யோக சூத்திரம் - 1.29 - தன்னை அறியவும், தடைகளை நீக்கவும்
ततः प्रत्यक्चेतनाधिगमोऽप्यन्तरायाभवश्च ॥२९॥
tataḥ pratyak-cetana-adhigamo-'py-antarāya-abhavaś-ca ॥29॥
tataḥ = இதன் மூலம்
pratyak = ஒருவன், தான், நான் , உள்ளே
cetanā = உள்ளுணர்வு
adhi gamḥ = அறியப்படுதல், அறிதல், அடைதல்
api = மேலும்
antarāyaḥ = தடைகளை
abhāvaḥ = நீக்கவும்
ca = மேலும்
பிரணவத்தை இடை விடாமல் , அர்த்தம் அறிந்து, உணர்வோடு ஜெபிக்கும் போது , இரண்டு விஷயங்கள் நிகழ்கின்றன. அவை, தன்னைத்தான் அறிதல். அந்த அறிதலுக்கு தடையாய் உள்ளவற்றை நீக்குதல்.
ப்ரணவம் என்பது ஆக்கும் சக்தி என்று பார்த்தோம். அந்த சக்தி எல்லோருக்குள்ளும் இருக்கிறது என்றும் பார்த்தோம். அந்த சக்தியின் வெளிப்பாடே இந்த உலகம் என்று பார்த்தோம்.
இந்த உலகம் எவ்வாறு உருவாகிறது ?
வெளியில் உள்ளவை , மற்றும் நாம் அவற்றை அறிவது இந்த இரண்டும் சேர்ந்து நிகழும் போதுதான் இந்த உலகம் உருவாகிறது.
எப்படி என்று பார்ப்போம்.
இந்த உலகம் நாம் எவ்வாறு பார்த்து, கேட்டு அறிந்து இருக்கிறோமோ அப்படித்தானே இருக்கிறது.
இல்லை பச்சையாக இருக்கிறது. மல்லிகை வெண்மையாக இருக்கிறது. முள் குத்துகிறது. நெருப்பு சுடுகிறது. புல்லாங்குழல் கேட்க இனிமையாக இருக்கிறது.
இதுதானே இயற்கை. இப்படித்தானே உலகம் இருக்கிறது.
அது உண்மையா ? உலகம் என்பது அவ்வளவுதானா ?
ஒருவன் பிறவியில் இருந்தே கண் பார்வை இல்லாமல் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனைப் பொறுத்தவரை, நிறம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. எவ்வளவு முயற்சி செய்தாலும் , நிறம் என்றால் என்ன என்று அவனுக்கு நம்மால் விளக்க முடியாது. அவனது உலகில் நிறம் கிடையாது.
சரி. அவனுக்கு இல்லாவிட்டால் என்ன ? நமக்குத் தெரிகிறதே. அவனுக்கு நிறம் தெரியாவிட்டால், நிறம் என்ற ஒன்றே இல்லை என்று ஆகி விடுமா ?
இல்லை. நிறம் ஒன்று இருக்கிறது.
நமக்கு ஐந்து புலன்கள் இருக்கிறது. அதில் ஒன்றின் மூலம் நிறம் என்றால் என்ன என்று அறிகிறோம்.
அவனுக்கு கண் / பார்வை என்ற ஒரு புலன் இல்லை. எனவே அவனைப் பொறுத்தவரை நிறம் என்பது இல்லை.
நமக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன.
ஏன் ஐந்து மட்டும் இருக்கிறது ? ஆறாவது, ஏழாவது புலன்கள் இருந்தால் இந்த உலகை இன்னும் நாம் அறிந்து இருப்போம் அல்லவா ? நம்மிடம் இல்லை. நம்மால் அந்த ஆறாவது மற்றும் ஏழாவது புலன்கள் என்ன என்று கூட சிந்திக்க முடியாது. ஒருவேளை இருந்தால், இந்த உலகை இன்னும் வேறு சில கோணங்களில் பார்த்து இருப்போம் அல்லவா.
நாம் காணும் உலகம் நம்மை பொறுத்த வரை இவ்வளவுதான். அதற்கு மேலும் அதில் ஏதாவது இருக்கலாம். நமக்குத் தெரியாது.
கண் இல்லாதவனுக்கு நிறம் தெரியாதது போல, இல்லாத புலன்கள் எதை அறிந்திருக்கும் என்று நமக்குத் தெரியாது.
நம்மிடம் ஐந்து புலன்களுக்கு மேல் இல்லை என்பதால், மொத்தமே ஐந்துதான் என்று நாம் முடிவு செய்து விட முடியாது.
கண் இல்லாதவனைப் பொறுத்தவரை பார்வை என்ற ஒன்றே இல்லை. பார்ப்பது என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியாது. அது போல , நமக்கு இருக்கும் புலன்களைத் தாண்டி ஒரு உலகம் இருக்கலாம் அல்லவா.
அவை நமக்குத் தெரியாது.
இந்த உலகம் இவ்வளவுதான் தான் என்று நம் புலன்கள் சொல்கின்றன. புலன்கள் இல்லை என்றால் உலகம் இல்லை. கண் இல்லாதவனுக்கு நிறம் இல்லாதது மாதிரி.
நாம் இந்த உலகை நமது புலன்கள் மற்றும் அறிவின் மூலம் உண்டாக்குகிறோம்.
விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்;
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!
(தேவாரம்)
இந்த உலகம் தானே இருப்பது அல்ல. இது "பண்ணிய உலகம்" உருவாக்கப்பட்ட உலகம்.
பிரணவத்தை இடைவிடாமல் ஓதுவதுன் மூலம் உங்களை நீங்கள் அறிவீர்கள்.
அப்படி அடைவதற்கு சில விஷயங்கள் தடையாக இருக்கின்றன. அந்த தடைகளை நீக்க இந்த ஜபம் உதவும்.
அது என்ன தடை ?
http://yogasutrasimplified.blogspot.in/2017/08/129.html
No comments:
Post a Comment