Thursday, August 24, 2017

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 2

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 2 


मैत्री करुणा मुदितोपेक्षाणांसुखदुःख पुण्यापुण्यविषयाणां भावनातः चित्तप्रसादनम् ॥३३॥

maitrī karuṇā mudito-pekṣāṇāṁ-sukha-duḥkha puṇya-apuṇya-viṣayāṇāṁ bhāvanātaḥ citta-prasādanam ॥33॥

மனம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும் ?

மனம் பல விதங்களில் அலைக் கழிக்கப்படுகிறது. துக்கம், சோகம், பயம், படபடப்பு,  விரக்தி, எரிச்சல், கோபம், காமம், பொறாமை, துவேஷம் என்று பலப் பல விதங்களில் மனம் அல்லாடுகிறது.

உடலை நோய் பிடிப்பதைப் போல, மனதை இவை பிடித்து ஆட்டுகின்றன.

இதனால் மனம் ஓயாத சஞ்சலத்தில் இருக்கிறது.

இதில் இருந்து எப்படி விடுபடுவது.

மிக நீண்ட பட்டியலைத் தருகிறார். 14 வழிகள் சொல்கிறார். அவை என்னனென்ன என்று பார்ப்போம்.

இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு மேலானவைகளோ உங்களுக்குத் தேவைப் படலாம்.

அவை என்னென்ன ?


maitrī =  அன்பு, நட்பு , அணுக்கத் தன்மை

karuṇā = கருணை

mudito = மகிழ்ச்சி, சந்தோஷமாக இருத்தல்

upekṣana = நடுவு நிலைமை

sukha = சுகம், ஆரோக்கியம்

duḥkha = துக்கம்

puṇya = புண்ணியம்

apuṇya = பாவம்

viṣayānam = சூழ்நிலை

bhāvanātaḥ = பயிற்சி, வளர்த்தல், பழகுதல்

citta = சித்தம்

prasādanam = தெளிவு, அமைதி, இணைந்திருத்தல்


நம்மை விட மகிழ்ச்சியாக உள்ளவர்களிடம் அன்பாக பழகுவது ஒன்று. அதைப் பற்றி முந்தைய பிளாகில் சிந்தித்தோம்.


அடுத்தது, நம்மை விட கீழே உள்ளவர்களிடம் கருணையோடு இருத்தல்.

நம்மில் பலருக்கு ஏழைகளை, துன்ப படுபவர்களை கண்டால் இரக்கம் வரும். பரிதாப  உணர்ச்சி வரும்.  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இரக்கம் மற்றும் பரிதாப  உணர்ச்சி என்பது , நாம் அவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற  எண்ணத்தில் இருந்து வருவது. அப்படிப்பட்ட எண்ணம் வந்தால் அது மன அமைதியை குலைக்கும்.

கருணை என்பது அன்பில் இருந்து வருவது. நாம் அவர்களை விட உயர்ந்தவர்கள் என்று  நினைப்பதால் அல்ல, அவர்களும் நம்மை போலத் தானே என்ற எண்ணத்தில் இருந்து வருவது.

அடுத்தது மிக மிக முக்கியமான ஒன்று, தீமைகளை கண்டால் விருப்பு வெறுப்பற்று இருங்கள்.

இது என்ன புது கதையாக இருக்கிறது. தீமையை கண்டால் வெறுக்க வேண்டாமா. ஒதுக்க வேண்டாமா. கண்டிக்க வேண்டாமா.

ஏன் பதஞ்சலி தீமைகளை கண்டால் விருப்பு வெறுப்பு அற்று இருக்கச் சொல்கிறார்.

ஏன் நல்லதைக் கண்டால் விருப்பு வெறுப்பு அற்று இருக்கச்  சொல்லவில்லை.

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று.

ஒரு தீமையை நீங்கள் வெறுக்கிறீர்கள் என்றால் அந்த தீமையை பற்றி நிறைய  அறிந்து கொள்கிறீர்கள்.

ஒரு பெண் கற்பழிக்க பட்டால் என்று கேட்டால், யார் அந்தப் பெண், எத்தனை வயது, யார் செய்தார்கள், எப்போது நடந்தது என்றெல்லாம் அறிய முற்படுகிறோம். அப்போது, நாம் கேட்காத பல விஷயங்களும் நமக்கு கிடைக்கும். இப்படி ஒவ்வொரு தீமையையும் ஆழ்ந்து ஆராயும் போது நம்மை அறியாமலேயே அதன் மேல் ஒரு ஆர்வம், ஒரு ருசி வந்து விடும். இன்னும் சொல்லப் போனால்,  நாமும் செய்து பார்த்தால் என்ன என்று ஒரு குறுகுறுப்பு தோன்றும்.

தீயவற்றின் மேல் மனம் எளிதாகப் பற்றிக் கொள்ளும். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள நாள்  ஆகும். தீய பழக்கங்கள் எளிதில் வந்து விடும்.

பெரிய புராணத்தில் ஒரு இடம்.  மெய் பொருள் நாயனார் என்று ஒருவர் இருந்தார்.  பெரிய சிவனடியார். ஒரு நாட்டுக்கு அரசரும் கூட.

சிவனடியார்களை , சிவனாகவே நினைத்து வழிபடும் பக்தி கொண்டவர்.

அவருக்கு ஒரு எதிரி இருந்தான். யாருக்குத்தான் எதிரி இல்லை.

இராமனுக்கு ஒரு இராவணன் இருந்தான். காந்திக்கு ஒரு கோட்ஸே இருந்தான். அது போல, இவருக்கு தத்தன் என்று ஒரு எதிரி இருந்தான். இவரிடம் பல முறை போரிட்டு தோற்றவன்.

போரில் இவரை வெல்ல முடியாது என்று முடிவு செய்து,  எப்படியாவது வஞ்சனையால் இவரை வெல்ல நினைத்தான்.

ஒரு சிவனடியார் போல வேடம் தரித்துக் கொண்டு, மெய் பொருள் நாயனாரை காண வந்தான்.  "எனக்கு ஒரு அரிய ஆகம நூல் ஒன்று கிடைத்து உள்ளது. அதில் உள்ளதை உனக்கு உபதேசம் செய்யலாம் என்று வந்தேன் " என்றான்.

நாயனாரும், "என் பாக்கியம் " என்று வாய் புதைத்து, கண் மூடி கேட்க அமர்ந்தார்.

அந்த சமயத்தில், தான் கொண்டு வந்திருந்த ஓலை சுவடிக்குள் இருந்த கத்தியை எடுத்து  சதக் சதக் என்று குத்தினான் என்று சொல்ல வேண்டும்.

தெய்வப் புலவர் சேக்கிழார் அப்படிச் சொல்ல வில்லை.

"தான் முன் நினைத்த அப் பரிசே செய்ய " என்று சொல்லி , அதைப் பற்றி மேலே விரிக்காமல் விடுகிறார்.

ஏன் ?

தீமையை விவரிக்கக் கூடாது. விவரித்தால் , படிப்பவர்களுக்கு அதில் ஒரு ருசி வந்து விடும்.

ஆனால் இப்போது மர்ம நாவல், திகில் நாவல், க்ரைம் நாவல் என்றே எழுதுகிறார்கள். தவறு. தீமைகளை ஆழ்ந்து மனம் கொடுத்து அறியக் கூடாது.

கைத்தலத் திருந்த வஞ்சக் கவளிகை மடிமேல்
                                  வைத்துப்

  புத்தக மவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும்
                                   போதிற்
பத்திரம் வாங்கித் தான்முன் னினைந்தவப் பரிசே
                                    செய்ய
“மெய்த்தவ வேட மேமெய்ப் பொரு“ளெனத்
                         தொழுது வென்றார்.


தவறு செய்பவர்கள் செய்து விட்டுப் போகட்டும். அரசாங்கம் இருக்கிறது . படை இருக்கிறது. காவல் துறை இருக்கிறது. நாம் ஏன் அந்த குப்பைகளை நம் மூளைக்குள் திணிக்க வேண்டும்.

தீமைகளை கண்டால் விட்டு விலகிப் போய் விட வேண்டும்.  அதை போற்றவும் வேண்டாம். தூற்றவும் வேண்டாம்.

தூற்றப் போகிறேன் என்று அதை பற்றி மேலும் மேலும் அறிந்து கொண்டால், மனம் சஞ்சலப் படும்.

மன அமைதி வேண்டுமா ? தீமைகளைப் பற்றி கண்டு கொள்ளாதீர்கள்.

மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/08/133-2.html

No comments:

Post a Comment