரியாமலே வளர்ந்து கொண்டு இருக்கிறது.

நாளடைவில் இவை மறைந்து போக வாய்ப்பு இருக்கிறது.

புலன்களை உள்ளே திருப்பி, அவற்றை நம் கட்டுக்குள் எதற்காக கொண்டு வர வேண்டும்?

அப்படி கொண்டு வந்தால் நமக்கு என்ன இலாபம்?

இதுவரை சொன்னது ஒரு விதத்தில் நம்மை தயார் பண்ணுவதற்காக.

இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம் என்பவை நம்மை தயார் செய்யும் படிகள்.

இவற்றின் பலன்களை, யோகத்தின் மகிமையை, அதன் பலனை இனி வரும் இரண்டு  அத்தியாயங்களில் சொல்லப் போகிறார்.

விடாமல் வந்து விடுங்கள்.

கிடைக்கிறதோ, இல்லையோ...என்ன என்றாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

யாருக்குத் தெரியும்...ஒரு வேளை உங்களுக்கு கிடைக்கக் கூட செய்யலாம்.

நாளை சந்திப்போமா?

https://yogasutrasimplified.blogspot.com/2020/01/255.html

No comments:

Post a Comment