Saturday, August 5, 2017

யோக சூத்திரம் - 1.28 - ஜபம்

யோக சூத்திரம் - 1.28 - ஜபம் 


तज्जपः तदर्थभावनम् ॥२८॥

taj-japaḥ tad-artha-bhāvanam ॥28॥

taj = அதை

japaḥ = ஜபம்

tad-= அதன்

artha = அர்த்தத்தை விளங்கி

bhāvanam = உணர்வு பூர்வமாக

ஓம் என்ற பிரணவ மந்திரம் எவ்வாறு இயல்பான ஒரு ஒலியாகவும் , அதே சமயம் பிறப்பு, நிலைப்பு மற்றும் அழிதல் என்ற முத்தொழிலையும் நினைவு கூர்வதாகவும் உள்ளது என்றும் பார்த்தோம்.

நமக்குள் இருக்கும் அளவற்ற படைப்பாற்றலின் பெயர் ஓம்.

எப்படி ஒவ்வொரு செயலுக்கும், ஒரு வார்த்தை இருக்கிறதோ அது போல நமக்குள் இருக்கும் சக்தியின் பெயர் ஓம்.

சரி, நமக்குள் ஒரு சக்தி இருக்கிறது என்று புரிகிறது.

அந்த சக்திக்கு ஒரு ஒலி வடிவம் , அது ஓம் என்றும் புரிகிறது.


அதனால் என்ன ? சக்திக்கு ஒரு பெயர் வைத்து இருக்கிறார்கள். அவ்வளவுதானே. இதனால் நமக்கு என்ன பயன்.

நமது நோக்கம் அந்த சக்தியை வெளியே எப்படி கொண்டு வருவது என்பதுதான்.

எவ்வளவோ பெரிய பெரிய அறிஞர்கள், மஹான்கள் எல்லாம் தோன்றி இருக்கிறார்கள். அவர்கள் மிகப் பெரிய உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். எத்தனையோ கண்டு பிடிப்புகள். சாதனங்கள். அத்தனையும் அந்த படைப்பாற்றலின் வெளிப்பாடு.

அவர்களுக்குள் இருக்கும் அந்த படைப்பாற்றல் தான் நமக்குள்ளும் இருக்கிறது.

அவர்கள் அதை வெளியே கொண்டு வந்தார்கள். நமக்குள் அது உறங்கிக் கிடக்கிறது.

அதை எழுப்பி வெளியே கொண்டு வருவதுதான் திருப்பள்ளி எழுச்சி.

எப்படி கொண்டு வருவது ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

சித்த விருத்தி நிரோதம் ....

சித்தத்தில் ஏற்படும் சலனங்களை நிறுத்துவதுதான்  உண்மையை கண்டு அறிய  வழி என்று பார்த்தோம்.

எண்ண சிதறல்களை எப்படி நிறுத்துவது ?

எண்ண அலைகள் எப்படி வருகின்றன என்று முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

நமக்கு ஏற்படும் அனுபவங்கள் நமக்குள் ஒரு பதிவை உண்டாக்குகின்றன. நாம் பார்ப்பது, கேட்பது, நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள், நமக்கு நிகழும் நிகழ்வுகள் இவை அனைத்தும் நமக்குள் ஒரு பதிவை உண்டாக்குகின்றன.

கொஞ்சம் காலம் கழித்து , அந்த பதிவு சம்பந்தமான ஒரு நிகழ்வு ஏற்படும் போது , பழைய பதிவில் இருந்து எண்ண அலைகள் தோற்றுவிக்கப் படுகின்றன.

ஒருவன் நமக்கு நல்லது செய்கிறான். அது ஒரு பதிவாக நமக்குள் இருக்கிறது. அடுத்த முறை அவனை பார்க்கும் போது , "இவன் நல்லவன். நமக்கு நல்லது செய்தவன்..." என்ற எண்ணங்கள் தோன்றுகின்றன.

இப்படி ஒன்று இரண்டு அல்ல. ஆயிரக் கணக்கில் நமக்குள் பதிவுகள் இருக்கின்றன. நமக்கே தெரியாது எவ்வளவு என்று.

இதைத்தான் "ஸம்ஸ்காரம்" அல்லது "வாசனை" என்கிறார்கள்.

நம்மை சுற்றி நிகழ்பவை எல்லாம் இந்த ஸம்ஸ்காரத்தில் மோதி புது புது எண்ண அலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

அப்படியானால், இந்த எண்ண அலைகளின் ஓட்டத்தை நிறுத்த வேண்டும் என்றால் ஒன்று சம்ஸ்காரம் என்ற பதிவுகள் இருக்கக் கூடாது அல்லது வெளியில் இருந்து வரும் புலன் தரும் செய்திகள் இருக்கக் கூடாது அல்லது அந்த  புலன் தரும் செய்திகளை ஸம்ஸ்காரத்தில் மோத விடக் கூடாது என்பது தெளிவாகத் தெரிகிறது அல்லவா ?

அதை எப்படி செய்வது ?

tat japah tat artha bhavanam

அதை (பிரணவ மந்திரத்தை ) இடை விடாமல், அர்த்தம் அறிந்து, உணர்வு பூர்வமாக ஜபம் செய்வதன் மூலம் என்கிறது இந்த சூத்திரம்.

வெறுமனே ஓம் ஓம் என்று முணு முணுப்பதால் ஒரு பயனும் இல்லை. அப்படி செய்வதால் கொஞ்ச நேரத்தில் மனதும் மூளையும் சோர்ந்து போய் தூக்கம் வரும். அதனால் வேறு ஒரு பயனும் இல்லை.

ஓம் என்ற அந்த பிரணவத்தின் அர்த்தத்தை அறிந்து சொல்ல வேண்டும்.

அதை உணர்வு பூர்வமாக சொல்ல வேண்டும்.

அர்த்தம் என்ன - எனக்குள் ஒரு மிகப் பெரிய படைப்பாற்றல் இருக்கிறது. ஈஸ்வர சக்தி.

உணர்வு பூர்வமாக -  அறிவு ஏற்றுக் கொள்ளும். நமக்குள் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியின் ஒலி வடிவம் ஓம் என்பதை அறிவு ஏற்றுக் கொள்ளும். மனம் ஒன்றாது. "சரி, அது ஏதோ இருந்து விட்டுப் போகட்டும்" என்ற அளவில் இருக்கக் கூடாது. அதை உணர்வு பூர்வமாக ஒன்ற வேண்டும்.

"சொல்லிய பாட்டின் பொருள் "உணர்ந்து" சொல்லுவார் ,
செல்வர் சிவபுரம்"

என்பார் மணிவாசகர்.

"உலகெல்லாம் "உணர்ந்து" ஓதற்கரியவன் "

என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

ஓம் என்பதின் பொருள் அறிந்து, உணர்ந்து , ஜபம் செய்தால் அது நிகழும்.

அப்படி இடை விடாமல் ஜபம் செய்வதன் மூலம்,

முதலாவது, வெளியில் இருந்து வரும் புலன் பற்றிய செய்திகள் குறையும். அது எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அனுபவ பதிவு குறையும். (சம்ஸ்காரம் குறையும்).

இரண்டாவது, அப்படியே அனுபவங்கள் நிகழ்ந்தாலும், அது இந்த உடலுக்குத்தான் நிகழுமே தவிர நமக்குள் இருக்கும் அந்த சக்திக்கு நிகழாது.

மூன்றாவது, ஏற்கனவே நமக்குள் இருக்கும் வாசனைகள், அனுபவ பதிவுகள், சம்ஸ்காரம் என்பவை தேய்ந்து தேய்ந்து மறையும்.

அது எப்படி என்றால்,

நீங்கள் உங்கள் பெயருக்குப் பின்னால் நீங்கள் படித்த படிப்பை போட்டுக் கொள்கிறீர்கள் அல்லவா ? BA , MA என்று.

ஏன் அதற்கு முன்னால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்றெல்லாம் போட்டுக் கொள்வதில்லை ?

அதையெல்லாம் தாண்டி வந்து விட்டீர்கள். அவை இனிமேல் தேவை இல்லை. அவற்றினால் ஒரு அர்த்தமும் இல்லை.

MA படித்த ஒருவன், நான் மூன்றாம் வகுப்பு படித்தேன் என்று சொல்வானா ?

அது போல, உங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்கள் இந்த உடல் மற்றும் மனம் சார்ந்தவை. நீங்கள் அவற்றைத் தாண்டி, உங்களுக்குள் இருக்கும் சக்தியோடு உங்களை அடையாளம் காணும் பொழுது பழைய நினைவுகள், பதிவகள் அற்றவையாகப் போகின்றன.

அ , ஆ படிக்க திணறியது இப்போது தேவை இல்லாத ஒன்று. அதை கடந்து எவ்வளவோ தூரம் வந்து விட்டோம். இன்னும் அதையே நினைத்துக் கொண்டு ஏன் இருக்க வேண்டும் ?அது போல, நீங்கள் இந்த உடலும் மனமும் அல்ல. சக்தி சொரூபம். உடலுக்கும் மனதுக்கும் நிகழ்ந்தவை ஒரு பொருட்டு அல்ல.

இதை அடைய வேண்டும் என்றால், பிரணவத்தின் பொருள் தெரிந்து உணர்வு பூர்வமாக ஜெபிக்க வேண்டும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/08/128.html

No comments:

Post a Comment