யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 3
मैत्री करुणा मुदितोपेक्षाणांसुखदुःख पुण्यापुण्यविषयाणां भावनातः चित्तप्रसादनम् ॥३३॥
maitrī karuṇā mudito-pekṣāṇāṁ-sukha-duḥkha puṇya-apuṇya-viṣayāṇāṁ bhāvanātaḥ citta-prasādanam ॥33॥
மனம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும் ?
மனம் பல விதங்களில் அலைக் கழிக்கப்படுகிறது. துக்கம், சோகம், பயம், படபடப்பு, விரக்தி, எரிச்சல், கோபம், காமம், பொறாமை, துவேஷம் என்று பலப் பல விதங்களில் மனம் அல்லாடுகிறது.
உடலை நோய் பிடிப்பதைப் போல, மனதை இவை பிடித்து ஆட்டுகின்றன.
இதனால் மனம் ஓயாத சஞ்சலத்தில் இருக்கிறது.
இதில் இருந்து எப்படி விடுபடுவது.
மிக நீண்ட பட்டியலைத் தருகிறார். 14 வழிகள் சொல்கிறார். அவை என்னனென்ன என்று பார்ப்போம்.
இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு மேலானவைகளோ உங்களுக்குத் தேவைப் படலாம்.
அவை என்னென்ன ?
maitrī = அன்பு, நட்பு , அணுக்கத் தன்மை
karuṇā = கருணை
mudito = மகிழ்ச்சி, சந்தோஷமாக இருத்தல்
upekṣana = நடுவு நிலைமை
sukha = சுகம், ஆரோக்கியம்
duḥkha = துக்கம்
puṇya = புண்ணியம்
apuṇya = பாவம்
viṣayānam = சூழ்நிலை
bhāvanātaḥ = பயிற்சி, வளர்த்தல், பழகுதல்
citta = சித்தம்
prasādanam = தெளிவு, அமைதி, இணைந்திருத்தல்
முதல் வழி, நம்மை விட மகிழ்ச்சியாக உள்ளவர்களிடம் மகிழ்வோடு பழகுவது. அதாவது, நம்மை விட உயர்தவர்கள் மேல் பொறாமை கொள்ளாமல் இருத்தல்.
இரண்டாவது, நம்மை விட தாழ்ந்தவர்களிடம் கருணையோடு இருத்தல். இரக்கம் இல்லை. கருணை. கருனை என்பது அன்பு சார்ந்தது.
இதுவரை பார்த்தோம்.
அடுத்தது மூன்றாவது.
நல்லொழுக்கம் கொண்டவரை காணும்போது மகிழ்ச்சி.
நல்லொழுக்கம் என்பதில் நல்ல அறிவு, ஒழுக்கம், நேர்மை போன்ற உயர்ந்த குணங்கள் உள்ளவரைக் காணும்போது மகிழ்ச்சி அடைய வேண்டும்.
இது என்ன பெரிய காரியமா என்று தோன்றும்.
இது எளிதான காரியம் அல்ல. நம்மை விட அறிவில், பண்பில் , ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களை கண்டால் நமக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வருவது இயற்கை. நம்மால் அப்படி இருக்க முடியவில்லையே. அவன் நம்மை விட அறிவாளியாக இருக்கிறானே. அவள் நம்மை விட அழகாக இருக்கிறாளே. அவர் நம்மை விட அன்போடும் பண்போடும் இருக்கிறாரே என்றெல்லாம் மனதில் தோன்றும்.
அப்படி தோன்றியவுடன் என்ன செய்வோம் ?
அவர்கள் சொல்வதை, செய்வதை விமர்சிக்கத் தொடங்குவோம். அதில் குறை காணத் தலைப் படுவோம். அது சரியல்ல என்று மறுத்துச் சொல்வோம்.
இவை எல்லாம் முடியாவிட்டால் கூட, "ஹா...அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. எதார்த்தமாக இல்லை. அவருக்கு என்ன தெரியும் நடை முறை வாழ்க்கையைப் பற்றி ..இதெல்லாம் கேட்க நல்லா இருக்கும்...அவ்வளவுதான் "
என்று உயர்ந்த கருத்துகளை தூக்கி எறிந்து விடுவோம். கதைக்கு உதவாது . ஏட்டுச் சுரைக்காய் என்று அதன் பெருமையை குறைத்து , சிறுமை படுத்துவோம்.
அது எவ்வளவு பெரிய ஞான நூலாக இருக்கட்டும். சொன்னவர் எவ்வளவு பெரிய ஞானியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். துச்சமாக தூர தூக்கி எறிந்து விடுவோம்.
நடை முறைக்கு ஒவ்வாத ஒன்றை அவர்கள் சொல்வார்களா என்றெல்லாம் யோசிப்பது கிடையாது. ஏதோ நமக்குத்தான் எல்லாம் தெரிந்த மாதிரி, 'அதெல்லாம் சரிப்பட்டு வராது " என்று ஒரு வரியில் அந்த ஞானங்களை மூட்டை கட்டி வைத்து விடுவோம்.
காரணம் என்ன ?
நம்மை விட அவன் பெரிய ஆள் ஒன்றும் இல்லை. அவனுக்கு மட்டும் இது எப்படி தெரியவந்தது ? நான் என்ன முட்டாளா ? இதெல்லாம் சரிப்பட்டு வராது, எனவே தான் நான் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. இல்லையென்றால் எனக்குத் தெரியாதா
என்பது நமது சிந்தனை.
இப்படி ஒரு சிந்தனை இருந்தால், எத்தனை ஆயிரம் நல்ல விஷயங்களை கேட்டாலும், படித்தாலும் ஒரு முன்னேற்றமும் வராது.
நல்லவற்றை , உயர்ந்தவற்றை படிக்கும்போது, கேட்க்கும் போது மனது மகிழ வேண்டும். அடடா, என்ன அருமையான விஷயம். இத்தனை நாள் இதை அறியாமல் போய் விட்டோமே , உடனடியாக இதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தோன்ற வேண்டும்.
அப்படி தோன்றி செய்யத் தொடங்கினால் , மனம் உயரும், வாழ்வு உயரும். மனதில் திருப்தியும் அமைதியும் பிறக்கும்.
இது மூன்றாவது வழி.
என்ன சரிதானே ?
http://yogasutrasimplified.blogspot.in/2017/08/133-3.html
No comments:
Post a Comment