Thursday, January 16, 2020

யோக சூத்திரம் - 1.1 - இப்போது யோக பயிற்சி

யோக சூத்திரம் - 1.1 - இப்போது யோக பயிற்சி 



अथ योगानुशासनम् ॥१॥

atha yoga-anuśāsanam ॥1॥

atha = இப்போது

yoga =  யோக

anuśāsanam =  பயிற்சி, ஒழுங்கு, முறை

"இப்போது யோக பயிற்சி "

பதஞ்சலியின் யோக சூத்திரத்தின் முதல் சூத்திரம் இது.

யோக சூத்திரங்களை படிப்பதற்கு முன், நாம் சிலவற்றை தெளிவு செய்து கொள்ள வேண்டும்.

இப்போதெல்லாம், யோகா என்றால் ஏதோ உடற் பயிற்சி என்று ஆகி விட்டது. ஆசனம், மூச்சு பயிற்சி இதுதான் யோகா என்று மக்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏதேதோ பேரில் யோகா நிலையங்கள் இருக்கின்றன.

ஆசனம், பிரணாயாமம் என்பது யோகாவின் ஒரு கூறு. அதுவே யோகா இல்லை.

யோகா என்பது மனம் சம்பந்தப் பட்டது. மூளை சம்பந்தப் பட்டது.

யோகா பற்றிய உங்கள் அபிப்பிராயம் எதுவாக இருந்தாலும் அதை முற்றிலுமாக  தூக்கி எறிந்து விடுங்கள். நீங்கள் நினைக்கும் எதுவுமே யோகா இல்லை.  பதஞ்சலியின் யோகாவை படித்து முடிக்கும் போது அது உங்களுக்குத் தெரிய வரும். இப்போதைக்கு,  யோகா என்றால் உடலை வளைப்பது,  ஆசனம் போடுவது, மூச்சை பழக்குவது என்பது இல்லை என்று மட்டும்  வைத்துக் கொள்ளுங்கள். டிவியில் வருவதை பார்த்து விட்டு, இதுதான் யோகா என்று  நினைக்கக் கூடாது.

பதஞ்சலியின் யோக சூத்திரம் கடல் போன்றது. மிக மிக அருமையான நூல். 

இந்த முன்னுரையோடு, யோகாவிற்குள் நுழைவோம்.

பெரும்பாலான மனிதர்கள் நிகழ்காலத்தில் வாழ்வது இல்லை. நிகழ் காலத்தில் இருக்கிறார்கள். ஆனால், இறந்த காலத்தைப் பற்றி கவலைப் படுகிறார்கள், அல்லது எதிர் காலத்தை பற்றி கனவு காண்கிறார்கள். நிகழ் காலத்தில் இருப்பதே இல்லை.

மிக மிக சிறந்த அறிவாளிகளுக்கு மட்டும் தான் நிகழ் காலம் என்று ஒன்று உண்டு. மற்றவர்கள் எல்லோரும், இறந்த காலத்திலோ அல்லது எதிர் காலத்திலோதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாளை என்ன ஆகும், நாளை என்ன சமைக்கலாம், நாளை அலுவலகத்தில் என்ன வேலை இருக்கிறது, அடுத்த மாதம் என்ன செய்ய வேண்டும், போட்ட பணம் கைக்கு  வருமா, இந்த வருடம் பதவி உயர்வு கிடைக்குமா, சம்பளம் உயருமா,  பெண்ணுக்கு திருமணம் ஆகுமா, பையனுக்கு வேலை கிடைக்குமா, பிள்ளை பிறக்குமா என்று எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து,  அந்த  ஏக்கத்தில், பயத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

வாழ்வது என்பதே கிடையாது. வாழப் போவதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு  இருக்கிறார்கள்.

எனவே தான், பதஞ்சலி சொல்கிறார்

"இப்போது"

இப்போது என்றால், இறந்த காலத்தையும் விட்டு விட வேண்டும். எதிர் காலத்தையும்  விட்டு விட வேண்டும். இந்த நொடியில் இருக்க வேண்டும்.

முயன்று பாருங்கள்.

இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் பற்றி நினைக்காமல் ஒரு வினாடி  இருக்க முடிகிறதா என்று. மிக மிக கடினம்.

யோகா பயில வேண்டும் என்றால், முதலில் நிகழ்காலத்துக்கு வர வேண்டும். மனம்  அந்தக் காலத்துக்கும், எதிர் காலத்துக்கும் ஓடக் கூடாது.

நிகழ் காலத்தில் நிற்க வேண்டும். நிறுத்திப் பாருங்கள் தெரியும் அது எவ்வளவு கடினமான  செயல் என்று.

முதல் சூத்திரத்தில், முதல் வார்த்தையில் யோகா பிரச்சைனையின் ஆணி வேரைப் பிடித்து விடுகிறது.

அனுஷாசனம் என்றால் பயிற்சி (discipline). பயிற்சி என்றால் தொடர்ந்து செய்வது. ஏதோ கொஞ்ச காலம் செய்தோம். அப்புறம் விட்டு விடலாம் என்பதல்ல பயிற்சி. செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஏன் என்றால், யோகா என்பது மிக மிக ஆழமானது. போகப் போக போய் கொண்டே இருக்கும்.


யோகா பற்றி அறிந்து கொள்ள, அதை முயற்சி செய்ய தயாராகி விட்டீர்களா?

https://yogasutrasimplified.blogspot.com/2020/01/11.html

No comments:

Post a Comment